Bigg Boss 4 Tamil review : ‘ப்ப்ப்பா… ஷிவானிக்கு பதிலா ஷிவானியோட அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்திருக்கலாம்’ இதுதான் நேற்றைய எபிசோட் பார்த்த பலரின் மைண்ட் வாய்ஸ். அம்மான்னா சும்மாவா என்கிற ரேஞ்சில் சமூக வலைத்தளங்களில் ஷிவானி அம்மாவுக்கு ஆர்மி இல்லாத குறைதான் போங்க. ‘நம்ம மனசுல இருந்த குறையெல்லாம் அப்படியே புட்டு புட்டு வெச்சுட்டாங்க’ என்ற நிம்மதியில் உறங்கச் சென்றவர்கள் பலர். ஆனா, இந்த பாலா என்னதான் பண்ணாரு? பார்த்துடுவோம்!
‘என்னோட ராசி நல்ல ராசி..’ பாடலோடு விடிந்த எண்பத்து ஆறாம் நாள், நேரடியாக ஃப்ரீஸ் டாஸ்க்கிற்கு கூட்டிச் சென்றது. இயல்பைவிட பிக் பாஸ் கொடுக்கிற பில்டப்தான் நம்மள ரொம்ப எமோஷனல் ஆக்குது. அப்படிதான் ஃப்ரீஸாகி இருந்த ஷிவானியை உசுப்பிவிட்டது ‘ஆராரோ ஆரிராரோ’ பாடல். பாடலோடு தன் தாயின் என்ட்ரியை பார்த்த ஷிவானி ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டார். எடுத்த எடுப்பிலேயே “உன்கூட தனியா பேசணும்’ என்று ஷிவானியைக் கூட்டிச்சென்று வேற லெவல் டோஸ் கொடுத்தார் ஷிவானியின் தாய்.
அவரிடம் வழக்கமான தாயின் கோபத்தை நம்மால் உணர முடிந்தது. தன் மகள் மீது வைத்திருந்த அதிகப்படியான எதிர்பார்ப்பே அவரை கடுஞ்சொற்கள் பயன்படுத்தும் அளவிற்கு கொண்டுச்சென்றது. பாலாவோடு நேரம் செலவழிப்பதை முதன்மையாய் வைத்திருப்பவர் தன்னைப்பற்றியும் தன் உடல்நலம் பற்றியும் தன் மகள் கேட்கவில்லையே என்கிற ஆதங்கமும் அவரிடம் வெளிப்பட்டது. இதற்கிடையில் பாலாவின் முகம் வாடிப்போயிருந்ததையும் கவனிக்க முடிந்தது. இதைத்தானே ஆரியும் பலமுறை சொன்னார். அப்போது மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஏன்! சுச்சி வீட்டிற்குள் வந்தபோதே இருவரையும் எப்படி வெளியே பார்க்கிறார்கள் என்று கூறினார். ஆனால், அதற்குப்பிறக்குதான் இருவரும் இன்னும் நெருக்கமாகப் பழகவே ஆரம்பித்தனர். இதைச் சொன்னால் ஒத்துக்கவே மாட்டாங்களே! வளருங்க பாஸு.
ஷிவானியின் அம்மா ஒரு விநாடிகூட பாலாவை பார்த்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். வீட்டை விட்டுச் செல்லும் வரையில் அவருடைய கவனம் பாலா பக்கம் திரும்பவேயில்லை. இது பாலாவுக்குப் பெரிதளவில் நோஸ் கட் மொமென்ட். ஷிவானி அம்மாவின் என்ட்ரி ஷிவானியைவிட பாலாவைத்தான் அதிகம் பாதித்திருக்கிறது. அது அவருடைய கண்ணீரிலேயே தெரிந்தது.
இதுநாள் வரை போட்டியாளர்கள் மீது நமக்கு இருந்த பிம்பம் ஃப்ரீஸ் டாஸ்க்கிற்கு பிறகு மாறக்கூடும். அப்படிதான் பாலாவின் சகோதரரின் என்ட்ரி உருவாக்கியது. மிகவும் பாசிட்டிவ்வான என்ட்ரியாகவே பாலாவின் அண்ணன் வருகை இருந்தது. இவர்களுடைய உரையாடல்களும் சாஃப்ட்டாகவே இருந்தன. ஆனா, ‘கப் முக்கியம் பிகிலு’ என்று ஒரு ஹின்ட்டையும் கொடுத்துவிட்டுதான் வெளியேறினார் பாலாவின் அண்ணன் ரமேஷ்.
இரண்டு வித்தியாசமான என்ட்ரியை தொடர்ந்து, போட்டியாளர்களின் எண்ணங்கள் முற்றிலும் மாறியது. ஷிவானி அம்மாவின் என்ட்ரி ஷிவானிக்குள் வேற லெவல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தால், அப்பொழுதும் அழுதுகொண்டேதான் இருக்கிறார். என்னம்மா இப்படி பண்ணுறியேமா! மேலும் ஆறு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரவு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”