Bigg Boss 4 Tamil Review Day 69 : 'எழுபது நாள்களைத் தொடும் நிலையிலும் வீட்டிற்குள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறதே! ஒருவேளை இரண்டு இரண்டு பேராக எவிக்ட் செய்யப்படுவார்களோ' என்று போய்க்கொண்டிருந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நேற்றைய எபிசோட். தான் ஒரு கன்டெஸ்டென்ட் என்பதை மறந்து வீட்டிற்குள்ளே அமர்ந்துகொண்டு (உறங்கிக்கொண்டும்) பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஜித்தன் ரமேஷின் வெளியேற்றம் மக்களையும் சரி, போட்டியாளர்களையும் சரி அவ்வளவாகப் பாதிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். என்ன ப்ரோ நீங்கக் கிடைக்கிற வாய்ப்புகளை விட்டுவிட்டு அப்புறம் அங்கீகாரம் கிடைக்கலன்னு ஃபீல் பண்ணுன்னா எப்படி?
அனிதாவின் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அறுபத்து ஒன்பதாம் நாளின் எபிசோட். சோம் மற்றும் நிஷா சண்டையோடு ஆரம்பமானது. க்ருபிஸம்குள்ளேயும் சின்ன க்ருபிஸம் இருக்கும்போல. சோம், கேபி இணைந்திருப்பது ஏனோ அர்ச்சனா நிஷாவிற்கு பொறுக்கவில்லை. ஒரே புகார் மேல் புகார். என்னதான் சொல்லுங்க, இந்த லவ் பெட் என்கிற 'அன்பு' அணி அவ்வப்போது கட்டிப்பிடி வைத்தியத்தைப் பின்பற்றுவதால், எவ்வளவுதான் சண்டைபோட்டுக்கொண்டாலும் மறுகணமே ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். (இதுக்கு எதுக்குப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்!)
Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha
என்னதான் ஆச்சு நம்ம பாலாவுக்கு! ரொம்ப சமத்துக் குழந்தையா மாறிட்டாரு! ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ்லாம் பின்பற்றி, கமல்கிட்ட 'குட் பாய்' என்று பாராட்டையும் வாங்கிட்டாரு. எல்லாம் கடந்த வாரத்தின் குறும்படம் ஜாலம் போல. நல்லது! ரமேஷின் கேப்டன்சி பற்றி கமல் கேட்டபோது, அதனை சுவாரசியத்தோடு ஒப்பிட்டு எங்கெங்கோ கூட்டிச் சென்றுவிட்டார் அர்ச்சனா. ஆனால், ஆரி மற்றும் பாலா 'நறுக் நறுக்'கென்று அவர்களின் வாதங்களை முன்வைத்து, ரமேஷின் கேப்டன் பொறுப்பைப் பற்றிக் கூறி லவ் பெட் கேங்கை அப்செட்டாக்கினார்கள். உங்க லவ் பெட் அட்ராசிட்டி தாங்கமுடியல. ஆனால், லவ் பெட்டில் அவ்வப்போது பாலாவின் தலையும் இப்போதெல்லாம் பார்க்கமுடிகிறது. சாச்சுப்புட்டாங்களோ!
அர்ச்சனா மற்றும் நிஷா தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட தங்கள் குடும்பம் பற்றிய விஷயங்களை, விளையாட்டில் பயன்படுத்தியது சரியா பிழையா என்று கமல் கேட்டதற்கு நேரடியான பதிலே நிஷாவிடமிருந்து வரவில்லையே! 'தெரியவில்லை' என்று கூறுவதெல்லாம் பதில் கேட்டகிரியில் எப்படி யோசித்தாலும் சேர்க்கமுடியவில்லை! சைடு கேப்பில் நிஷாவை 'ஆசிட்; என்றெல்லாம் சொல்லிவிட்டார் கமல். இப்போதுதான் ஒரு ஃபார்முக்கு கமல் வந்திருக்கிறார். மகிழ்ச்சி!
Bigg Boss 4 Tamil Vijay Tv Archana
இந்த கேங் அன்பு பாராட்டுவதில் மட்டுமல்ல, தவறை ஏற்றுக்கொள்ளாமல் மழுப்புவதிலும் சிறந்தவர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லையே என்கிற ரேஞ்சிற்கு நடிக்கவும் செய்வார்கள். நேற்று, சுவாரஸ்யமில்லாத போட்டியாளர் என்று ஆரியை சுட்டிக்காட்டும்போது ரியோ விழித்ததுபோல. செயலிழக்க வைக்கமுடியவில்லை என்பது ஆரிக்கான வெற்றிதானே! மேலும், மனிதர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் ரோபோட் ஆரி செய்யமுடியும்! இதில் சுவாரசியம் குறையும்படி என்ன செய்துவிட்டார்? லவ் பெட் கேபி மற்றும் ரமேஷ் மனம் புண்பட்டுவிட்டதாம்! அதனால்தான் இந்த கோபம்! நிஷாவைவிடவா ஆரி செய்தார்?
இவ்வளவு நடந்துகொண்டிருக்கும்போதும், அர்ச்சனாவின் ரியாக்ஷன் ஆஸ்கரையும் மிஞ்சிய நடிப்பு. அங்கரிங் செய்து சலித்துவிட்டதுபோல. வெள்ளித்திரையிலோ சின்னத்திரையிலோ நடிப்பதற்கான ஆடிஷன் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, புல்லரிக்கவைக்கும் நடிப்பாகவே அர்ச்சனாவின் பெர்ஃபாமன்ஸ் இருக்கிறது. நிஷா போல தன்னை வேறு யாரும் தன் மறைந்த தந்தையைப் பற்றிப் பேசியிருந்தாலும் மன்னித்து விட்டிருப்பேன் என்று கூறியதெல்லாம் நடிப்பின் உச்சம். ஆரி மற்றும் கூடவே சுற்றிக்கொண்டிருக்கும் சோம் பற்றி அவர்களுக்குப் பின்னால் எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்கத் தவறவில்லை அர்ச்சனா மேடம்!
Bigg Boss Tamil 4
அடுத்ததாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று சொன்னதுதான் தாமதம், உடனே அர்ச்சனாவின் பெர்ஃபாமன்ஸ் தொடங்கியது. சுவாரஸ்யமற்ற போட்டியாளராக நிஷாவைத் தேர்வு செய்து ஓய்வு அரைக்கு அனுப்ப, சோம் மற்றும் ரமேஷை ஸ்டோர் மற்றும் கன்ஃபெஷன் அறைகளுக்கு அனுப்பி வைத்தார் கமல். ஒருவர் மட்டுமே வீட்டிற்குள் வர முடியும் என்றதும், 'சோம் வந்துடுவான்ல' என்று அர்ச்சனா கேட்டது, ரமேஷின் எவிக்ஷன் யாரையும் பாதிக்கவில்லை என்பதையே காட்டியது. இதற்கிடையில் அனிதாவிற்கு நேற்று ஏராளமான ஸ்பேஸ் கொடுத்தார் கமல். அனிதாவின் பாயின்ட்டுகள் ஒவ்வொன்றும் 'தரம்'. அதற்கு பதில் தெரியாமல் விழித்துக்கொண்டும், சமாளித்துக்கொண்டும் இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும்.
ஒருவழியாக தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வெளியேற்றியது நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி. இன்று நிஷாவின் வெளியேற்றம் இருக்குமெனச் செய்திகளும் வதந்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன. லவ் பெட்டில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றம் எந்த அளவிற்கு கேம் ஷோவை மாற்றியமைக்கும் என்பதை இனி பார்க்கலாம்! அய்யயோ இன்றைக்கும் அர்ச்சனாவின் வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் இருக்குமே! அதையெல்லாம் பார்க்க நீங்க ரெடியா!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"