Bigg Boss Day 2 Review Tamil: 'ஹாசினி டூ சொர்ணாக்கா', 'சிரிப்பு டூ சீரியஸ்' என பிக் பாஸின் இரண்டாம் நாள் மிகவும் 'கான்ட்ராஸ்ட்டான' நாளாகவே இருந்தது. 'அனுபவப் பகிர்வு' வாரமாச்சே. அதனால் நிச்சயம் இந்த வாரம் எமோஷனல் வீக்காகதான் இருக்கும். நமக்கும் நேற்று கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கும் பாயின்டஸ் கிடைக்கும். சரி வாங்க இரண்டாம் நாளின் விமர்சனத்தோடு, ரேட்டிங் மாற்றங்களையும் பார்த்துடுவோம்.
முதல் நாளின் நாமினேஷன் ட்ரையலோடு ஆரம்பமான நிகழ்ச்சியில், 'ரேகா மிகவும் அதிகாரம் செய்வதுபோல இருக்கிறது அதனால் ஹார்ட் பிரேக் உங்களுக்கு' என்று பாலா கூறியதும், தான் ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறேன் என்ற பதில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதனைத் தொடர்ந்து 'நிலவே என்னிடம் நெருங்காதே..' பாடல் பாடியும் 'செல்லக்குட்டி', 'முத்துக்குட்டி' எனக் கொஞ்சியும் எப்படியோ ஒரு வழியாக ஆஜீத்தை காம்ப்ரமைஸ் செய்துவிட்டார் ரேகா (முடியல.. முடியல).
அனிதா சம்பத் தன் தாய் பற்றிக் கூறியது மிகவும் எமோஷனலாகவே இருந்தது. பெரும்பாலான இந்தியக் குறிப்பாகத் தென்னிந்திய மக்கள் எதிர்கொள்ளும் 'நிறம்' பற்றிய பிரச்சனை. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் இதுவரை யாரும் வெளிப்படையாகப் பேசிடாத ஓர் முக்கியமான அனைவராலும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகவே அது இருந்தது. அனிதாவின் அம்மாவிற்கு மட்டுமல்ல இங்குப் பெரும்பான்மையாக இருக்கும் ஏராளமானவர்களுக்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாகவே என்றைக்கும் நிஷா இருப்பார்.
'ஷிவானிய அழவைக்காம விடமாட்டாங்க போலயே' என்றுதான் ப்ரோமோவில் ஆரி-ஷிவானி உரையாடலைப் பார்த்தபோது தோன்றியது. ஆனால், ஷிவானியின் தயக்கத்தையும் பயத்தையும் ஆரி உடைத்த விதம், அருமை. அப்படியே சைடில் பாலா ஷிவானிக்காக 'காக்க' பிடித்ததையும் நோட் பண்ண தவறவில்லை யுவர் ஆனர் (அடுத்த கவின் லாஸ்லியா லிஸ்ட்ல வந்துருவாங்களோ!).
'ஹா ஹா ஹாசினியை' 'தூள்' சொர்ணாக்காவாக மாற்றி பதம் பார்த்துவிட்டார் நம்ம சுரேஷ் அப்பா. நாம் ஏற்கெனவே டிஸ்கஸ் செய்ததுபோல சுரேஷ் சக்ரவர்த்திக்குள் அவ்வப்போது மோகன் வைத்தியா வந்து செல்கிறார். இளையவர்கள் சாதாரணமாகக் கிண்டல் கேலி செய்வதை அவர் மனம் ஏற்க மறுக்கிறது. அதனால் பிறர் மனம் புண்படுவதைப்போல் பேசிவிடுகிறார். சம்பந்தமே இல்லாமல் போறபோக்கில் வார்த்தையை விதைத்துவிட்டு, பிறகு பிக் பாஸிடம் விளக்கம் கூறுவது.. என்னங்க சார் உங்க சட்டம்!
ஆனாலும், ஒன்று சொல்லியே ஆகணும் அடுத்த நாள் அனிதா-சுரேஷ் படுபயங்கரமாக சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது, நம்ம வேல்முருகன் கூலாக பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டோம் சிங்கர் ஜி!
இரண்டாம் நாள் சூப்பர் ஸ்டாரின் 'சும்மா கிழி..' பாடலோடு ஆரம்பமானது. இம்முறை ஷிவானி நம்மை ஏமாற்றவில்லை நண்பா. ஃபார்முக்கு வந்துட்டாங்க. அனைவரும் எனர்ஜெட்டிக்கா அவர்களுடைய இனிய நாளை தொடங்கினார்கள். ஸ்ட்ரெயிட்டா அனுபவ பகிர்வு டாஸ்க் வந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதில் பாஸாகும் 8 பேர், நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கமாட்டார்கள்.
இதில் முதலில் மனதைத் திறந்து பேசியவர் வேல்முருகன். ஒரு வேளை உணவிற்காகப் பள்ளிக்கூடம் சென்றது, அந்த ஒரு வேளை மதிய உணவில் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்தது, பிழைப்புக்காகச் சென்னை வந்தது, வறுமையின் காரணமாகவும் விழிப்புணர்வு இல்லாமலும் தாம்பரத்திலிருந்து நடந்தே அடையார் வரை சென்றது, தங்கும் அறையில் படுக்க இடமில்லாமல் செருப்பு வைத்திருக்கும் இடத்தை சுத்தம் செய்து படுத்துக்கொண்டது என மிகவும் உருக்கமாக அவருடைய அனுபவங்களைப் பாடலோடு பகிர்ந்துகொண்டார். என்னதான் கஷ்டப்பட்டாலும் தன்னை நம்பி வந்தவரை முன்னேற்றுப் பாதையில் பயணிக்க வைக்கவேண்டும் என தன் மனைவியை மேற்படிப்பு படிக்க வைத்தது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் வேல்முருகன்!
வேல்முருகனைத் தொடர்ந்து சனம் ஷெட்டி பேசத்தொடங்கினார். 'தர்ஷன் பற்றிக் கூறுவாரா' என்று எண்ணிய பெரும்பாலானவர்களுக்கு, தன்னுடைய 20 வயதில் தான் விபத்துக்குள்ளாகி, முதுகெலும்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு சில நாள்கள் சுயநினைவை இழந்த விஷயத்தைக் கேட்டவர்கள் நிச்சயம் உறைந்துபோயிருப்பார்கள். தாய், தந்தையைத் தவிர இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று பலமுறை அவர் ஏன் அழுத்தி கூறுகிறார், யாருக்குச் சொல்கிறார் என்பது நமக்கு நன்றாகவே வெளிப்பட்டது.
அடுத்ததாக, நேற்றைய பொழுதின் தங்கத் தாமரையின் என்ட்ரி. ஆம், நிறம் மீதான தாக்கத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த நிஷாதான் அது. வாங்க அவருடைய குரலிலேயே இந்த வாக்கியங்களைப் படிக்கலாம். 'எங்களுக்கு நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால், நீங்க வர வைக்குறீங்க', 'அழகா இருக்கிறவனைவிட அவமானப்பட்டவன்தான் சாதிப்பான்', 'நாங்கல்லாம் ஜெயிச்சுட்டா போதாது, ஜெயிச்சுகிட்டே இருக்கணும்', 'என்னை பின்வரிசைல தள்ளிட்டு முன்னாடி நின்னவனெல்லாம் எங்கப் போனானு தெரில, ஆனா பின்னாடி ஒரு மூலையில இருந்த என்னை இப்போ இந்த உலகத்துக்கே தெரியும்', 'திறமைக்கும் அழகுக்கும் சம்பந்தமே இல்லை' என போகிற போக்கில் படபடவென பல கருத்துக்களை நச்செனப் பதிவு செய்தார் நிஷா. ஒரு லவ் லெட்டர் கூட தன் வாழ்வில் வந்ததில்லை ஆனால், அந்த லெட்டரை கொண்டுபோய் கொடுக்கும் 'கொரியர் கேர்ள்'க்கு கூட தான் தகுதியற்றவளா என்கிற வார்த்தையின் ஆழம் மிக அதிகம். வீடு முதல் தான் செல்லும் இடங்களெல்லாம் பின் வரிசைக்குத் தள்ளப்பட்ட இவர் தற்போது ஐம்பது ஆண்களுக்கு மத்தியில் ஒற்றை பெண்ணாக அதிலும் நகைச்சுவை ஜானரை தேர்வு செய்து அதில் ஜொலிப்பது என்பது ஈடுகொடுக்க முடியாத சாதனை. இறுதியில் தன் குழந்தைக்கும் தனக்கும் நேர்ந்த விபத்து குறித்துப் பேசியபோது உடைந்து அழுதது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
போதும்பா போதும். நாமளும் ரொம்பவே எமோஷனல் ஆகியாச்சு. சரி இப்போ ரேட்டிங்க்கு வருவோம். இரண்டாம் நாளில் அனைவரையும் ஃபோக்கஸ் செய்யாத காரணத்தால், நேற்று லைம்லைட்டில் இருந்தவர்களுக்கு மட்டும் ரேட்டிங் மாற்றப்பட்டுள்ளது. மற்றவர்களின் மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை.
ஆரி (84 டூ 71) - ஷிவானியின் பலம் என்ன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி அவருடைய தயக்கத்தை உடைத்ததிற்காக ஆரிக்கு 71 மதிப்பெண்கள்.
சோம் (65 டூ 69) - வேல்முருகன் மேடை ஏறியபோது, 'வணக்கம்' என்று கூறியவருக்கு, கால் மேல் கால் போட்டிருந்தவர் மரியாதை நிமித்தமாக நேராக அமர்ந்து வணக்கம் கூறிய உடல் மொழிக்காக சோம்க்கு 69 மதிப்பெண்கள்.
பாலா (57 டூ 51) - 'சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டால்தான்' உண்டு என்று உள்ளுக்குள் இருக்கும் 'பிளேபாய்' மோட் பாலாவிற்கு ஆன் ஆகிவிட்டது. எல்லோருடனும் மிங்கில் ஆவதுபோல தோன்றவில்லை. பெரும்பாலான நேரம் ஷிவானியுடனே இருப்பதுபோல் இருக்கிறது. மற்றவர்களையும் கொஞ்சம் பார்க்கவேண்டும் என்பதற்காக அவருக்கு 51 மதிப்பெண்கள்.
வேல்முருகன் (64 டூ 76) - அவர் கடந்து வந்த பாதை மிகவும் உருக்கமாகவும் உண்மையாகவும் இருந்தது. எமோஷன்ஸை ஒருபோதும் நம்மால் மதிப்பிடமுடியாது. என்றாலும் கிடைத்த மேடைகளையெல்லாம் நேர்த்தியாகப் பயன்படுத்திக்கொண்ட செயல் திறனுக்காக 76 மதிப்பெண்கள்.
சுரேஷ் (52 டூ 39) - மனம் உறுத்தாத வகையில்தான் அனிதாவின் செய்தி வாசிப்பு நிகழ்வு இருந்தது. அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, சம்பந்தமே இல்லாமல் செய்தியாளர்களைப் பற்றி அவர் முன்வைத்த பொதுவான கருத்து கண்டிக்கத்தக்கது. அதற்காக அனிதாவிடம் மட்டுமல்ல, செய்தியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதுதான் முறை. ஆனால், அனிதாவிடம் கூட சுரேஷ் மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை. வீட்டின் மூத்த மனிதர் இப்படி நிதானமில்லாமல் செயல்படுவது தவறான உதாரணமாகவே தோன்றுகிறது. அதனால் அவருக்கு 39 மதிப்பெண்கள்.
ரேகா (45 டூ 53) - ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மை பற்றி உண்மையில் புரிந்துகொண்டாரா என்பதில் தெளிவு இல்லையென்றாலும், அவர் செயல் மற்றும் சைகையில் மாற்றம் இருந்தது. அதனால், ரேகாவிற்கு 53 மதிப்பெண்கள்.
ஷிவானி (49 டூ 59) - இளம் வயதுதான் அவருடைய பிரச்சனை என்பது புரிகிறது. மேலும், அவருடைய நண்பர்கள் வட்டம் மிகவும் சிறியது. அதனால் மற்றவர்களோடு பழகுவதில் இருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாம் ஏற்கெனவே சொன்னதுபோல மேக்-அப்பை குறைத்துவிட்டு மற்றவர்களோடு பேசத் தொடங்கியிருக்கிறார். அதனால் அவருக்கு 59 மதிப்பெண்கள்.
அனிதா (74 டூ 81) - விளையாட்டு வினையான கதை இவருக்கு. என்றாலும், சிறிது நேரத்திலேயே சமாதான கோடியை முதலில் தூக்கியது அனிதாதான். அந்த பண்புக்காகவே அதிக மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஆனால், ஒருபோதும் அதிலும் முக்கியமாகப் பெண்கள் தங்களின் பலவீனத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடக்கூடாது. தான் ஒரு 'எமோஷனல் இடியட்' என்று அவர் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன். நம் பலவீனம் தெரிந்துகொண்டு அதனைப் பயன்படுத்திக்கொள்வதற்குத் தனி கூட்டமே இருக்கிறது. இந்த சிறிய அலெர்ட் நோட்டோடு அனிதாவிற்கு 81 மதிப்பெண்கள்.
சனம் (51 டூ 57) - ஹார்ட் பிரேக்ஸ் மற்றும் அதன் காரணம் சனம் ஷெட்டியை 'குட் கேர்ள்' கேட்டகிரியில் தள்ளியிருக்கிறது போல. மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் நடந்துகொண்டார். இந்த மாற்றத்திற்காக அவருக்கு 57 மதிப்பெண்கள்.
நிஷா (55 டூ 86) - ஒருவரால் எப்போதும் காமெடியனாகவே வாழ்ந்துகொண்டிருக்க முடியுமா என்ற கேள்வியை முதல் நாள் விமர்சனத்தில் வைத்தோம். அதற்கான 'பளார்' அடியாக இருந்தது நிஷாவின் நேற்றைய செயல்பாடு. எமோஷனல் கன்டென்ட்டை எமோஷனலாக சொல்வது எளிது, அது மற்றவர்களையும் எளிதில் எமோஷனலாக்கிவிடும். ஆனால், தான் கடந்து வந்த வலிகள் நிறைந்த பாதையை நகைச்சுவை உணர்வோடு எடுத்துரைத்து, சிந்திக்கவும் வைத்தது நிஷாவின் பேச்சு. இது எல்லோராலும் முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவருடைய அனுபவ பகிர்வு நிச்சயம் பலருடைய வாழ்க்கையை மாற்றும், பலரைச் சிந்திக்கவும் வைக்கும். அதற்காகவே நிஷாவிற்கு 86 மதிப்பெண்கள்.
ஆஜீத்(73), ரியோ(62), ரமேஷ்(79), ரம்யா(70), சம்யுக்தா(56) மற்றும் கேபி(68) மதிப்பெண்களின் எந்த மாற்றமும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.