Bigg Boss 4 Tamil Review Day 15: இப்போதான்பா கொஞ்சம் கொஞ்சமா முகத்திரைகளெல்லாம் கிழியுது. ஏதோ நமக்கும் கொஞ்சம் கன்டென்ட் கிடைக்குது. ஹ்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும். சனம், அனிதாவின் நச்சரிப்பு, பாலா, சுரேஷின் குசும்புத்தனம், ரியோவின் ஓவர் ஆக்டிங் என இவர்களுடைய அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. இதற்கிடையில் நாமினேஷன் வேறு. சரி வாங்க நேற்றைய நாளின் சண்டைகளை அலாசுவோம்!
'உல்லாலா உல்லாலா..' பாடலோடு தொடங்கிய பதினைந்தாம் நாளில் உற்சாகமற்று ஒரு மூலையில் அமர்ந்திருந்தார் பாலா. காலையிலேயே சனம் மற்றும் சுரேஷுக்கு குழாயடி சண்டை. அட! உண்மையிலேயே தண்ணீர் குழாய்க்குத்தான் சண்டை. கழிவறை முதல் சமையலறை வரை எல்லா இடங்களிலும் நின்று வம்பிழுத்துக்கொண்டிருந்தார் சனம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனுஷன், ஒருகட்டத்தில் வார்த்தைகளைவிட, மீண்டும் கடுப்பானார் சனம். விடுவாரா! மறுபடியும் வீட்டைச் சுற்றிச் சுற்றி பஞ்சாயத்து. 'ஏம்மா விடேன்மா' என்று நமக்கும் தோன்றும்வரை நன்றாகச் செய்துவிட்டார் சனம் (சாத்தியமா முடியல).
இதற்கிடையில் தாத்தா பாசத்தில் கேபி சுரேஷுக்கு சப்போர்ட் பண்ண, அதே பாசத்தில் பாலாவும் ஆதரிக்க, சனம் ஷெட்டிக்கு கோபம் தலைக்கேறிச் செய்வதறியாது திணறினார். இதில் வசமாக மாட்டிக்கொண்டது வீட்டின் கேப்டன் ரியோ. ஆனால், ரியோ கூறிய ஆலோசனைகள் ஏற்றும்கொள்ளும்படியாகத்தான் இருந்தன. (பரவாயில்லையே!)
ஹப்பாடா! ஒருவழியா இந்த மொக்க சண்டை முடிஞ்சுது என அமைதியானால், பிக் பாஸ் சும்மா விடுவாரா! 'நாமினேஷன் பண்ணுங்க வாங்க' என பிக் பாஸ் அழைக்க, அனைவரும் ஒருவரை வீட்டை விட்டு வெளியே தள்ளுவதற்குத் தயாராகினர். முதல் வாரம் என்பதால் அர்ச்சனாவையும், கேப்டன் என்பதால் ரியோவையும், சென்ற வார டாஸ்க்கில் வெற்றியடைந்ததால் சனம் மற்றும் வேல்முருகனையும் நாமினேட் செய்ய முடியாது என்கிற விதிமுறையோடு அனைவரும் வாக்களித்தனர்.
முன்பு எப்போதும் இல்லா வகையில், இந்த முறை நாமினேட் செய்யும்போது அவர்கள் உபயோகித்த சில பல வார்த்தைகளை முன்வைத்து, வாக்குகளின் எண்ணிக்கையும் கூறி நாமினேஷன்களை அறிவித்தார் பிக் பாஸ் (பாவம் அவரே நொந்துபோய்ட்டார் போல!). சுவாரசியம் சேர்க்கும் வகையில் இனிமேலாவது கன்டென்ட் கொடுத்தால் சிறப்பு.
'எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் சீக்ரம் பயன்படுத்தனும்', 'கொளுத்திபோடுறது', 'பிரச்னை பண்ணுறது', 'நெகட்டிவ் சுற்றுழூழல உருவாகிறது', 'அட்வைஸ் கொடுத்துகிட்டே இருக்கிறது' என இத்தனை புகார்களைச் சொல்லி ஆரி, சுரேஷ், ஆஜீத், அனிதா, பாலாஜி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் வந்தனர். சனம் ஷெட்டி மிஸ் ஆனதுதான் எல்லோருடைய மைண்ட் வாய்ஸ். விடுங்க அடுத்த வாரம் பார்த்துக்கலாம்!
இதனைத் தொடர்ந்து அனிதா, ஆரியும், பாலா, சுரேஷும், 'ஏன், எதனால, எப்படி' என நாமினேஷன் பற்றிய தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டனர். அடுத்ததாக 'டெய்லி டாஸ்க்'. இந்த விளையாட்டின் பெயர் 'சொல்றியா செய்ரியா?'. அதாங்க, 'ட்ரூத் ஆர் டேர்'. பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, ஆனா இந்த ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் விளையாட்டே புரியமாட்டிங்குதே. அதுதான் பெரிய பிரச்சனை.
நாமினேட் ஆனவங்க கேள்விகள் கேட்க, நாமினேட் ஆகாதவர்கள் பதிலளிக்கவேண்டும். அந்த பதில்களிலும் மற்றவர்களைக் கோர்த்துவிடும்படியான சில கட்டுப்பாடுகளை விதித்துக் குளிர்காய்ந்தனர் நாமினேஷனில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ். 'பிடிக்காதவர்கள் யாரு?', 'மாஸ்க் போட்டுட்டு இருப்பவங்க யாரு?', 'யாரை நாமினேட் பண்ணுவீங்க?', 'நல்லவங்க போல நடிக்குறது யாரு?' என இப்படி விதவிதமான வித்தியாசமான (சொல்லிக்கவேண்டியதுதான்) கேள்விகளைக் கேட்டு அவர்களுக்குள்ளேயே கொளுத்திப்போட்டனர். 'எல்லாரும் இந்த சைடு இருக்கீங்க. எங்களைப் பிரிக்கப் பார்க்குறீங்களா' என்பதுபோல ரியோ பாய்ந்து வர, சிறிய சண்டைபோல ஏதோ ஒன்று உருவானது (ஏன் இவ்வளவு ஹைப்பர் ஆகுறீங்க ரியோ? கூல்..)
அடுத்து அனைவரும் வேல்முருகனைக் கைகாட்ட, 'நான் என்ன உங்க எல்லோருக்கு இளிச்சவாயா?' என்ற தொனியில் ரணகளமாக்கிவிட்டார். ஒருவழியாக அர்ச்சனா வேல் முருகனை அடக்க, நமத்துப்போனது அந்த சண்டையும். ஆனாலும் நல்ல விளையாடுறீங்கடா ட்ரூத் ஆர் டேர். கேட்ட கேள்வியும் உருப்படியா இல்ல. அதுக்கான பதில்களிலும் உண்மையில்ல. சண்டை மட்டும் வந்துடுது.
இதற்கிடையில் நிஷாவின் கோபமான முகமும் வெளியே வந்தது. ஒவ்வொருவரின் ஆட்டிடியூட் மாற்றம் இப்போதுதான் எட்டிப் பார்க்கிறது. உங்க பிளான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஒர்க் அவுட் ஆகுது பிக் பாஸ். குட்!
இறுதியாக, 'நான் சொல்லுறதா யாருதான் கேட்பீங்க? நான் நாமினேட் ஆனதுக்குக் காரணம் நான் பேசுறத நீங்க யாரும் கேட்காததுதான்' (அதைக் கேட்க முடியாமல்மா) என்று சீரிப் பாய்ந்தார் அனிதா. 'எல்லோருமே பார்த்துப் பார்த்து விளையாடுறாங்க. யாரும் உண்மையாவே விளையாடல' என்று மிகவும் உருக்கமாக ஃபீல் பண்ணிக்கொண்டிருந்தார் பாலா. கொளுத்திப்போட்டுவிட்டு சிரித்ததை நாங்கள் கவனித்துவிட்டோம் ப்ரோ.
சனம், இந்த வாரம் நாமினேட் ஆகியிருந்தால் நிச்சயம் அவர்தான் வீட்டைவிட்டு வெளியேறியிருப்பார். ஆனால், இந்த நாமினேஷன் லிஸ்ட் கொஞ்சம் டஃப்தான். ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்ற அறிவிப்பு வருமோ? அதுபோன்று நடக்கவில்லை என்றால் மக்கள் பார்வையிலிருந்து அனிதா வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிக்கு அனிதாவின் சேவை தேவை என்பதால், சுரேஷ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி சுரேஷ் பாதையை பாலா, ரியோ உள்ளிட்டோர் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் (கொளுத்திப்போடுவதுதான்). எனவே, சுரேஷ் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பார்க்கலாம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.