Bigg Boss 5 Tamil Day 1 Review Niroop Nadiya Chang Abinai Tamil News : உண்மையில் இது பிக் பாஸ் வீடுதானா? என்று சந்தேகமே வந்துவிட்டது. அந்த அளவிற்குப் பாசப்பிணைப்புடன் பயணித்தது நேற்றைய எபிசோட். நிரூப், அபிநய் மற்றும் நடியா சங் ஆகியோர்களின் கதை, ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல, எல்லோரையும் நெகிழ வைத்தது. அதிலும், பிரேக் அப் ஆன போதிலும் நிரூப் தன் முன்னாள் காதலியை விட்டுக்கொடுக்காமல் பேசிய விதம், தங்களின் வாழ்க்கையில் நடியா, அபிநய் வளர்ச்சிக்குத் தோள் கொடுப்பதில் அவரவர்களின் துணைவர்கள் பங்கு என மிகவும் நேர்த்தியாகப் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டுக்குரியது.

‘மரணம் மாஸு மரணம்..’ பாடலோடு விடிந்த 11-ம் நாள், மிகவும் பாசிட்டிவிட்டியோடு கடந்தது. பாவனியின் உயரம் பற்றிய பஞ்சாயத்தைத் தொடர்ந்து, நிரூப்பின் கதை ஆரம்பமானது. நாம் எல்லோரும் ஏற்கெனவே ப்ரோமோவில் பார்த்தது போல யாஷிகாவினால்தான் தான் மாடலிங்கில் நல்ல நிலைமைக்கு வர முடிந்தது என்று சொன்ன விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. அதிலும், சமீபத்தில் யாஷிகா மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்த போதிலும், அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார் நிரூப். மேலும், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு டிப்ளமோ சேர்ந்தது, அங்குத் தமிழ் தெரியாது என்று பொய் கூறி தான் இருக்கும்போதே மற்றவர்கள் தமிழில் அவரைப் பற்றியே அவதூறாகப் பேசியதைக் கேட்டது என நிரூப் கூறிய அனைத்தும் நிதர்சனமாகவும் நெகிழ்ச்சியாகவுமே இருந்தது.

நிரூப்பின் இந்தக் கதையைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கினாலும், பிரியங்காவிற்கு எக்ஸ்ட்ரா சந்தோஷம். ‘ரொம்ப அழகா பேசுனடா’ என்று புகழாரம் சூட்டினார். என்றாலும், இந்தக் கதையின் தொடர்ச்சியாக பிரியங்கா, நிரூப் ஆகியோர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருக்க, அக்ஷரா மேக் அப் செய்வதை க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டினார் குசும்புக்கார பிக் பாஸ். என்றாலும், அந்த நேரத்தில், ‘திரும்பப் பேசு, ஆனால் திருமணம் செய்துகொள்ளாதே’ என்று பிரியங்கா நிரூப்பிற்கு கொடுத்த அட்வைஸ் நம்மாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.
அடுத்ததாக அபிநய் கதை. ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான இவருக்கு, சினிமா துறையில் சாதிப்பதுதான் கனவு. ஆனால், அதற்கான முயற்சியில் தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருந்தவருக்கு, உறுதுணையாக இருந்தது அபிநயின் மனைவிதான். தான் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்று பத்தாண்டுகளாகக் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டுள்ளனர். இப்படி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான எல்லா படிகளிலும் உறுதுணையாக இருந்த தன் மனைவிக்கு ஒரு நல்ல கணவராக இல்லை என்ற வருத்தம் இன்றளவும் அபிநய்க்கு உண்டு. அந்தக் காயத்தின் வெளிப்பாடாக வேறொரு கணவர் கிடைத்திருக்க வேண்டும் என்று அபிநய் கூறியது, வலிகளின் உச்சம்.

இறுதியாக நடியா சங், அவருடைய தாய் அவருக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் செய்த கொடுமைகளைப் பட்டியலிட்டனர். அந்த சமயத்தில் தன் தாயையும் எதிர்த்துப் பேசிய காரணத்திற்காகத் தன்னைப் பிடித்திருக்கிறது என்று கூறியவரின் கைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டார் நடியா. அவரையே திருமணம் செய்து, மாடலிங் உலகிற்கு அறிமுகமும் ஆனார். இப்படி தான் கடந்து வந்த கஷ்டங்களைக் கோர்வையாகக் கூறி தன் கணவருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

விஜயதசமி கொண்டாட்டத்திற்காக, தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ளும் வேலைப்பாடுகளில் பிஸியாகிவிட்டனர். ‘எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யாதே’ என்று பாவனிக்கு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள் அபிநய். இப்படியாக, பிக் பாஸ் வீடா இது என்று வியக்க வைக்கும் அளவிற்கு மிகவும் பாசிட்டிவ்வான எபிசோடாக நிறைவடைந்தது நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil