Bigg Boss 4 Tamil Review : பழைய போட்டியாளர்களின் வருகை மீண்டும் பிக் பாஸ் வீட்டின் எண்ணிக்கையை முதல் நாளுக்குக் கொண்டுசென்றது. ஏதாவது சுவாரசியமாக நம் முன்னாள் போட்டியாளர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. வீட்டை விட்டு வெளியேறும்போது லவ் பெட் கேங் தாங்கள் புரிந்துகொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு வெறும் எதிர்பார்ப்பாக மட்டுமே இருக்கிறது. வெளியே சென்று உள்ளே திரும்பியவர்களில் யாரும் தாங்கள் செய்த தவறை திருத்திக்கொண்டதாகவோ, குறைந்தபட்சம் ஒத்துக்கொண்டதாகவோ தெரியவில்லை. மாற்றங்கள் இல்லாமல் போனதே மீண்டும் சலிப்பை கொடுக்கிறது.
அனைவரும் மாஸ்டர் படத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், 'வாத்தி ரைடு..' பாடல் தொடங்கி மாஸ் பாடல்களை ஒன்றிணைத்துக் குத்து பாடல்களை ஒளிபரப்பி எழுப்பிவிட்டார் பிக் பாஸ். தனிமையில் இருக்கும் ஆரி செய்வதறியாது வீட்டைக் கூட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தார். இதனை கவனித்த சோம், தங்களோடு இணைந்துகொள்ளுமாறு ஆரிக்கு அழைப்புவிடுத்தார். அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சமாளித்தபடி இருந்தார் ஆரி. நிகழ்ச்சி முடியும் தருணத்தில் மனஉளைச்சலின் உச்சிக்குச் செல்கிறாரோ என்கிற சந்தேகம்தான் ஏற்படுகிறது. ஒருவேளை 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுவாரோ!
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari
வேல்முருகன், சனம் ஷெட்டி, ஆஜீத், சுச்சி, சம்யுக்தா என வரிசையாக ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் ஒவ்வொருவர் என்ட்ரியாகினர். ப்ப்பா.. ஆரிக்கு இப்போதுதான் உயிரே வந்திருக்கும்போல. வேல்முருகனை கட்டித்தழுவிய விதம், 'உங்களுக்காகத்தான் ப்ரோ வந்தேன்' என்ற சனமின் வார்த்தைகள், சுச்சியை தூக்கிய தருணம் என ஆரியின் முகம் பிரகாசமாய் மிளிர்ந்தது.
போட்டியாளர்கள் நன்றாக விளையாடிய (நம்பிடுங்க) விளையாட்டுகளை மீண்டும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. வேற கன்டென்ட்டே இல்லையா பிக் பாஸ்? இப்படி பண்ணுறீங்களே பாஸு. என்னதான் ஆச்சு அர்ச்சனாவுக்கு! இருக்கிற இடம் தெரியாமல் அமர்ந்திருந்தார். வழக்கம்போல சுச்சி பாலாவோடு ஒட்டிக்கொண்டார். சம்யுக்தாவை கண்டதும் பாலா கண்ணீர் சிந்தியது, ஏகப்பட்ட மைண்ட் வாய்ஸ்களை ஒரே நேரத்தில் ஓடச்செய்தது.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
'ஏன் ஒழுங்கா விளையாடல?' என்று தன் கணவர் மற்றும் மகள் கோபித்துக்கொண்டனர் என்பதை போட்டுடைத்து, கடந்து வந்த பாதை டாஸ்க்கில் சொல்ல மறந்த கதையைக் கூறி கண்ணீரில் மூழ்கினார் ரேகா. விளையாட்டில் ஆளையே காணோமே என்று தன் மனைவியின் ஃபீட்பேக்கை நகைச்சுவையாகக் கூறி நீண்டநாள் கழித்து அனைவரையும் மனம் விட்டுச் சிரிக்கவைத்தார் வேல். 'எங்கடா ரெண்டு மாசமா போயிருந்த? ' என்று தன் குடும்பத்தினர் தேடினார்கள் என்றுகூறி ஆஜீத்தும் சரண்டர் ஆனார்.
நூறு நாள்கள் கொண்டாட்டத்திற்கான ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. சாரி சாரி ரியோவிற்கான வாக்கு சேகரிப்பு பிரச்சார காணொளி ஒளிபரப்பப்பட்டது. லவ் பெட் கேங் மீண்டும் உள்ளே நுழைந்ததற்கான சப்போர்ட் போலவே இருந்தது அந்த காணொளி. யாருடைய ஆதரவையோ திசைதிருப்புவதற்குத் தரமான வீடியோவாக அமைந்தது. இதற்கிடையில் சனமிடம் மன்னிப்பு கேட்ட பாலாவுக்கு என்னதான் தேவையாம்? ஓஹோ பெர்ஃபாமன்ஸா! நடக்கட்டும் நடக்கட்டும்...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"