Bigg Boss 5 Tamil Kamal Hassan Surudhi Pavani Thamarai Isaivani : ப்ரோமோவை பார்த்த பிறகு இன்று கமலின் வேட்டை ஆரம்பம் என்று நினைத்து எபிசோடை பார்த்தபோது, எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும், பரவாயில்லை என்றே தோன்றியது. அவ்வளவு நேரம் விடாபுடியாக தங்கள் மீது தவறே இல்லை என்று விவாதித்தவர்கள் சட்டென ஆம் தவறுதான் ஐயா எனக் கமல் முன்பு ஒப்புக்கொண்டதினால், ஒளிபரப்பாகவேண்டிய குறும்படம் நின்றது. எப்படி இருந்தது நேற்றைய கமல் ரெய்டு?
சென்ற வாரம் வர எதிரும் புதிருமாக இருந்த பிரியங்கா ராஜு இருவரும் ஒன்றாக மழையில் விளையாடிக்கொண்டிருக்கும் காட்சியோடு ஆரம்பமானது நேற்றைய பிக் பாஸ். பிறகு என்ன வழக்கம் போல தாமரை விஷயத்தில் சுருதி மற்றும் பாவனி தங்கள் பக்கத்தில் இருக்கும் நியாயம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் பக்கம் நிற்கும் ஒரே நபரான மதுமிதா 'ஆமா ஆமா' என்று கூறிக்கொண்டிருக்க, கமல் சொன்னாலும் அவர்கள் செய்ததில் தவறில்லை என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், அடுத்த நாளே அவர்களின் சாயம் வெளுத்தது.
'சமையலறை ஆளுமை இசைவாணியிடம் வந்ததும் போதும், ஆட்டம் தாங்க முடியலபா' என்று மற்ற போட்டியாளர்கள் ஒருபக்கம் கூற, தன்னை யாரும் மதிக்கவே மாட்டிங்குறாங்க என்று இசைவாணி எந்நேரமும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். இசைவாணிக்கு இந்த அதிகாரம் கொடுத்ததிலிருந்து, அண்ணாச்சிக்கு ஏனோ கடுப்பு. ஓவரா பண்ணுவார் பாருங்க எனக்கூறி மற்றவர்களின் மனதையும் கலைத்துவிட்டார். அதுவே, இசைவாணியை மதிக்காமல் போனதற்குக் காரணமாக அமைந்தது. இதில், தன்னை கேட்காமல் கோதுமையை பயன்படுத்தியதாக நிரூப்போடு சண்டை வளர்த்துக்கொண்டார் இசை. அட! இசைவாணியை கேட்டுவிட்டுதான் பயன்படுத்துங்களேன். தேவையில்லாத வாக்குவாதங்கள் எதற்கு? அதுசரி.. கன்டென்ட் முக்கியம் பாஸ்!
கோதுமை பிரச்சனை தொடர்ந்து, நூடுல்ஸ் பிரச்சனை. ஆனால், இம்முறை இசைவாணி அல்ல, தாமரை. ராஜு செய்த நூடுல்ஸை தங்களுக்கு வேண்டுமா என்றுகூட ஏன் கேட்கவில்லை என்று கேட்ட தாமரையை சமாளிப்பதற்குள், ராஜு ஒரு வழியாகிவிட்டார். இப்படி வீட்டில் நடந்த சின்ன சின்ன சண்டைகளைக் கடந்து, நாம அனைவரும் எதிர்பார்த்த கமலின் விஸ்வரூபம் ஆரம்பமானது.
மது மற்றும் இசைவாணியின் கேப்டன்சியில் இருந்த குறைகளைப் பேசிமுடித்த கையோடு நாணயம் எடுக்கவேண்டும் என்கிற நோக்கத்திலேயே அவர்கள் போகவில்லை என்பதை எந்த அளவிற்குப் பொய் உரைத்து, மழுப்பிக் கூற முடியுமோ அந்த அளவிற்கு பாவனியும் சுருதியும் போட்டிபோட்டுக்கொண்டு கமல் முன்பு பொய்களை அள்ளி வீசினர். ஆனால், உங்கள் பிளானிங் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துவிட்டோம். என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா என்று கமல் கூறியவுடன், இருவரும் அப்படியே ஆஃப். 'எவ்வளவு மெதுவா பேசினோம். அப்பொழுதுகூட கண்டுபிடித்துவிட்டார்களே' என்கிற அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாலும், இடைவெளியில் மீண்டும் தங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பாவனி போர்க்கொடி தூக்க, வருண் பொங்கி எழுந்துவிட்டார். ஆஹா... வருணுக்கு பேசுவது மட்டுமல்லாமல் கோபம்கூட வருகிறதே! அடடே!
ஆண்கள் ஒற்றுமையாக இருந்தாலும், தனித்தனியாக விளையாட வேண்டும் என்கிற குறிப்பைக் கொடுத்துவிட்டு, அன்பு, பாசம், நேசத்திற்கு இங்கு முதல் மரியாதை இல்லை என்றும் தாமரையிடம் கூறினார். அதுமட்டுமின்றி, சந்தேகம் இருந்தால்தான் நாம் சொன்னதை மாற்றி மாற்றி பேசுவோம் என்று பாவனியை பார்த்து கமல் கூறியது மக்கள் பலருக்கும் நிம்மதி பெருமூச்சை கொடுத்திருக்கும். 'என்னடா இப்படி ஒட்டுமொத்தமாக தாமரைக்கு மட்டுமே சப்போர்ட் செய்திருக்கிறார், நம்மை எவ்வளவு கேவலமாக பேசினார் தாமரை! அதைப்பற்றி ஏன் கமல் சார் பேசவில்லை' என்று சுருதி புலம்பல் மீண்டும் ஆரம்பமானது. அதை நேரடியாக கமல் சாரிடம் கேட்கவேண்டியதுதானே என்று படார் என கூறிவிட்டுச் சென்றார் நிரூப். அதானே சுருதி.. அப்போவே கேட்கலாமே. பேசி தீர்வு காணாத பிரச்சனைகளே இல்லைதானே!
இப்படி இந்த எபிசொடுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல ஒரு ட்ரீட்டாகவே இருந்தது. ஆனால், பாவனிக்காக குறும்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போடுவதற்குள் அவர் சரண்டரானதுதான் வருத்தம். இறுதியாக இசைவாணி மற்றும் அண்ணாச்சி காப்பாற்றப்பட, நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இன்று நிச்சயம் கிராமமா நகரமா டாஸ்க் பற்றியும், அதில் 'அடக்க ஒடுக்கமா இருக்கனும்' என்கிற வாக்கியத்தைப் பற்றி விரிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும், சின்னபொண்ணுதான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.