Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. பல எதிர்பார்ப்புகளோடு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த சீசனைப் போலவே, பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி முதல் வாரத்தில் சந்தித்த சாதனை, சோதனை மற்றும் வேதனை:
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி, முதல் வாரத்தில் பல்வேறு சம்பவங்களைச் சந்தித்தது. இதில் பல நிகழ்வுகள் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சில சம்பவங்கள் எரிச்சலை மூட்டியது. ‘இசை எங்கிருந்து வருது?’ என்று விளையாட்டாக டேனியல் கேட்ட கேள்விக்கு கோவப்பட்ட அனந்த் வைத்தியநாதன்; வெங்காயம் சேர்க்க சொன்ன பாலாஜி வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்த நித்யா; ‘எனக்கு கேரட் பொறியல் ரொம்ப புடிக்கும் ஆனா எல்லாருக்கும் வேனும்-னு எனக்கு வேண்டா சென்னே’ என்று கொந்தளித்த மும்தாஜ் என அனைத்துமே ஹாட் டாபிக் தான். ஆனால் வெளிப்படையாகக் காட்டப்படாமலும், அதிகம் பேசப்படாமலும் இருந்த முக்கிய 3 விஷயங்களை நீங்கள் நோட் செய்ய வேண்டும். என்ன அது?
சாதனை:
தமிழகமே பிரமித்து ஒருவரை அதிகமாகப் பாராட்டி வருகிறது. மாணவர்களால் மட்டுமே விரும்பப்பட்ட ஆசிரியர் பகவான் தற்போது இந்திய மக்களாலும் விரும்பப்பட்டு வருகிறார். குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் சென்று பகவான் டீச்சர் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிடும்படி கேட்கும் அளவிற்கு நிலை உள்ளது. இத்தகைய பெருமைமிக்க ஆசிரியரைப் பற்றி ஊரே பேசும் வேளையில், பிக் பாஸ் பேசவில்லை என்றால் ஊர் ஏற்றுக்கொள்ளுமா? அதோடு ‘பிக் பாஸ் மேடையை மக்களிடம் நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்கப் பயன்படுத்துவேன்’ என்று கமல் ஹாசன் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் வகையில், ஆசிரியரின் சாதனையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு எடுத்துரைத்தார் கமல்.
சோதனை:
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு ஏதேனும் சோதனை வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சோதனை வந்தது பெரும் வேடிக்கையாக உள்ளது. என்ன அது? பிக் பாஸ் நிகழ்ச்சியின் படபிடிப்பு நடைபெறும் இடத்தில், ஃபெஃப்ஸி (FEFSI) ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றும் 75% தொழிலாளர்கள் மும்பையில் இருந்து வந்தவர்கள் என்றும் வெறும் 15% மட்டுமே தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தான் போராட்டத்தின் காரணம்.
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘பிக் பாஸ் முதல் சீசன் படப்பிடிப்பின் போது கமல் ஹாசனிடம் இது குறித்து பேசியதற்கு, சம்மதம் கூறிவிட்டு தற்போது மீண்டும் வட இந்தியர்களையே வேலைக்கு எடுத்துள்ளனர். இந்த நிலை மாறவில்லையென்றால், நிச்சயம் அடுத்த வாரம் படப்பிடிப்பு நடைபெற விட மாட்டோம்.’ எனத் தெரிவித்தனர். வீட்டிற்குள்ளே சோதனை வரும் என்று எதிர்பார்த்தால் வீட்டிற்கே சோதனை வந்துவிட்டதே.
வேதனை:
வேதனை என்றவுடன் ‘என்ன அது? யாருக்கு என்ன ஆச்சு?’ என்று பதற்றம் வருகிறதா?.. பதறாதீர்கள். அந்த வேதனை ஷாரிக்கிற்கு தான். சென்ற ஆண்டை போலவே இந்த பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியிலும் ஒரு காதல் மலர் மலர்ந்து உதிர்ந்தது. வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகும், இளம் பறவைகள் இரண்டு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஷாரிக் அவரின் காதலை ஐஷ்வர்யாவிடம் கூறினார். ஆனால் பதிலுக்கு ஐஷ்வர்யா, ‘எனக்கு உன் நட்பை இழக்க விருப்பமில்லை, நீ ரொம்ப நல்ல பையன். என் குடும்பத்தில் நான் தான் எல்ல பொறுப்பையும் பார்த்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினரை கவலைப்பட வைக்க என்னால் முடியாது.’ என்று கூறி ஷாரிக் காதலை நிராகரித்தார். காதல் மலர் சூடப்படாமலேயே உதிர்ந்த நிலையைக் கண்டு ஷாரிக் வேதனையில் உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.