/tamil-ie/media/media_files/uploads/2021/11/Ac-1.jpg)
Bigg Boss 5 Tamil Day 52 Review Akshara Ciby Argument Tamil News
Bigg Boss 5 Tamil Day 52 Review Akshara Ciby Argument Tamil News : முதல் நாள் பிரியங்காவின் அட்ராசிட்டி என்றால் நேற்று அக்ஷராவின் ருத்ரதாண்டவம். உண்மையில் இவர்கள் டாஸ்க்கிற்காக செய்கிறார்களா அல்லது முன் விரோதத்தின் காரணமாக வெடிக்கிறார்களா என்பது புரியாத புதிராக இருந்தது. ஆனால், சந்தேகமே வேண்டாம். இந்த வாரம் டாஸ்க் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதன் பெயரில் பனிப்போர்தான் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி என்னதான் ஆச்சு அக்ஷராவிற்கு? அவர் செய்தது சரியா? அலாசுவோம்...
முந்தைய நாளில் எல்லை மீறி சேட்டை செய்த பிரியங்கா மற்றும் பாவனியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி தண்டனை கொடுத்தார் வார்டன் சிபி. உள்ளே வருவதற்கு மன்னிப்பு கடிதம் வேண்டும் என்று கூற, முடியவே முடியாது என்று அதற்கும் அடம் பிடித்தார் பிரியங்கா. பாவனியோ மன்னிப்பு கடிதம் என்கிற பெயரில் துண்டு சீட்டை ராஜுவிடம் கொடுத்து அனுப்பினார். இதெல்லாம் செல்லாது செல்லாது என்று அந்த துண்டு சீட்டை நிராகரித்துவிட்டார் சிபி. சரி நாமேலே பொய் சொல்லி பார்ப்போம் என சிபியே பிரியங்கா மற்றும் பாவனியிடம் சென்று மன்னிப்பு கடிதத்தைக் கொடுக்குமாறு கோரினார். அதையும் மறுத்துவிட்டு இருவரும் வெளியிலேயே உறங்கினார்கள்.
சேட்டை என்கிற பெயரில் சில விஷயங்கள் வன்முறை போன்று தோன்றினாலும், இரவு நேரத்தில் தலையணையால் விளையாடியது, வார்டன் உருவத்தை வரைந்து ஆங்காங்கே வைத்தது, வார்டன் வேண்டாம் என்று எழுதியது, சிபி மற்றும் ராஜுவின் முகத்தில் மார்க்கரால் வரைந்தது என ஐக்கி பெரியின் இந்த கியூட் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பிளான்ட் தலைமுடியைக் கறுப்பாக்கச் சொன்னதற்கு, தாமரைக்கு மட்டும் சுடிதார் அணிய பெர்மிஷன் உண்டு, தனக்கு இல்லையா என்று கேள்வி கேட்டுக் கோபப்பட்டது உண்மையில் நேர்மையாக இருந்தது. அதானே, இதற்கு விடை சொல்லுங்கள் பிக் பாஸ். அதென்ன தாமரைக்கு மட்டும் பாரபட்சம்!
விடிந்ததும், ஐக்கி செய்து வைத்த அனைத்து வேலைகளுக்கும் நன்றாக வெளுத்து வாங்கப் போகிறார் என்று நினைத்தால், அனைத்தையும் ரசித்துவிட்டு அவற்றைப் பற்றி மாலை வேளையில் பேசிக்கொள்ளலாம் என்று மிகவும் முதிர்ச்சியான முடிவை எடுத்தார் வார்டன் சிபி. அவர் நினைத்திருந்தால் காலையிலேயே மாணவர்களின் மனநிலையை சிதைக்கும் வகையில் நடந்திருக்கலாம் ஆனால், அப்படி செய்யாமல் அமைதியாக அந்த சூழ்நிலையைக் கையாண்டார். ஆனால், இந்த வார்டன் மேல்தான் சரமாரியாக வார்த்தைகளை வீசினார் அக்ஷரா.
ஆம், ஐந்து திருக்குறள் மனப்பாடம் செய்து சொல்லவேண்டும் என்று சொன்னது ஒரு குத்தமா என்று சிபி நினைக்கும் அளவிற்கு சாதாரண பிரச்சினையை ஊதி பெரிசாக்கினார் அக்ஷரா. யாருக்குமே சட்டென 5 திருக்குறள் மனப்பாடம் செய்வது கடினம்தான். அதிலும், மொழி தெரியாதவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். என்றாலும், இதனை வெறும் ஒரு டாஸ்க்காக பார்த்திருந்தால் நிச்சயம் இந்த அளவிற்கு அக்ஷரா வெடித்திருக்க மாட்டார். ஆனால், சிபி வேண்டுமென்றே தன்னை டார்கெட் செய்கிறார் என்கிற எண்ணம் அக்ஷராவின் ஆழ்மனதிற்குள் ஆணி அடித்ததுபோல பதிந்துவிட்டது. அதான், கோபத்தில் வார்த்தைகளை சரமாரியாகப் பயன்படுத்தினார்.
நம்ம தமிழ் டீச்சர் ராஜு சொல்லிக்கொடுத்த, அடக்கம் .. என்று தொடங்கும் குரலை அப்போதே மறந்தார் அக்ஷரா. தன்னால் முடியாது என்பதை தன்னுடைய தமிழ் வாத்தியாரிடம் பொறுமையாக சொல்லியிருக்கலாம். தன்னால் உடனே 5 குரல்களை மனப்பாடம் செய்து சொல்லமுடியாது என்றால், சிறிது நேரம் தேவைப்படும் என்றோ அல்லது மாலைக்குள் சொல்லிவிடுவேன் என்றோ சொல்லியிருக்கலாம். ஆனால், இந்த பசி வந்ததால் அவர் அவராகவே இல்லை என்று சொல்லலாம். தன்னால் எழுதினால்தான் மனப்பாடம் செய்ய முடியும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகும் அக்ஷராவிற்கு தமிழ்ப் பாடம் கடினமாக இருந்திருக்கும்போல. அதான், பசி, தமிழ் மொழி, சிபி மீதான பகை என அனைத்தும் ஒன்றாகி வெடித்துச் சிதறிவிட்டார்.
அதிலும், நாய் போல நடத்துவது, அடிமைத்தனம் என்று சொன்னதெல்லாம் கொஞ்சம் ஓவர். அப்படி சொல்கிற அளவிற்கு சிபி எதுவும் பெரிதாக சொல்லவில்லை. இதற்கு முன் போர்டிங் பள்ளியைப் பற்றிக் கேள்விப்படாத அக்ஷராவுக்கு இது புதிதாக இருக்கும் என்று நினைத்தால், அப்படி அல்ல. சிபி மீதான கடுப்புதான் அவ்வளவும். இதையே வருண் சொல்லியிருந்தால் நிச்சயம் இந்த அளவிற்கு ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டார் அக்ஷரா. தேவையில்லாமல் அவ்வளவு கோபப்பட்டு பொருள்களை உடைத்து, மைக் கழட்டிவிட்டு வேற லெவலில் அட்ராசிட்டிகளை செய்தார் அக்ஷரா. இதெல்லாம் கேட்கமாடீங்களா பிக் பாஸ்? ஓஹோ இதைத்தான் ஒருவேளை கன்ஃபெஷன் அறைக்கு அக்ஷராவை மட்டும் தனியே கூட்டிச்சென்று சொல்லியிருப்பாரோ!அதைமட்டும் ஏன் எடிட்டரே எடிட் பண்ணீங்க?
அக்ஷராவின் இந்த டிராமாவால் நேற்று மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாமலேயே போய்விட்டது. யார் அன்றைய நாளின் சிறந்த மாணவர் அவார்ட் வாங்கினார்கள் என்பதும் தெரியவில்லை. பாவனி மறைத்து வைத்த வார்டனின் சொத்து அதான், அவருடைய நீண்ட கொம்பு அல்லது குச்சி கிடைத்ததா என்பதும் கேள்விக்குறியே. இதற்கெல்லாம் இன்று விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருந்தாலும், இவ்வளவு அக்கப்போர் தேவையில்லாதது. இதற்கிடையில் அபிஷேக், புதிய வரவு அமீர் மறைந்தே போய்விட்டார்கள். எது எப்படியோ, ஆனாலும் இவ்வளவு முன்கோபம் உடம்புக்கு நல்லதல்ல அக்ஷரா!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.