Bigg Boss 5 Tamil Ameer Ciby Ticket to Finale Task Priyanka Thamarai : ஆரம்பத்திலிருந்தே இந்த ஃபினாலே டாஸ்க் எல்லாமே மிகவும் மொக்கையாக இருக்கிறது. என்னதான் ஆச்சு என்று யோசித்துக் கொண்டிருக்கையில்தான் புரிகிறது, இந்த டாஸ்க் எல்லாமே அமீரை வெற்றிபெற வைப்பதற்காகவே வைக்கப்பட்டன என்று. ஆம், இந்த சீசனில் ஃபினாலே டாஸ்க் போன்று வேறு எந்த சீசனிலும் இல்லை. அந்த அளவிற்கு மோசமானதாக இருக்கிறது.
சென்ற சீசனில், மிகவும் கடுமையான டாஸ்க் வைத்து உடல் வலிகொண்டு நடக்கமுடியாத அளவிற்கு போட்டியிட்டனர் ரம்யா பாண்டியனும் ஷிவானியும். ஆனால் இம்முறை, அமீருக்கு நடக்க முடியாத காரணத்தால், உடலை வருத்திக்கொள்ளாமல் வார்த்தை ஜாலங்களில் எந்த அளவிற்கு விளையாட முடியுமோ அந்த அளவிற்கு விளையாடி உள்ளனர் போட்டியாளர்கள்.
சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது இந்த வாரம் அவர்தான் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று. இன்றைக்கு நடக்கவிருக்கும் ஃபினாலே டாஸ்க்கில் நிச்சயம் அமீர்தான் வெற்றிபெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. இனி என்னதான் அந்த வீட்டில் நடக்கும்? மொத்த சீசனிலும் விறுவிறுப்பாக நகரும் வாரம் என்றால், அது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்தான். ஆனால், அதுவே இப்படி சொதப்பினால், என்னவென்று சொல்வது!
டாஸ்க் ஆதங்கம் ஒரு பக்கம் என்றால், மற்ற நேரங்களில் போட்டியாளர்கள் புறம் பேசுவதைத் தவிர வேறு எதுவும் சுவாரசியமாக செய்ய மாட்டுகிறார்களே! இறுதி கட்டம் வந்த பிறகும், புறம் பேசுவதை யாரும் நிறுத்தவில்லை. அமீர் - பாவனி பிரச்சனை ஒருவழியாக முடிந்தது என்று நினைத்தால், பாவனியே நேற்றைய டாஸ்க்கில் இழுத்துவிடுகிறார். இதற்குதான் முந்தைய டாஸ்க்கில் அவ்வளவு சண்டைகள் போட்டார்களா என்று யாருக்கும் தோன்றாமல் இருந்திருக்காது. அப்போது சிபியிடம் கொதித்த சஞ்சீவ், இந்த வாரம் ஏன் அவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அப்படி என்றால் அவருடைய நோக்கம், தன் குடும்பத்தை வீட்டிற்குள் அழைத்து வருவது மட்டும்தானோ?
ஒருபக்கம் தன்னை முதல் நாளே இந்த ஃபினாலே டாஸ்க்கிலிருந்து அனுப்பிவிட்டார்களே என்று ஒருபக்கம் நிரூப் கொதித்து ராஜுவிடம் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் தாமரையிடம் பிரியங்காவைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், ப்ரியங்காவோ தனியாக கேமரா முன்பு பேசி புலம்பிக்கொண்டிருக்கிறார். போதாதுக்கு தாமரையுடன் பேசிவிடவேண்டும் என்று ஒரு பக்கம் இருந்தாலும், தாமரையாக வந்து பேசும் வரை தான் பேசப்போவதில்லை என்று புலம்பிக்கொண்டே, தாமரைக்கு சாக்லேட் வழங்குகிறார்.
ஆனால், தன்னை பார்த்து 'த்து' என்று துப்பிவிட்டு எப்படி இப்படியெல்லாம் மறந்துவிட்டு உடனே நடந்துகொள்ள முடிகிறது என்கிற குழப்பத்தில் தாமரை சுற்றித் திரிகிறார். போகிற போக்கைப் பார்த்தால், இனி வரும் வாரத்தில் கொடுக்கப்படும் 5 லட்சத்தைத் தூக்கிக்கொண்டு தாமரை கிளம்பிவிடுவாரோ? எந்த கன்டென்ட்டும் கிடைக்காமல், ஏனோ தானோ என்று நகர்ந்தது நேற்றைய பிக் பாஸ் எபிசோட். ஆனால் ஒன்று, இந்த சீசனில் யார் வெற்றிபெறப்போகிறார் என்பது கணிக்க முடியாமல் இருப்பதுதான் இந்த சீசனில் சவாலான விஷயம். யார் வெற்றிபெறுவார் மக்களே? உங்கள் சாய்ஸ் யார்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil