/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-Promo-Today-Ramya-Pandian-Rekha-Sanam-Shetty.jpg)
Bigg Boss 4 Tamil Kamal Hasan
Bigg Boss 4 Tamil review: "உப்புப் போட்டு சாப்பிடுற யாரும் உள்ள இருக்க மாட்டாங்க" ப்ரோமோவோடு ஆரம்பமானது நேற்றைய பிக் பாஸ். வேற என்ன அனிதா, சுரேஷ் பஞ்சாயத்துதான் அது. 'தப்பா வோட் பண்ணிட்டு பின்னாடி வருத்தப்படக்கூடாதுல்ல'னு இந்த வாரம் ஏன் எவிக்ஷன் இல்லைனு அவரோட ஸ்டைல்ல அரசியலையும் கலந்து பன்ச் சொல்லிட்டாரு கமல். அதனால, ஒருத்தவங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்காம எந்த முடிவையும் எடுத்துடாதீங்கப்பா!
'வெறித்தனம் ..' ஆடல் பாடலோடு ஆரம்பமானது ஐந்தாம் நாள். காலையிலேயே சோப் சண்டை. வேற யாரு சுரேஷ்தான்.'இதோ சிங்கம் களமிறங்கிடுச்சுல' என்ற மைண்ட் வாய்ஸ் எழாமலில்லை. பாலா, சனம், சம்யுக்தா என இம்முறை மாடல்களின் வரவு அதிகம். சொல்லவா வேண்டும். 'நீ பெரியவனா நான் பெரியவனா' சண்டை ஆரம்பம். என்னதான் இருந்தாலும் பொதுவெளியில் 'டுபாக்கூர்' என்ற வார்த்தையை அதுவும் ஒரே துறையைப் பற்றி பாலா உபயோகித்திருக்கக் கூடாது.
போட்டியே இல்லாமல் தேர்வாகிய வீட்டின் தலைவர் ரம்யா பாண்டியன் பற்றிய குறை /நிறைகளை எழுதவேண்டும் என்பது எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட டாஸ்க். போட்டின்னு வந்துட்டா நான் வேறமாதிரி என பறந்தார் பாலா. 'தலைவருனு இந்த வீட்டுக்கு இருக்காங்களா' என்ற உணர்வுதான் இந்த வாரம் முழுக்க நமக்கு இருந்தது. முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
என்னதான் சொல்லுங்க நம்ம சுரேஷ் அடங்குறதா இல்ல. 'ஒருத்தவங்கள மட்டும் கேப்டனா ஆக்குங்க. போறதுக்குள்ள வெச்சு செய்றேன்' என நீண்ட நாள் பகையாளியைப் பழிவாங்குவதைப் போன்று இருக்கிறது அவருடைய ஒவ்வொரு செயலும். மேலும், 'சண்டையே யாரும் போட மாட்டிங்குறீங்களே அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு' என ரேகாவிடம் வருத்தப்படுகிறார் சுரேஷ். 'காளியோட ஆட்டம் இனிமேதான் ஆரம்பமோ!' என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நம்மை ஏமாற்றிவிட்டார் சுரேஷ். ஆம், அடுத்த நாள் கமல் முன்னிலையில் 'நான் பண்ணது தப்புதான். ஐ அம் வெரி சாரி' என்று சரண்டரே ஆகிவிட்டாரே. அவ்வளவுதானா!
நிஷாவின் திருமண நாள் வாழ்த்து மிகவும் உருக்கமாகவே இருந்தது. கமலின் வருகைக்காகக் காத்திருக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபடியே வீட்டிற்குள் அதாவது அகம் டிவி வழியே உள்ளே நுழைந்தார் கமல்ஜி.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/5-7-300x300.jpg)
ரமேஷின் கட்டைவிரல், ரேகா கேட்ட கடலை உருண்டை, ஷிவானியின் 'கண்மணி அன்போடு..' பாடல் என அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ரீகேப் செய்து நலம் விசாரித்தார் கமல். பிறகு, அனுபவ பகிர்வின் ஃபீட்பேக் பற்றியும் கலந்துரையாடல் நடந்தது.
ஆரி வாழ்வில் நடந்ததைப் போன்றுதான் தாய் விஷயத்தில் தனக்கும் நடந்ததாகக் கமல் குறிப்பிட்டு, 'ஷூட் பாதிலேயே விட்டுட்டு வந்திருந்தால்தான் வருத்தப்பட்டிருப்பாங்க' என்று கூறியதும் ஆரியின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. 'Conquerors of golden city' எனச் சிறிய கிராமத்திலிருந்து வந்து உலகையே தன் வசமாக்கிய பாரதிராஜா- இளையராஜா அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் காட்டாகக் கூறி வேல்முருகனை வாழ்த்திய விதம் டாப் க்ளாஸ். நிச்சயம் இது பலரை ஊக்குவிக்கும்.
இருண்ட பகுதியின் வெளிச்சம் - பாலாஜி, வாய்ப்பை நழுவவிட்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து மீண்டும் வந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்ட ரமேஷ், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று போகிற போக்கில் சிந்திக்கும் விதையை ஷிவானிக்கு தூவியது, நாம் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று சோமுக்கு மெசேஜ் என ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் பாசிட்டிவ் பக்கங்களை நம்பிக்கை தரும் வகையில் எடுத்துரைத்தார் கமல்.
"தூ.. இவ்வளவுதானா" என்றுகூறி 'எச்சி தெறிக்கலையை!' என்று கலாய்த்து சுரேஷ் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் முக்கியத்துவம் பற்றிக்கூறி 'சின்னப் பொண்ணுதானே' என்றதுக்கு 'ரேகா மாறிட்டாங்க நானும் மாறணும்னு நினைக்கிறேன்' சார் என்ற பல்ட்டி, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே கணக்காக இருந்தது. இதனைத் தொடர்ந்து அனிதாவையும் விட்டுவைக்கவில்லை. 'திரும்பத் திரும்ப பேசுற நீ..' போல பேசிக்கிட்டே போக வேண்டாம் என்று கூறியதும், 'சமாதானம் சமாதானம்' என்று கைகொடுத்துவிட்டார் அனிதா. முன்புபோல மீண்டும் சமாதானம் உடையாமல் இருந்தால் சரிதான். புது கன்டென்ட் வேணுமே!
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-promo-today-Suresh-Chakravarthy-Anitha-Sampath-300x167.jpg)
மீண்டும் ஹார்ட் / ஹார்ட்பிரேக் டாஸ்க் கமல் முன்னிலையில் அரங்கேறியது. முதலில் அழைக்கப்பட்ட சனம், முன்பு ஹார்ட்ஸ் வாங்கிய பாலா மற்றும் சம்யுக்தாவிற்கு இம்முறை ஹார்ட் பிரேக். காரணம் முழுவதும் பெர்சனல். முன்பு ஹார்ட் பிரேக் கொடுத்த ரேகா மற்றும் அனிதாவிற்கு இம்முறை ஹார்ட்ஸ் கொடுத்து சமாதானப்படுத்திவிட்டார். ஒரே வாரத்தில் இப்படியா!
ஆச்சி மனோரமாவின் நினைவு தினத்தை நினைவுகூர்ந்து நேற்றைய ஷோ முடிந்தது. நாம் கணித்த கணிப்பு ஏறத்தாழ சரியாகத்தான் இருக்கிறது. அட! உண்மையிலேயேதான்! சரி, வாங்க அப்படியே ரேட்டிங்கை பார்த்துவிடலாம்.
அன்றைய நாளில் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளை வைத்தே இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 100 மதிப்பெண்களுக்கு எங்களுடைய மதிப்பெண் காரணத்தோடு அளவிடப்படுகிறது. மூன்றாம் நாளில் அனைவரையும் ஃபோக்கஸ் செய்யாத காரணத்தால், நேற்று லைம்லைட்டில் இருந்தவர்களுக்கு மட்டும் ரேட்டிங் மாற்றப்பட்டுள்ளது. மற்றவர்களின் மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை. பார்ப்போம் நம் கணிப்பு இறுதி நாள் வரை சரியாக இருக்கிறதா என்று!
பாலா (59 டூ 53): என்னதான் பிடிக்காத அல்லது ஓர் பேஜன்ட் பற்றிய செயல்பாடுகள் குறித்து முழுமையாகத் தெரிந்திருந்தாலும், அதனை எங்கு எப்போது யாரிடம் சொல்கிறோம் என்பது முக்கியம். இடம், பொருள் பார்க்காமல், அதே துறையில் இருக்கும் மற்றவரைப் புண்படுத்துவது தவறு. வார்த்தைகளைப் பார்த்து உபயோகிக்கவேண்டும் என்ற அலெர்ட்டுக்காக பாலாவிற்கு 53 மதிப்பெண்கள்.
ரியோ (68 டூ 79) - தன் மனதில் படுவதை உடனே சொல்லாமல், சரியான நேரம் பார்த்து எடுத்துரைக்கும் விதம் சிறப்பு. வெற்றிபெற்றவர்களோடு பயணிக்கும்போது நாம் என்பதும், பிரச்சனை என்றால் 'நீ' என்று கூறி எஸ்கேப் ஆவதும் பெரும்பாலான மனிதர்களின் இயல்பு. ஆனால் அனிதாவிடம், 'நாம எதுவும் செய்யாம, நம்மள சொல்ல மாட்டாங்க' என்று ரியோ பன்மையாகக் கூறியது பாராட்டப்படவேண்டிய விஷயம். அதற்காகவே ரியோவிற்கு 79 மதிப்பெண்கள்.
சுரேஷ் (39 டூ 52) - வீட்டிற்குள் வில்லன் போலப் பேசிவிட்டு, கமல் முன்பு மண்டியிடுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், மனதாரத் திருத்திக்கொள்வேன் என்று எல்லோர் முன்னிலையிலும் ஒப்புக்கொள்வதற்கு உண்மையில் தைரியம் வேண்டும். அதற்காக 52 மதிப்பெண்கள்.
ரேகா (62 டூ 68) - ஆரம்பத்தில் அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இங்கு அந்த பருப்புலாம் வேகாது என்று தெரிந்ததும், தன்னை மாற்றிக்கொண்ட விதம் சிறப்பு. என்னதான் இருந்தாலும் இந்த வீட்டிலேயே அதிக அனுபவமிக்க ஆர்ட்டிஸ்ட் ரேகாதான். அந்த எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக மாறியிருப்பது நல்ல செயல். அதற்காக 68 மதிப்பெண்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/5-9-300x167.jpg)
ரம்யா பாண்டியன் (55 டூ 49) - வீட்டின் தலைவராக என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. தலைமை வகிக்கும் பண்பு இல்லாதது போல தோன்றுகிறது. வீட்டிலிருக்கும் பெரியவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் எந்தவித நடவடிக்கையோ, அல்லது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே எழாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. இப்படி தலைவர் பதவியில் இருக்கும் ரம்யா அவருடைய பதவியை சரியாக உபயோகிக்காத காரணத்தினால் 49 மதிப்பெண்கள்.
அனிதா (65 டூ 54) - முடிந்துபோன விஷயத்தை திரும்பத் திரும்ப பேசவேண்டும் என்றில்லை. என்றாலும், அவருடைய சத்தம் குறைவாகவே இருந்தது. இரண்டாவது முறையும் சமாதான கோடியை தூக்கியது அனிதாதான். ஆனால், அதனை கடைபிடிக்க வேண்டுமே. மன்னிப்பு கேட்பது மறுமுறை அதே தவறை செய்யாமல் இருக்கதான். ஆனால், மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்திற்கு சண்டை போடுவது, மனதார மன்னிப்புக் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அதனால், 54 மதிப்பெண்கள்.
மற்றவர்களின் ஸ்கோர்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆஜீத், கேபி, சம்யுக்தா, ஷிவானி உள்ளிட்டவர்கள் மிங்கில் ஆவதில் இன்னும் சிரமப்படுகிறார்கள் போலவே! சரி வரும் வாரங்களில் பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.