Bigg Boss 4 Tamil Review Day 14: நாம ஏற்கெனவே கணித்ததுபோல வீட்டைவிட்டு வெளியேறிட்டாங்க ரேகா. ஆனா, ரேகா போனதுக்கு ஃபீல் பண்ணின ஒருத்தர்கூட சனம் இருக்குறாங்களேனு சந்தோஷப்படலையே! அதுலயும் கொஞ்சம் கூட எதிர்பாராத விதமா இருந்தது, பாலா ரேகாவுக்காக அழுதது. சரி வாங்க 'நியூ நார்மல்' எபிசோடுக்குள் போய்விடுவோம்.
'சோஷியல் டிஸ்டன்சிங்' பற்றிய வகுப்போடு நேற்றைய தினம் ஆரம்பமானது. 'Cowboy' காஸ்டியுமில் செம்ம ஸ்டைலிஷாகவே இருந்தார் கமல். குறிப்பாக அவருடைய அந்த 'க்ளவுஸ்' மற்றும் அதற்கு அவர் கொடுத்த விளக்கம், மறுபடியும் அரசியல் 'டச்'. அதிகம் பேசாமல், நேரடியாக 'மாஸ்க் மற்றும் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது டாஸ்க்' ஆரம்பமானது.
இந்த சீசனில் உள்ள அனைவர்க்கும் ஒவ்வொரு 'டாஸ்க்கின்' விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் குழப்பம் இருக்கிறது. நேற்று வந்த அர்ச்சனா பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் பட்டியலிலும், 'அட்வைஸ் கொடுத்தே சாவடிக்குறாரு' என்கிற வெளிப்பாட்டில் ஆரிக்கு மாஸ்க்கும், 'சிட்டிக்கு கோவம் வருது' என சிலரும், 'அவருக்கு கோவம் வரும் ஆனா இங்கே மறைக்கிறார்' என சிலரும் ரியோவுக்கு அதிகப்படியான மாஸ்க்கை கொடுத்தனர் (அப்போ நான் எப்படிதான்டா இருக்கிறது என்ற ரியோ மைண்ட் வாய்ஸ் நமக்கும் கேட்கிறது). வீட்டில் உள்ள யாருக்குமே இன்னும் கேமரா உணர்வு போகவில்லை. எல்லோர் முகத்திலும் மாஸ்க் இருக்கிறது. ஆனால், அதற்காக அவர்கள் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வீட்டிலேயே சோம், ரமேஷ் மட்டும்தான் இயல்பாக இருப்பதுபோல் தெரிகிறது. வேண்டாம் பிக் பாஸ்.. இனிமேல் இந்த மாதிரி அவங்களுக்கு புரியாத டாஸ்க்லாம் கொடுக்காதீங்க.
ஆரி மற்றும் ரியோ இருவரும் அவர்களுக்குக் கொடுத்த அதிகப்படியான மாஸ்க்கை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஆரி கூறிய பதில்கள்தான் ஃபேக்ட். ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட காரணங்கள் இல்லாமல், முதலில் வரும் நபர் என்ன சொல்கிறாரோ அதையே அடுத்து வருபவர்களும் தொடர்ந்து சொல்கிறார்கள். சொந்த கருத்துக்களைத் தைரியமாக முன்வைக்கிறவர்கள் ஒரு சிலரே. யோசிங்கப்பா யோசிங்க. ஆட்டத்துக்குள்ள வாங்க.
முன்பிலிருந்தே ரமேஷ் தன் மனதில் படுவதை வெளிப்படையாகச் சொல்லிகொண்டுவருகிறார். அதேபோலத்தான், 'இந்த வீட்டோட தலைவர்தான, என்னவோ நாட்டோட தலைவர் ரேஞ்சுக்கு ஓவரா பண்ணிட்டு இருக்கார்' என வீட்டின் தலைவருக்கான ஃபீட்பேக்கில், தன் பெயரைக் குறிப்பிட்டு எதிர்மறை விமர்சனங்களைத் தைரியமாக முன்வைத்திருந்தார். ரமேஷ்ஜி... பின்னுறீங்க போங்கோ!
என்னடா அர்ச்சனா வந்ததிலிருந்து ஆளே காணாமப்போயிட்டாருனு நாமளும் தனிப்படை வைத்துத் தேடிக்கொண்டிருந்தோம். ஆங்... சுரேஷேதான். வலி, அவமானங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைனு ஒதுங்கிட்டேன்னு சொல்லி, 'சுரேஷ் ஆர்மியை' கவிழ்த்துட்டாரே. ஒருவேளை அர்ச்சனாவின் விருது ஒர்க் அவுட் ஆகுதோ!
போன வாரத்தின் ஹயிலைட்ட்டாக இருந்த கேபி, சுரேஷ் காம்போ பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி! இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வழி விடுவதுதான் சிறந்த தலைமை என்பதைப்பற்றி கமலும் குறிப்பிட்டிருந்தார். ப்ப்பா... இப்போதுதான் சுரேஷ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந்தது. ப்ளீஸ் சுரேஷ்ஜி... உங்களோட கொளுத்தி போடுற டாஸ்க்கை விட்டுராதீங்க. கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்.
கேபி மற்றும் சம்யுக்தா எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட, சனமா ரேகாவா என்றபடி வேற லெவல் வேண்டுதலில் இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ் (எல்லாம் சனம் போய்டணும் என்றுதான்). ஆனால், எதிர்பாராதவிதமாக ரேகா எவிக்ட்டாக, பாலா, நிஷா, சம்யுக்தா, ஷிவானி என ஒவ்வொருத்தராகக் கண்ணீர் விட ஆரம்பித்தனர். அதட்டுவது, கொஞ்சுவது எனத் தாயின் பிம்பமாகவே இவ்வளவு நாள் உள்ளே இருந்தார் ரேகா. அதனால்தான் என்னவோ ஷிவானி உடைந்து அழுதுவிட்டார். தான் வளர்த்த செடியை ரியோவிற்கும், உண்டியலை உடைத்து அதிலிருந்த நாணயத்தை ஷிவானிக்கும் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் ரேகா. ஆமா... இந்த அனிதான்னு ஒரு கேரக்டர் எங்க போனாங்கனே தெரியலையே! இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் சுவாரசியமாக எதுவும் நடக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ரியோ தலைமையிலான இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.