Bigg Boss 5 Tamil Thamarai Priyanka Pavani Raju Fights Tamil News : குழாயடி சண்டையைவிட மிகவும் மோசமானதாக இருந்தது தாமரை பிரியங்கா இடையே வெடித்த வாக்குவாதம். சும்மாவே இந்த சீசனில் கத்தி பேசுவது மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இதில், இப்படிப்பட்ட சண்டையை எப்படிப் பொறுத்துக்கொள்வது? உடல்நலன் கருதி ஹெட்போன்களை கழற்றிவிடுங்கள் என்று இனி டிஸ்க்ளைமர் போடுவதுதான் சரி என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு சண்டைகளும், கூச்சல்களும் அதிகரித்துள்ளது.
அடிக்கடி உளறுவதும், பிறகு அப்படியா! எனக்குத் தெரியாதே என்று சமாளிப்பதும் தாமரைக்கு இயல்பாகவே வரும். நிஜமாகவே மறந்துவிடுகிறாரோ என்று கேள்வி நமக்குள் எழும் அளவிற்குத் தாமரையின் உணர்ச்சிவசப்படும் பேச்சு இருக்கும். அந்த வரிசையில் முந்தைய நாள் எபிசோடில் சஞ்சீவிற்கும் தாமரைக்கும் ஏற்படும் வாக்குவாதத்தைத் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடின் ஆரம்பம் இருந்தது. வழக்கம்போல, தன்னுடைய மாமியாரை எப்படி இழுக்கலாம் என்று சஞ்சீவிடம் கோபப்பட, உங்களைப்போலத்தான் உளறிவிட்டேன் என்று சமாளிக்க, சுமுகமாக இந்தப் பிரச்சனை முடிந்தது.
இதையடுத்து தாமரையும் நிரூப்பும் தனியே புலம்பிக்கொண்டு, அந்த டிக்கெட் பக்கம் அப்படியே நடந்து செல்ல, படுக்கை அறையில் இருந்துகொண்டு மற்ற போட்டியாளர்கள் 'என்னடா நடக்குது இங்க? எதிரும் புதிருமாகக் கடந்த வாரம் அடித்துக்கொண்டவர்கள், இப்போது இப்படியா?' என்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டும், கொஞ்சம் ஆதங்கப்பட்டுக்கொண்டும் இருந்தனர். இதையெல்லாம் பார்த்த நிரூப், எப்படியாவது இந்த டிக்கெட்டை ஜெயித்துவிடு என்று தாமரையைக் கேட்டுக்கொண்டார். ஹ்ம்ம்.. நிரூப்பின் ஆதங்கம் நன்றாகவே புரிகிறது! பிரியங்காவை மட்டும் விட்டுவிடாதே என்று சொல்லாமல் சொல்கிறார்.
பிறகு டாஸ்க் பற்றிய அறிவிப்பு வர, தாமரையின் டார்கெட் நிச்சயம் பாவனி, சஞ்சீவ் மற்றும் தானாகத்தான் இருக்கும் என்று கணித்தார் பிரியங்கா. ஆனால், உண்மையில் பாவனியைத் தாமரை அந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. என்றாலும் இறுதியில் பாவனி போட்டியை விட்டு வெளியேறினார். எப்போதும் ஸ்மார்ட்டாக விளையாடும் ராஜு, நேற்று ஏனோ பாவனியை சுற்றி மட்டுமே அவருடைய டார்கெட் இருந்தது. சிபியை அல்லது பிரியங்காவைக் கூட வீழ்த்தி இருக்கலாம். ஏன் மற்றவர்கள் மீது கொஞ்சம் கூட அவருடைய கவனம் போகவில்லை? இதனை ஃபேவரிட்டிசம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
எப்படியும் தாமரையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு ராஜு இருக்கிறார் போல. அதனால்தான் என்னவோ, அமீரிடம் ஏன் தாமரையை வெளியேற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, தாமரையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்றும் பதிலளித்தார் அமீர். அதெல்லாம் இருக்கட்டும், அமீர்கூட பல இடங்களில் மாற்றி மாற்றிப் பேசியிருக்கிறார். அதெல்லாம் நமக்குப் புரியாமல் இருக்கிறதே! இதை என்னவென்று சொல்வது?
சென்ற சீசனிலும் முட்டை டாஸ்க் இருந்தது. ஆனால், அது அவர்களின் சொந்த முட்டையைக் காப்பதுபோன்று இருந்தது. அவர்கள் உடுத்தியிருந்த உடை முதல் விளையாட்டின் ரூல்ஸ் வரை அனைத்தும் சுவாரசியமாகவும் இருந்தது. ஆனால், இம்முறை சுவாரசியம் என்பது சிறிதளவு கூட இல்லாத டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க். உடல்ரீதியான சண்டைகளைவிட, வாய்க்கால் தகராறுதான் அதிகமாக உள்ளது. திரும்பத் திரும்ப பேசுற நீ என்பது போல டாஸ்க்கும், இவர்களின் செயல்களும் திரும்ப திரும்ப ஒரேபோன்றே இருக்கிறது.
பாவனி மற்றும் தாமரை இருவரும் தனிப்பட்ட வகையில் இந்த கேமை விளையாடிக்கொண்டிருந்தனர். ஆனால், வலுவில்லாத ஆள் என்று நினைத்து பாவனி மற்றும் தாமரையை மற்ற போட்டியாளர்கள் தாக்கியது போட்டி அளவில் சரி என்றாலும், அவர்கள் நடந்துகொண்ட முறை மிகவும் தவறாகவே இருந்தது. தான் மிகவும் தாக்கப்பட்டு, வலியில் இருப்பதாக பாவனி கூறிய பிறகும், ராஜு நடந்துகொண்டது மிகவும் கடுமையாகவே இருந்தது. இதுபோன்று விளையாடுவதற்கு பதிலாக வேறு ஏதாவது ஸ்ட்ராடஜியை பின்பற்றி இருக்கலாமே!
பிரியங்கா தாமரை இடையே நடந்த மோதல், பார்ப்பதற்கே எரிச்சலைத்தான் வரவழைத்தது. மக்களிடத்தில் பிரபலமாக இருக்கும் பிரியங்கா, கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதும், மோசமான உடல்மொழியில் சீண்டுவதும் தாமரையை மிகவும் தவறாகவே இருந்தது. தாமரையும் சளைக்காமல் கத்துவது, பிரியங்காவிற்கு நிகராக கத்தி பேசுவதும், நம்மை நிகழ்ச்சி பார்க்கும் எண்ணத்திலிருந்து தவிர்க்கவே செய்தது. சண்டைபோட்டால், சுவாரசியம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் போல. ஒன்னும் சொல்றதுக்கில்லை.
இறுதியாக, தாமரை மற்றும் பாவனி போட்டியை விட்டு வெளியேற மற்ற அனைவரும் அடுத்த நிலைக்குத் தயாரானார்கள். தாமரையும் நிரூப்பும் வழக்கம்போல தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தனர். பிரியங்காவிற்கு வெளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவர் என்ன சொன்னாலும் சரி என்று வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள். வீட்டிற்குள் எந்த போட்டியாளரும் அவருக்கு எதிராகப் பேசினால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று நிரூப் தன் ஆதங்கத்தை தாமரையுடன் பகிர்ந்துகொண்டிருந்தார். இது ஒருவகையில் சரிதானே!
பிரதானமாக சண்டை போடுபவர்கள் வெளியேற்றப்பட்டனர். இனி, யாருக்கு இந்த டிக்கெட் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.