Bigg Boss 5 Tamil Day 53 Review Sanjiv entry Priyanka Annaachi excitement : மற்ற சீசன்களில் இந்த பள்ளிப் பருவ டாஸ்க் மிகவும் சுவாரசியமாகவும் ஏராளமான நினைவலைகளை நமக்கு இட்டுச் செல்லும் வகையிலும் இருந்தன. ஆனால், இந்த சீசனில் சேட்டைகளைவிட சண்டைகள் அதிகம் இருந்தது. இதனால் சுவாரசியம் குறைவாகவே காணப்பட்டது. என்றாலும், அதனை ஈடுசெய்யும் வகையில் நேற்றைய எபிசோட் இருந்தது.
யாரது குச்சியை ஒளித்து வைத்திருப்பது? முகத்தில் மார்க்கர் வைத்துக் கிறுக்கியது யார்? என்றெல்லாம் ரெய்டு, இல்லை இல்லை அந்த அளவுக்கு இல்லை.. சும்மா முந்தைய நாள் திருட்டுப்போன பொருள்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர் வார்டன் டீம். அதில் சரண்டரான ஐக்கியிடம் உறுதிமொழியை வாங்கிக்கொண்டு, வெளியே உறங்கவேண்டும் என்று தண்டனையும் கொடுத்தனர். ஐக்கிக்கு கம்பெனி கொடுக்க, அன்றைய நாளில் பொருள்களை சேதப்படுத்திய அக்ஷராவை தேர்வு செய்து வீட்டைவிட்டு அனுப்பினர்.
மேலும், அந்த நாளின் சிறந்த மாணவி என்று தாமரை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இவர்கள் அப்படி என்ன டாஸ்க் செய்தார்கள் என்பதெல்லாம் நமக்குதான் காட்டவே இல்லை. நாங்கல்லாம் பாவமில்லையா? அதுசரி, ஏதாவது உருப்படியான கன்டென்ட் இருந்திருந்தால், அதை ஒளிபரப்பியிருப்பீர்கள். சண்டை காட்சிகள் மட்டுமே ஏதோ ஓரளவிற்குப் பேசப்படுவது போல இருப்பதனால், அதைத்தானே போட்டுக் காட்ட முடியும். போதாத காலம்.. போதும் போதும்!
53-ம் நாள் ‘அடியே அடியே இவளே..’ பாடலோடு கோலாகலமாக ஆரம்பமானது. அதனுடன், அனைவர்க்கும் நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்றிணைந்து நடனமாடிய காட்சி உண்மையில் அவ்வளவு அழகு. இதனைத் தொடர்ந்து தான் எந்த ஒரு சேட்டை வேலையும் செய்யவே இல்லை, எல்லாத்துக்கும் காரணம் வருண் மற்றும் பாவனிதான் என்று அவர்கள் மேல் பழி போட்டுவிட்டுக்குச் சென்றார் ஐக்கி. யாருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ, இந்த பள்ளிப் பருவ கெட்-அப் ஐக்கிற்கு பக்காவாக சூட் ஆகியிருக்கிறது.
ராஜுவின் திருமண ஷூவில் யாரோ தங்களின் கைவரிசையைக் காண்பிக்க, அதையும் ஈசியாக எடுத்துக்கொண்டார். இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு என்கிற மைண்ட் வாய்ஸ் எழாமல் இல்லை. ஒருவேளை இமய மலைக்குச் சென்று பாபாவின் ஆசீர்வாதம் பெற்று ராஜு வந்திருப்பாரோ! கோபமே வராமல், இவ்வளவு சாந்தமாக அதுவும் பிக் பாஸ் வீட்டில் உலாவந்துகொண்டிருக்கிறார். ஆச்சரியம்!
இதனைத் தொடர்ந்து, பள்ளியில் தமிழ் வகுப்பில் டங் ட்விஸ்டர்ஸ் விளையாடினார்கள். அதில், அணைத்து ட்விஸ்டுகளையும் அசால்ட்டாக சொல்லி ‘வாவ்’ என ஆச்சரியப்படுத்தினார் அண்ணாச்சி. அக்ஷராவும் தனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சரியாக செய்தார். தாமரையை ஓவியாபோல வரவேண்டும் என்று நினைத்திருப்பார்களோ! நிச்சயம் நம்ம ஓவியாவின் ‘கொக்கு நட்ட கொக்கு..’ பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
இதையடுத்து, வீட்டில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும் டாஸ்க் ஆரம்பமானது. அப்பா, அம்மா, அண்ணா என ஆள் ஆளுக்கு ஒவ்வொருவரைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தைப் படித்தவர்களை மட்டும் நமக்கு டெலிகாஸ்ட் செய்தனர். மற்றவர்களின் கடிதம் நிச்சயம் அன்சீனில் இருக்கும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே. அவர்கள் குடும்பம் பிறகு ஏமாந்துவிடக்கூடாது அல்லவா!
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கன்டென்ட் கிங் அபிஷேக்கிற்கு என்னதான் ஆச்சு? இரண்டாம் முறை வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து மிகவும் அமைதியாகவே இருக்கிறார். வேற லெவலில் ரைடு கொடுத்திருப்பார்களோ! அதுக்குன்னு சத்தமே வராமல் இருந்தால், கன்டென்ட் உங்களுக்குக் கிடைக்காது பிக் பாஸ். அவரை பழையபடி பேச சொல்லுங்கள்! புதிதாக வந்த அமீரும் எதுவும் பேசாமலேயே இருக்கிறார்.
பிறகு, இறுதி நாளான நேற்று சிறந்த மாணவர்களுக்கான அவார்ட்ஸ் வழங்கப்பட்டது. அதில், சிறந்த மாணவராக நிரூப், தமிழ் வகுப்பில் சிறந்த மாணவராக அண்ணாச்சி, நடனத்தில் சிறந்தவர் ஐக்கி, விளையாட்டில் சிறந்த மாணவர் வருண் எனத் தேர்வு செய்யப்பட்டு, இவர்கள் அனைவர்க்கும் 5 ஸ்டார் சாக்லேட் வழங்கப்பட்டது. இறுதியாக, கனா காணும் காலங்கள் பாட்டோடு இந்த டாஸ்க் நிறைவடைந்தது. எத்தனை முறை கேட்டாலும், இந்தப் பாடலுக்குத் தனி பவர் உண்டு. எப்படியும் நம்மைப் பள்ளிப் பருவத்திற்குக் கொண்டு சென்று விடும். குறிப்பு : இது 90’ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே பொருந்தும். சும்மா இருப்பார்களா நம் மாணவச் செல்வங்கள்? தங்களைப் பாடாய்ப் படுத்திய ஆசிரியர்கள் மற்றும் வார்டனை அவர்கள் வைத்து செய்துவிட்டனர். இப்படியாக நேற்றைய தினத்தின் பள்ளி பருவ டாஸ்க் நிறைவடைந்தது.
அடுத்ததாக, ‘சும்மா இருடா’ டாஸ்க்கில் வீட்டில் என்ன நடந்தாலும் யாரும் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் நன்றாகவே அனைவரும் நடித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் நாம் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மூன்றாவது வைல்ட் கார்ட் சஞ்சீவின் என்ட்ரி. சும்மா இருடா டாஸ்க் முடிந்துவிட்டது என்றாலும், உண்மையில் நிறைவடைந்துவிட்டதா என்கிற குழப்பத்தில் அனைத்து ஹவுஸ்மேட்ஸ் இருக்க, சஞ்சீவை எப்படி வரவேற்பது என்று செய்வதறியாது நின்றனர். அதிலும், அண்ணாச்சியின் முழிப்பும் தவிப்பும் பார்ப்பதற்கு அழகு. பிறகு, வீட்டில் உள்ள அனைவரின் பற்றிய சஞ்சீவ் தன் பார்வையைப் பகிர்ந்துகொண்டபடி நேற்றைய எபிசோட் முடிந்தது. எது எப்படியோ, சஞ்சீவிற்கு நிச்சயம் விஜய் டிவியில் தொகுப்பாளர் வேலை ரெடி!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil