Bigg Boss 5 Tamil Review Sanjeev Amir good play : திங்கள்கிழமை என்றாலே வீட்டின் புதிய தலைவருக்கான போட்டி மற்றும் நாமினேஷன் பரிதாபங்கள்தான் வீட்டில் அலைமோதும். ஆனால், இம்முறை சில பல கேள்விகளுடன் இந்த போட்டிகள் ஆரம்பமாகின. எவ்வளவுதான் பூசி முழுகப் பார்த்தாலும், மக்கள் கண்களிலிருந்து யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அப்படி என்னதான் நேற்றைய எபிசோடில் பிழைகள் இருந்தன என்பதை அலாசுவோமா?
'எப்போது பார்த்தாலும் தாமரை மட்டுமே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறாரே.. வீட்டில் மற்றவர்களுக்கு ஏன் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை' என்று நம்மை போலவே சஞ்சீவும் நினைத்திருப்பார் போல. இது மிகவும் தவறு என்று எடுத்துரைத்து தாமரையை பாத்திரம் கழுவும் வேலையிலிருந்து வீட்டின் அப்போதைய கேப்டனானா நிரூப்பை இழுத்து வரச் சொன்னார் சஞ்சீவ். ஆனால், தாமரையோ இது என் வீடு என் உரிமை என்று கூறி நிரூப்பிற்கு பல்பு கொடுத்துவிட்டார். 'இப்போ நான் என்ன சொல்றது' என்று மனதிற்குள்ளேயே குழம்பிக்கொண்டிருந்தார் நிரூப். நீங்க ஒரு ஃபைனலிஸ்ட் என்று நினைத்து சில்லறைகளை எல்லாம் சிதற விட்ட உங்கள் ரசிகர்களுக்கு என்ன செய்யப்போறீங்க நிரூப்? இப்படி மக்களை ஏமாற்றுவது சரியல்ல!
அடுத்ததாக இந்த வார தலைவர் தேர்வுக்கான 'சுத்தி சுத்தி வந்தீக..' போட்டி. நம்ம மியூஸிக்கல் சேர் விளையாட்டுதான் அது. எப்போதும் இல்லாத அளவிற்கு முழு விளையாட்டையும் நமக்கு எடிட் செய்து ஒளிபரப்பினார்கள். வேற வழி இல்லை ஏனென்றால் வேற கன்டென்ட் இல்லை. சரி அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கமாக சென்ற வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் போட்டியாளர்களை வைத்துதானே இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெறும். எதற்காக எல்லோரும் இந்த வாரம் பங்குபெற்றனர்? மேலும், சிபியை நடுவராக நியமனம் செய்தது எல்லாம் சரி, ஆனால், நடுவருக்கு ஏன் இந்த டாஸ்க்கில் பங்குபெற்றார்? இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டால் நம்மை அசரவைக்கும் அளவிற்கு வித்தியாச பதில்களை நமக்கு அளிப்பார்கள்! அப்படியே விட்டுவிடுவோம்!
முதல் போட்டியின்போது தன்னுடைய மைக்கை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். அதனால், முதலில் அவுட்டான தாமரை இதை வைத்து தனக்கு அமீரின் இடத்தை விட்டு தருமாறு கட்டார். நம்ம ஆள் அமீர் சாதாரணமாவரா என்ன? தாமரை முதல் பாவனி வரை அனைவரிடமும் மிகவும் சாதூரியமாகவே விளையாடினார். ஆனால் என்ன, வீட்டில் அவருடைய பாடி லேங்குவேஜ் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. இதனை அக்ஷராவும் நாமினேட் செய்யும்போது குறிப்பிட்டிருப்பார். இந்த உடல் மொழியை மட்டும் மாற்றிக்கொண்டால் நிச்சயம் வேற லெவல் பிளேயர் அமீர்.
அடுத்தடுத்து வரிசையாக ஒவ்வொருவரும் அவுட்டாக, அவர்களுக்கு சக போட்டியாளர்கள் விட்டுக்கொடுத்த விதம் மிகவும் அழகு. அக்ஷராவிற்கு வருண் விட்டுக்கொடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால், சிபி விட்டுக்கொடுத்தது நிச்சயம் குறிப்பிடப்படவேண்டியது. ஆனால், என்ன பயன்? மீண்டும் என்றோ நடந்த வார்டன் டாஸ்க்கை மனதில் வைத்து மீண்டும் சிபியை நாமினேட் செய்தார் அக்ஷரா. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா!
பிறகு, சஞ்சீவிற்கு ராஜு விட்டுக்கொடுக்க, அமீருக்காக சஞ்சீவ் விட்டுக்கொடுக்கிறார். அப்படி விட்டுக்கொடுத்த கையோடு, பாவனி நிச்சயம் இந்த வாரம் தன்னுடைய நாணயத்தை உபயோகிப்பதாக சொல்கிறார். ஒருவேளை அமீர் வெற்றிபெற்றால், அதனை பாவனி உபயோகிப்பாரா என்பதை தெரிந்துகொள்ளவே அமீருக்கு விட்டுக்கொடுத்ததாக கேமராவில் பதிவும் செய்தார் சஞ்சீவ். என்ன ஒரு புத்திசாலித்தனம்? வீட்டில் இவர் கண்களிலிருந்து யாரும் ஒளிய முடியாது போலவே! லேட்டா வந்தாலும் மிகவும் தெளிவாக விளையாடுகிறார் சஞ்சீவ்.
வழக்கம்போல நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு இடையே இருக்கும் பனிப்போர் இந்த போட்டியிலும் வெளிப்பட்டது. பிரியங்காவிற்காக நிரூப் விட்டுக்கொடுக்க, அதனைத் தன்னை கேப்டனாக்கி பழிவாங்கும் பிளானா இது என்று கேள்வி கேட்டது, கோபத்தின் உச்சம் எனலாம். தன்னுடைய நெருங்கிய நண்பனையே நாமினேட் செய்கிறோமே என்கிற வேதனையில் பிரியங்கா அழுதது, யாரும் எதிர்பாராதது. என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும், இதுநாள் வரை நிரூப்பை விட்டுக்கொடுக்காத பிரியங்கா, முதல் முறையாக விட்டுக்கொடுத்தார். இப்போதுதான் ஆட்டத்திற்குள் வந்திருக்கிறார் பிரியங்கா. வெல்கம்!
அவுட்டான அண்ணாச்சி, போதும்டா சாமி என 'பே பே பே.. ' என்று ஒதுங்கியது சிரிப்பை வரவழைத்தது. இறுதியாக, பாவனி அவுட்டாக, தனக்காக விட்டுக்கொடுக்குமாறு அமீரிடம் கேட்க, 'நிச்சயம் விட்டுத்தருவேன். ஆனால், அக்ஷ்ரா ஜெயித்துவிட்டால், உன்னிடம் இருக்கும் நாணயத்தை உபயோகிக்கக் கூடாது' என்ற எதிர்பார்க்காத கண்டிஷனை அமீர் போட்டதும், 'ஆளை விடுங்கடா சாமி' என்றபடி ஒதுங்கினார் பாவனி. இறுதியாக அமீர் வெற்றிபெற, பாவனி ஏற்கெனவே சொன்னதுபோல தன்னுடைய நாணயத்தைப் பயன்படுத்தி இந்த வார வீட்டின் தலைவரானார் பாவனி. அதற்கு பேனாலிட்டியாக, வீட்டில் உள்ள பெண்களுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டது.
அவ்வளவுதான்... சும்மா விட்டுவிடுவாரா அக்ஷரா. இதுதான் சரியான சான்ஸ் என்று மனதிற்குலேயே கணக்கிட்டு அப்படியே போகிற போக்கில் 'எங்களுக்கான உதவியாளராக நீங்கள் இருக்கவேண்டும்' என்று பாவனியிடம் கூற அதற்கு, 'உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைமுறைக்கு என்னால் உதவி முடியாது' என்று பதிலளிக்க, மிகவும் சிறிய சண்டை உதித்து மறைந்தது. ஆனாலும், ஊரே மறந்துபோன அபிநய்யிடம் ராஜு கேட்ட கேள்வியை மையப்படுத்தி இன்றுவரை நாமினேட் செய்கிறார் பாவனி. என்னவென்று சொல்வது?
ஆனாலும் நேற்றைய எபிசோடில் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார் அக்ஷரா. பார்க்கவே அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. இறுதியாக அண்ணாச்சி, நிரூப், அபிநய், அக்ஷரா, தாமரை மற்றும் சிபி நாமினேட் ஆக, பிரியங்கா எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதைப் பற்றிதான் பெரும் கவலையில் இருந்தார் தாமரை. அதுசரி, பிரியங்கா மிகவும் டேஞ்சர் ஜோனில் இருக்கும்போது, அவரை எப்படி வெளியேற்றும் விஜய் டிவி? அதான், இப்படி ஒரு ஸ்ட்ராடஜியை பயன்படுத்தியுள்ளனர். இந்த வாரம் வெளியேறி விடுவோமோ என்கிற பயத்தில் இருந்த நிரூப், தன்னுடைய நாணயத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அப்போது, தனக்கு பதிலாக சஞ்சீவி நாமினேட் செய்ய சொன்ன நிரூப்பிற்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல். ஆம், போட்டி வைத்து, அதன் முடிவில் யார் வெற்றிபெறுகிறாரோ அவர்தான் மக்களை சந்திப்பதிலிருந்து காப்பாற்றப்படுவார். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க! உங்கள் பார்வையில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.