தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் புகழ் பெற்றவர் ஜூலி. நர்ஸான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 19 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், ஜூலி மட்டுமே சினிமா பிரபலம் இல்லாதவர்.
ஆரம்பத்தில் எல்லோருடனும் கலகலப்பாகப் பேசிய ஜூலி, நாளடைவில் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மட்டுமல்லாது, அந்த வீட்டுக்குள் இருந்தவர்களுக்கே அது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி நடந்துகொண்ட விதம் யாருக்குமே பிடிக்கவில்லை.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எவிக்ஷனான ஜூலிக்கு, மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பே கிளம்பியது. இதனால், வெளியிடங்களில் சுதந்திரமாகக் கூட ஜூலியால் செல்ல முடியவில்லை. இருந்தாலும், விருந்தினராக மறுபடியும் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றார் ஜூலி.
விஜே ஆகவேண்டும் என்பது என் ஆசை என ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜூலி. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி.
‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் 6வது சீஸன், நாளை தொடங்க இருக்கிறது. குழந்தைகளின் நடனத்திறமையைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியைத்தான் ஜூலி தொகுத்து வழங்கப் போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.