சொல்லப்படாத அமீர் பக்கங்கள்.. ராஜுவின் உள்நோக்கம் – கண்ணீரில் மூழ்கிய வீடு!

Bigg Boss 5 Tamil Review Amir Story Raju Niroop Family Entry மதம் பார்க்காமல் தன்னுடைய சொந்தக்காரர்களையும் ஓரம்கட்டிவிட்டு அமீர் மீது நம்பிக்கை வைத்து அவரை இந்த அளவிற்கு வளர்த்துவிட்ட அந்த குடும்பத்திற்குப் பாராட்டுக்கள்.

Bigg Boss 5 Tamil Review Amir Story Raju Niroop Family Entry
Bigg Boss 5 Tamil Review Amir Story Raju Niroop Family Entry

Bigg Boss 5 Tamil Review Amir Story Raju Niroop Family Entry : இத்தனை நாள் அமீர் மீதான பார்வையை அப்படியே மாற்றிப்போடும் விதமாக இருந்தது அமீரின் கடந்த வந்த பாதை. எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த அமீருடைய வாழ்க்கைப்பயணம், நிச்சயம் பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதை தன்னுடைய சிறுவயதிலிருந்து தெளிவாகக் கூறிய விதம் ஒருபக்கம் இருந்தாலும், அவர் கூறிய அனைத்து விஷயங்களும் உண்மைத்தன்மை மாறாமல், நம்மையும் அவருடன் பயணிக்க வைத்தது.

குடிசை வீட்டில் வாழ்ந்தது முதல் தன்னுடைய தாயோடு தனியே அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் சிறந்த நொடிகள் என்று கூறி கண்கலங்கியது வரை அனைத்திலும் அமீருடைய உண்மை முகம் வெளிப்பட்டது. தன் கண்முன்னே உடல் நிலை சரியில்லாமல் இறந்த தன் அக்காவைப் பற்றி சஞ்சீவ் கூறியது வேதனை என்றால், தன் அம்மாவை ரத்தம் சொட்டச்சொட்ட எறும்புகள் மொய்க்கக் கொலை செய்து வீழ்த்தியிருந்ததைப் பார்த்த அந்த பிஞ்சு மனது பட்டிருக்கும்பாடு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.

ஆனால், அந்த நிலையிலும் தன்னுடைய அம்மாவிற்காக அம்மாவின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்கிற வைராக்கியத்தை உறுதியாக மனதில் ஏற்றுக்கொண்டார் அமீர். உண்மையில் இதுபோன்ற மனநிலையில் சறுக்கி விழாமல், முன்னேற வேண்டும் என்று முனைப்போடு போராடும் மனப்பான்மை வருவது கடினம். நிச்சயம் அமீருடைய வாழ்க்கை எல்லோருக்குமான ஓர் பாடமாகவே இருக்கும். எல்லாவற்றையும் விட, மதம் பார்க்காமல் தன்னுடைய சொந்தக்காரர்களையும் ஓரம்கட்டிவிட்டு அமீர் மீது நம்பிக்கை வைத்து அவரை இந்த அளவிற்கு வளர்த்துவிட்ட அந்த குடும்பத்திற்குப் பாராட்டுக்கள். இவர்களைப்போன்ற நல்லுள்ளங்கள் இருப்பதனால்தான் என்னவோ அமீர் போன்ற திறமையானவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.

 இவர்களுக்காக ஃபிரான்சிஸ் என்கிற தன்னுடைய இயற்பெயரை அமீர் என்று மாற்றியும் வைத்திருக்கிறார். அமீரின் இந்தக் கதையைக் கேட்டு மனமுடையாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும், ராஜூவினால் சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உடைந்து அழுதார். ஒவ்வொரு முறையும் மற்ற போட்டியாளர்களுடைய தாய் தந்தை வீட்டிற்குள் வரும்போது அமீரின் கண்களில் ஏக்கம் தனியாகவே வெளிப்பட்டது. எல்லாமே கடந்து போகும் அமீர்!

அடுத்ததாக, ஃப்ரீஸ் டாஸ்க். நேற்றைய தினத்தில் முதலாவதாக வீட்டிற்குள் நுழைந்தவர் நிரூப்பின் தந்தை. சிபி சொல்வதைப்போல, வாரணம் ஆயிரம் அப்பாதான் அவர். வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் மிகவும் கூலாக பேசினார். முக்கியமாக பிரியங்காவைப் பார்த்து, ‘நிரூப் ரொம்ப படுத்துறானோ’ என்று கேட்டது கியூட். தன்னுடைய சிறுவயதில்  ‘திருமதி செல்வம்’ சீரியல் பார்க்க தவறியதே இல்லை என்றதும், சஞ்சீவின் மைண்ட் வாய்ஸ், ‘வயசெல்லாம் வெளியே சொல்லாதீங்கோ’ என்றுதான் இருந்திருக்கும்!

இதை எல்லாம்விட, தன் முன்னாள் காதலி யாஷிகா எப்படி இருக்கிறார் என்று அப்பாவிடம் கேட்க, அதற்கு, ‘எல்லோரும் நலம், உன்னைப்பற்றிப் பேசலாம்’ என்றுகூறி டைவர்ட் செய்துவிட்டார். என்னதான் இருந்தாலும், யாஷிகாவினால்தானே நிரூப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். அந்த நன்றி இருக்கத்தானே செய்யும்! இறுதியாக, ‘இன்னும் 4 வாரத்திற்கு அழாமல் இரும்மா’ என்றபடி வீட்டைவிட்டு வெளியேறினார் நிரூப்பின் தந்தை. அடுத்தது யாஷிகா என்ட்ரிதான் என்று நினைத்து ஆவலோடு பார்த்தால், இன்னிக்குலாம் அந்த சீன் இல்லை, எல்லாம் நாளைக்குதான் என்றபடி அதனைக் கட் செய்துவிட்டனர்.

பிறகு, மாயாவி என்று பாடல் ஒலிக்க, ஆசையாகக் காத்துக்கொண்டிருந்த ராஜு தன் மனைவியைப் பார்த்ததும் படபடவென பறந்தார். மனைவியைப் பார்த்ததும் கட்டியணைத்துக்கொண்ட விதம், அவருக்குள்ளான காதலின் வெளிப்பாடாக அழகாக இருந்தது. முதல்முறையாக ராஜு வெட்கப்பட்டு பார்க்கிறோம் என்று பிரியங்கா கிண்டல் செய்ய, மீண்டும் வெட்கத்தில் மூழ்கினார் ராஜு. பிறகு இருவரும் தனித்து பேச வழிவிட்ட மற்ற போட்டியாளர்கள், நெருங்கிப் பேச வரும்போது குறுக்கே புகுந்து, ஸ்வீட் சாப்பிட்டே பேசுங்க என்றபடி நிரூப் தலையிட, அது நல்லா இருக்காது என்று பொசுக்கென மைந்த வாய்ஸை சாதமாகப் பேசிவிட்டார் ராஜு.

இப்படி காதல் ஒருபுறம் ததும்பி வழிய, ‘இனிமேல் வாய்ப்புக்கு அலைய வேண்டியதில்லை அல்லவே?’ என்று தன் மனைவியிடம் ராஜு கேட்ட முதல் கேள்வியில், அவர் எந்த நோக்கத்திற்காக இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்பது வெளிப்பட்டது. தனக்கும் வெற்றிபெற்றதுபோல உணர்வு வருகிறது என்று ராஜு கூறியது, வீட்டில் யாரையும் அண்ணன், தங்கையாகப் பார்க்கவேண்டாம் என்று ராஜுவின் மனைவி ஹின்ட் கொடுத்தது என்று ஏராளமான விஷயங்கள் பகிரப்பட்டன. பிறகு அவருடைய தாயின் என்ட்ரி.

மனைவியைப் பார்த்ததும் காதல் வழியத் துள்ளிக்குதித்தவர், தாயைப் பார்த்ததும் அன்பில் கண்கலங்கியது. தன்னுடைய மகன்தான் வெற்றிபெறவேண்டும் என்று மிகவும் கர்வமாகப் பகிர்ந்துகொண்ட தாயின் அன்பு பார்க்கவே அழகு. மேலும், தன்னுடைய மகன் தொடைநடுங்கியெல்லாம் இல்லை என்று மற்றவர்களோடு வாதாடிவிட்டுதான் வீட்டைவிட்டு வெளியேறினார் ராஜுவின் அம்மா. இவர்களை எல்லா பார்த்தபிறகு, பிரியங்காவிற்கு தன்னுடைய அம்மா ஞாபகம் வந்துவிட்டதுபோல. தனியே கிச்சனில் அழுதுகொண்டிருந்தார். என்னதான் சொல்லுங்கள், அவ்வளவு அழுகையிலும் சாப்பிட்டுக்கொண்டே அழுதது ஹயிலைட்.

மற்ற சீசன்களைப்போல் இல்லாமல், இந்த சீசனில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது நன்றாகவே வெளிப்படுகிறது. ஒவ்வொருவருடைய குடும்பத்தினரும் அவர்களின் சொந்தமாகவே பிற போட்டியாளர்களைப் பார்ப்பது ஆரோக்கியமானதாக இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil review amir story raju niroop family entry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com