Bigg Boss 4 Tamil Review Day 17 : சபாஷ் சரியான போட்டி! இப்போதுதான் ஆடுகளம் சூடு பிடித்திருக்கிறது. ப்ரோமோ போட்டு ஏமாற்றிவிடாமல், பல கன்டென்ட்டுகள் கொடுத்து நன்றாக என்டெர்டெயின் செய்துவிட்டார் பிக் பாஸ். 'சரி சரி சரி கம..' பாடலோடு ஆரம்பமான பதினேழாவது நாள் எபிசோடை ஆராய்ந்துவிடலாம் வாங்க.
நேற்றைய ராஜாக்கள் இன்றைய அரக்கர்கள். இந்த ட்விஸ்ட்டோடு நேற்றைய லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பமானது. சும்மா சொல்லக்கூடாது, நேற்றைய தின அரக்கர்கள் புகுந்து விளையாடிவிட்டனர். உண்மையான அரக்கியாகவே மாறி, பலவிதமான கொடூர திட்டங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தார் ரம்யா பாண்டியன். ஸ்ப்ரே அடிக்கலாம், ஆரஞ்சு தோல் நசுக்கலாம், உடலைக் கூசவைக்கும் 'கீச்'சென சத்தம் வரும் பொருள்களைப் பயன்படுத்தலாம் என இந்த அரக்கர்களின் டார்ச்சர் யுத்திகள் கணக்கில்லாமல் நீண்டு கொண்டே போனது. சிரிச்சுகிட்டே கொளுத்திப் போடுற கருப்பு ஆடு ரம்யா பாண்டியன் (வெரி சாரி விசிறிகளா!)
ராஜகுலத்தின் ராஜமாதாவான அர்ச்சனா முதலில் வர, யாராலும் சீண்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை. பெரும் ஒப்பாரியோடு, அடுத்ததாக ஆரியை அனுப்பி வைத்தனர் ராஜ குடும்பம். காதில் கத்துவது, ஸ்ப்ரே அடிப்பது, முகத்திற்கு முன் ஆரஞ்சு தோலை நசுக்குவது என ஆரியை ஒரு வழி படுத்திவிட்டனர் இந்த கொடூர அரக்கர்கள். ஒருகட்டத்தில் கண்ணில் ஆரஞ்சு துளி பட, ஆரி அசைந்துவிட்டார். பெரும் வாக்குவாதங்களுக்கு இடையில், 'ஹே.. இதெல்லாம் பண்ண கூடாதுப்பா. இப்படியெல்லாம் ரூல்ஸ் இல்லை' என்று நாம் நினைத்து முடிப்பதற்குள் 'இளவரசன் அடிமையாகிவிட்டார்' என்ற பிக் பாஸின் குரல் அரக்கர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது (நம் சிந்தனையில் இப்படி எதுவும் உதிக்கவில்லையே!)
அடுத்ததாக ரமேஷை சீண்டிக்கொண்டிருந்த அரக்கர்களின் ஆயுதங்களை (அதான் ஸ்ப்ரே, ஆரஞ்சு தோல்) திருடிக்கொண்டிருந்தனர் ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள். 'இங்கு யாரும் நண்பர்கள் அல்ல எதிரியும் அல்ல', 'என் மக்களைக் காப்பாற்றுங்கள்' என முகபாவனையோடு சுரேஷ் அவ்வப்போது நடுவில் புகுந்து விளையாடியது சுவாரசியம் சேர்க்கும் விதமாகவே இருந்தது.
'இந்த க்ரூப்புக்கு சப்போர்ட் பண்ணுங்க, சும்மா இருக்காதிங்க' என அரசர் குடும்பத்திலிருந்து அரக்கர் குடும்பத்தில் சேர்ந்த ஆரியைப் பார்த்து பாலா சொல்லிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர், 'நேற்று நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படிதான் ஆரியும் இருக்காங்க' என்று வரலாற்றிலேயே முதல் முறையாக வாயைத் திறந்து கவுன்ட்டர் பாயின்ட்டெல்லாம் கொடுத்தார் ஷிவானி.
அதுமட்டுமா, சனம் ஷெட்டோயோடு தீவிர சண்டையிலும் இறங்கினார் ஷிவானி. (இவ்வளவு நாள் எங்கம்மா போயிருந்த நீ?). ஸ்ப்ரே உபயோகிக்கக்கூடாது என்று ஷிவானி சொல்ல, 'அப்படி ரூல்ஸ் இல்லை' என சனம் வாதாட, மாற்றி மாற்றி குழாய் பக்கத்தில் நின்று சண்டை போட்டுக்கொண்டனர்.
விளையாட்டிற்கு இடையில், பாலாவின் சேட்டைகள் வேற. இரண்டாம் சீசனில் மஹத், ஐஸ்வர்யா, டேனி அளவிற்குச் சண்டைகளும் சுவாரஸ்யங்களும் இல்லையென்றாலும், பாலாவின் செயல் நாளடைவில் பெரும் சண்டையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். பாலாவும் ரம்யா பாண்டியனும் எப்படியெல்லாம் ராஜ குடும்பத்தை அடிமைப் படுத்துவது என டிஸ்கஸ் செய்துகொண்டிருக்கும்போது, 'பிளான் செய்யும் வேளையில் ரியோவுடைய வீக்னஸ் எனக்குத் தெரியும் நான் பார்த்துக்குறேன் என அர்ச்சனா சொன்னார். ஆனா, ரியோ வந்ததும் ஒண்ணுமே செய்யல' என்று குற்றம் சாட்டி, வீட்டிற்குள் நடக்கும் ஃபேவரிட்டஸம் பற்றிப் பற்ற வைத்தார் பாலா.
இதற்கு நடுவில், தேவையே இல்லாமல் வம்படியாக சென்று வலையில் விழும் அனிதா. யாரும் கண்டுக்கவே மாட்டிக்கிறார்கள் என்று தன்னை கண்டுகொள்ளும் வகையில் எதையோ ஒன்றைப் பேசிக்கொண்டே இருக்கிறார் அனிதா சம்பத். அதிலும் குறிப்பாக அவரிடம் மாட்டுவது சோம் சேகர் மட்டுமே (மண்ட பத்திரம்).
அடுத்து களத்தில் இறங்கினார் ஆஜீத். இப்போதுதான் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 'ஃபைட் சீன்' வந்தது. தன் கையில் வைத்திருந்த கோலால் நிஷா, ரம்யா பாண்டியனோடு விளையாடிக்கொண்டிருந்த சுரேஷ், தவறுதலாக (ஆஹான்) சனம் ஷெட்டியின் நெற்றியில் பட்டுவிட, ஒரு ஆட்டம் ஆடினாங்க பாருங்க.. மீரா மிதுன்லாம் ஒண்ணுமே இல்ல. தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை முந்தைய நாள் சுரேஷ், வார்த்தை வழியாக சனம் ஷெட்டியிடமே சொன்னதால் என்னவோ, சரியான நேரம் பார்த்துப் பாய்ந்துவிட்டார் சனம். ஏற்கெனவே 'மானங்கெட்ட மன்னரே' என்று சொல்லிய சனம் ஷெட்டி, இம்முறை 'வாடா வாடா வாடா..' என்றுகூறி கோபத்தையெல்லாம் தீர்த்துக்கொண்டார். (ஃப்ளோல இதெல்லாமா வரும்!)
'உங்க ரணகளத்துல என்னை அடிமையாக்கிடீங்களேடா' என்ற மைண்ட் வாய்ஸில் மெதுவாக நகர்ந்தார் ஆஜீத். ஆனால், சனம் ஷெட்டி இந்தப் பிரச்னையை விடுவதாக இல்லை. இங்க வந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க என்று கத்திகொண்டே இருந்தவரிடம், மன்னிப்பும் கேட்டார் சுரேஷ். ஆனால் 'டா' சொன்னதற்கு சனம் ஷெட்டி வருத்தப்பட்டதாகக்கூடத் தெரியவில்லை. (எப்படித் தெரியும்! இந்த சீஸனின் வெஷ பாட்டில் சனம்தான்) சுரேஷின் கற்பனை உலகின் கதவு சனம் ஷெட்டியினால் மூடப்பட்டது. அதெல்லாம் இருக்கட்டும், எப்போதும் 'ஆஹா ஓஹோ' எனக் குதிக்கும் ரியோ எங்கே போனாரு? ஆளையே காணோம்!
அடுத்ததாக கேபி விளையாட, அடிமையாகாமல் சென்றார். இதனைத் தொடர்ந்து, தன்னை கன்ஃபெஷன் அறைக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தவரை, பிக் பாஸ் அழைத்தார். 'தெரியாம செஞ்சுட்டேன். நான் பண்ணின தப்புக்கு என்னை அனுப்பிடுங்க என்று கேட்டுக்கொண்டவரின் கண்களும், குரலும் கலங்கியது. ஆனால் அவருடைய அழுகை, சனம் ஷெட்டியை நடித்ததற்காக வந்ததா அல்லது வீட்டைவிட்டு வெளியே அனுப்பிடுவாங்களோ என்ற பயத்தில் வந்ததா என்பதுதான் தெரியவில்லை.
ரம்யா பாண்டியன், நிஷா, பாலா என அனைவரிடமும் சுரேஷ் மன்னிப்பு கேட்க, நேற்றைய தினம் பரபரப்பாகவே முடிந்தது. சுரேஷ் செய்தது தவறு என்றாலும், நிஷா, ரம்யாவை தூண்டாத கோபம் ஏன் சனம் ஷெட்டியை மட்டும் தூண்டியது? ஃப்ளோவில் தவறான வார்த்தைகளை உபயோகித்திருந்தாலும், பிறகு சனம், சுரேஷிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். உங்கள் கருத்து என்ன நண்பர்களே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.