Bigg Boss 5 Tamil Kamal Hassan Akshara Thamarai Raju Madhumitha : வார இறுதி என்றாலே வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்ப்பு இரட்டிப்பாகிவிடும். கமல் என்ட்ரி என்றால் சும்மாவா! நம் சார்பாக நம்முடைய மைண்ட் வாய்ஸ் எல்லாம் பேசுவார் என்கிற எண்ணம் ஆட்டோமேட்டிக்காக உருவாகும். இப்படியெல்லாம் பெரிய பில்ட் அப் கொடுத்து மணடஹித் தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும். நாற்பது நாள் ஆகியும் ஒரு குறும்படம் இல்லை, சூடான விவாதங்கள் இல்லை. இந்த சீசன் எதை நோக்கித்தான் பயணிக்கிறதோ என்பது மட்டும்தான் நம் அனைவரின் மைண்ட் வாய்ஸ் இப்போது.
எப்போதையும்விட கடந்த வாரம் சண்டைகள் நிறைந்த வாரம் என்றாலும், அவை அனைத்தும் அவர்களுக்குள்ளேயே பேசி சால்வ் ஆகிவிட்டதால், அதனை பெரிதாக பஞ்சாயத்துப் பண்ணும் அளவிற்குக் கமலுக்கு கன்டென்ட் இல்லை. இருந்தாலும், எதையாவது பேசி எபிசோடை நகர்த்தவேண்டுமே என்கிற நெருக்கடியால் நேற்றைய பகுதி தொடங்கியது. ராஜுவை மற்ற ஹவுஸ்மேட்ஸ் குளிர்ந்த நீரால் குளிப்பாட்டிய பிறகு, அண்ணாச்சியைக் குளிப்பாட்டும் நிகழ்வோடு ஆரம்பமானது. இசைவாணிக்கும், அண்ணாச்சிக்கும் இருக்கும் பனிப்போரை விட, தாமரைக்கு அண்ணாச்சி மீது என்ன கடுப்போ தெரியவில்லை, மற்ற அனைவரும் அரை மக் தண்ணீரைத் தெளித்து விட்டுச் சென்றால், தாமரை மட்டும் 4 மக் நீரை எடுத்து ஊற்றுகிறார். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுவிட்டு, இறுதியாக எல்லாவற்றையும் தலை மூழ்குகிறேன் என்பதுபோன்று தன் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டு வீரநடை போட்டு வீட்டிற்குள் நுழைந்தார் அண்ணாச்சி.
உடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அண்ணாச்சி தன் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி அவரிடம் அழுதார் தாமரை. இப்படி ஒரு புறம் நகர, தங்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் எண்ணங்கள் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தனர் அக்ஷராவும் சிபியும். அப்போது, தமிழில் கெட்ட வார்த்தை பேசியதுதான் பிரச்சனை என்று அக்ஷரா கூறியது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ஆனாலும், இதுதான் பெரும்பாலான தமிழ் மக்களின் மனநிலையும்கூட. இதைப் பற்றி முழுமையாகக் கமல் பேசாதது ஏமாற்றமே. சிபியிடம் நீண்ட நேரம் உரையாடியவர், அக்ஷ்ராவிடமும் 4, 5 வார்த்தைகள் பேசியிருக்கலாம்.
இந்த பிக் பாஸ் சீசனில் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டவர் மதுமிதா. மொழி பிரச்சனை பிரதானம் என்பதனால் அவருடைய பகுதி இந்நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து குறைவாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல, நெருங்கிய நண்பன் என்றாலும் தவறு செய்திருந்தால் அவருக்கு மதுவின் சப்போர்ட் கிடைக்காது. அந்த அளவிற்கு மிகவும் நேர்மையானவர்.இப்படிப்பட்டவர் எப்படி பிக் பாஸ் வீட்டில் சர்வைவ் செய்ய முடியும்? அதிலும் நிரூப்பிடம் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள் மது. எதுவும் செய்யாமல் மனஉளைச்சலுக்கு செல்லும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் மது. அதனால் கருணை காட்டியது பிக் பாஸ் டீம். ஆம், மதுமிதாவை வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியற்றிவிட்டனர். அப்போ, கடைசி வரையில் அபினையை வெளியேயே விடமாட்டார்கள் போலிருக்கே!
பெண்களின் ஆளுமை பற்றி பாவனி ஏற்கெனவே புலம்பிக்கொண்டிருக்க, கமல் தன் பங்கிற்குப் பெண்ணியம் பற்றிய விரிவுரையைக் கூறினார். எவ்வளவு சொன்னாலும், இந்த சமூகத்தில் பெண்களைப்பற்றிய பார்வை இன்னும் முழுமையாக மாறவில்லை. தன்னுடைய காதலியால்தான் தான் முன்னுக்கு வந்ததாகப் பெருமைப்படும் அதே நிரூப்பிடமிருந்து மற்றொரு பெண்ணை பற்றி தரம் தாழ்த்தி பேசுவது சரியல்ல. இதனை சரியாகவே சுட்டிக்காட்டினார் கமல். என்றாலும், இந்த மனநிலையே நம் சமுதாயத்தின் மனநிலை. அது எப்போது மாறுமோ!
இறுதியாக, ராஜுவிற்கு தண்டனை எல்லாம் கொடுத்தீங்களே ஆனால், அவரைத்தான் மக்கள் முதன்மையாக காப்பாற்றியுள்ளனர் என்கிற தகவலோடு நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது. எப்படியும் அபிநய் அவுட் என்று நினைத்திருக்கையில், மதுமிதாவை ஆட்டத்திலிருந்து தூக்கிவிட்டனர். நாற்பது நாட்களைக் கடந்தும், பெரிதாக சுவாரசியம் இல்லாமலே இந்த சீசன் நகர்கிறது. வைல்ட் கார்டு என்ட்ரிக்கு ஆழ ரெடி என்கிற தகவலும் வெளிவந்திருக்கிறது. இனிமேலாவது ஆட்டம் சூடு பிடிக்குமா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil