Bigg Boss 5 Tamil Review Niroop Annachi Priyanka Pavani : நேற்று ப்ரோமோ பார்த்ததிலிருந்து இவ்வளவு நாள் இணை பிரியாமல் இருந்த அண்ணாச்சி, நிரூப்பிற்கு இடையே விரிசலா என்று ஏதேதோ எண்ணங்கள் தோன்றியிருக்கும். ஒருமுறை தனக்குப் பிடித்தவருக்கு ஆம்லெட் செய்து ஊட்டிவிடலாம் என்ற டாஸ்க் வந்தபோது பிரியங்காவை விட்டுவிட்டு அண்ணாச்சிக்கு நிரூப் ஓடிவிட்டது, அதனால் பிரியங்கா கடுப்பானது என்று ஒரு ரீவைண்டு பார்த்துவிட்டு வந்தது நம் மூளையில் உள்ள பிக் பாஸ் ஸ்டோரேஜ் ஸ்பேஸ். ஆனால், என்ன பயன் நின்ற கடலும், பறக்காமல் தவித்த பறவைகளும் அப்படியேதான் ஷாக்கில் உறைந்திருந்தன. சரி சரி, இவ்வளவு பில்ட் அப் இதற்கு அவசியமில்லை என்றாலும், கன்டென்ட் தேறுமே என்றுதான்... நேற்றைய எபிசோடின் தலைவருக்கான போட்டியும் நாமினேஷன் லூட்டியும் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்!
அன்றைய தினத்தில் இவர் இருக்கிறாரோ இல்லையோ ஆனால், நிச்சயம் இவருடைய நடனம் இல்லாமல் பிக் பாஸ் வீடு விடியாது. பாடல் ஒலித்ததுமே, முதல் ஆளாக எழுந்து நடனமாடுவது ஐக்கி மட்டுமே. நேற்றைய எபிசோட் அவருடைய நடனம் இல்லாமல் போனது. நம்மைவிட பிரியங்கா மிகவும் அவருடைய நடனத்தை மிஸ் செய்திருக்கிறார் போல. 'மிஸ் யுவர் டான்ஸ் ஐக்கி' என நமக்காக அவரே கூக்குரலிட்டார். பிறகு நேரடியாகத் தலைவருக்கான போட்டிதான்.
அபிஷேக், அண்ணாச்சி மற்றும் சிபி ஆகியோர் இந்த தலைவருக்கான டாஸ்க்கில் பங்குபெற மற்ற போட்டியாளர்களுக்கு வழக்கம் போல அவர்களை தொல்லை செய்வதற்கான வேலை. இந்த வேலையை மிகவும் கச்சிதமாகச் செய்தவர் அக்ஷரா. சிபி மீதான கோபத்தை ஆத்திரத்தோடும் வெறியோடும் தன் கையிலிருந்த தண்ணீர் நிறைத்த பலூனை வீசி தீர்த்துக்கொண்டார். அப்படி என்னதான் இன்னும் பகையோ போங்க! இறுதியாக இந்த போட்டியில் அண்ணாச்சி வெற்றிபெற, வீடே கொண்டாடியது. ஆனால், அந்த ஒருவரைத் தவிர.
ஆம், ஏற்கெனவே தான் வைத்திருக்கும் நாணயத்தை எப்படியும் உபயோகிக்கிற பிளானில் இருப்பதாகக் கூறிய நிரூப், அதன்படியே அண்ணாச்சியை காலி செய்துவிட்டு, தலைவர் பதவியை தனக்கானதாக்கிக்கொண்டார். தன்னை இப்படி நிரூப் விட்டுக்கொடுக்க மாட்டார் என்று மிகவும் நம்பியிருப்பார் போல அண்ணாச்சி. நிரூப் இப்படி ஸ்வாப் செய்தது கொஞ்சமும் அண்ணாச்சிக்குப் பிடிக்கவில்லை. இதன் வெளிப்பாடு நேற்றைய எபிசோடில் பல இடங்களில் வெளிப்பட்டது.
என்னதான் ஆரம்பத்தில் வாழ்த்தினாலும், எதற்காக நாணயத்தை உபயோகம் செய்தாய் என்கிற கேள்வியைத் தொடர்ந்து நிரூப்பிடம் கேட்டுக்கொண்டே இருந்தார் அண்ணாச்சி. மேலும், நிரூப் பேசும் எல்லாவற்றிலும் பெரும் குறைகளை மட்டுமே அடிக்கோடிட்டு பிரச்னையை பெரிசாக்கினார். அதிலும், 'பயந்துபோய்தான் நாணயத்தை வபயோகித்தார் நிரூப்' என்று பலமுறை அண்ணாச்சி கேட்டிருக்க அவசியமில்லை. வீட்டில் அப்பா போன்று தோற்றமளிக்கும் அண்ணாச்சி, இந்த சமயத்தில் சற்று பெருந்தன்மையாக நடந்துகொண்டிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
இப்படி அண்ணாச்சி நிரூப்பை எதிர்த்து கேள்வி கேட்கும்போதெல்லாம், வருண் முகம் எவ்வளவு பிரகாசமாய் மாறுகிறது! இதற்கிடையில், பிரியங்கா அவ்வளவு பொங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. யாராக இருந்தாலும், நண்பர்கள் ஒன்றாக இணைந்து வீட்டில் ஆளுமை செலுத்தினால் ஏற்படும் தயக்கம்தான் அனைவரிடத்திலும் இருந்தது. இதனை வெளிப்படையாகக் கேட்டது அண்ணாச்சி. ஏற்கெனவே இருந்த கடுப்பு, இந்த சண்டையில் முற்றிப்போனது. வித்தியாசமாக ஜாலியாக விளையாடலாம் என்று நினைத்த நிரூப்பிற்கு, ஏன்தான் நாணயத்தைப் பயப்பன்படுத்தினோம் என்று புலம்பும் அளவிற்கு நிலைமை மாறியது.
பிரியங்கா பற்றி பாவனியுடன் அமீர் பேசிய விஷயங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே. ஆம், அவ்வளவு வாயடித்தாலும் தாமரையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் பிரியங்கா. இதனை பாவனியுடன் டிஸ்கஸ் செய்த விதம் அருமை. அதேபோல நாமினேஷன் பொழுதும் தெளிவான விளக்கத்தோடு நாமினேட் செய்த ஒரே போட்டியாளர் அமீர். இன்னும்கூட நிறையப் பேசலாம் அமீர்.
இறுதியாக நாமினேஷன். நாமினேஷனை பொறுத்தவரை, நாம் கணித்து வைத்தபடிதான் இருந்தன. முன்விரோதம் மட்டுமே விதவிதமான காரணங்களாக வெளிப்பட்டது. நிரூப், அமீர், அபிஷேக் மற்றும் சஞ்சீவ் ஆகியோர்களை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். அனைவரும் நாமினேட் ஆகியிருப்பதால், நாணயம் வைத்திருப்பவர்கள் அதனைப் பயன்படுத்தி எஸ்கேப் ஆகமுடியாது என்று கூறியதும், நிரூப் முகத்தில் பிரகாச ஒளி. ஆம், நாமினேஷன் நேரத்தில் நாணயத்தை உபயோகப்படுவதிருக்கலாம் என்று நினைத்திருந்தால், மாட்டியிருப்பார். என்றாலும், நல்ல மூவ் நிரூப்.