பிக் பாஸ் 2: அப்பா... போஷிகாவின் ஒற்றை வார்த்தையில் கலங்கிய உள்ளம்

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடலை கேட்டவுடன், அதன் முதல் வரியிலேயே நம் கண்களில் கண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுக்கும். அந்த வரியின் வார்த்தைகளில் இருக்கும் உணர்ச்சியை நேற்று நமக்கு உணர்த்தியது பாலாஜியின் பாசம்.

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் நித்யா வெளியேறிய பிறகு தந்தை பாலாஜியை சந்தித்தார் மகள் போஷிகா:

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் 4 வது வார இறுதியில் மொத்தம் 4 போட்டியாளர்கள் எவிக்‌ஷன் சுற்றை எதிர்கொண்டனர். இதில் பொன்னம்பலம் மற்றும் பாலாஜி காப்பாற்றப்பட்டார். இருவரும் எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க, யாஷிகா மற்றும் நித்யா இறுதிக்கட்ட எவிக்‌ஷனில் நிறுத்தப்பட்டனர். பிக் பாஸ் 2 வீட்டை விட்டு வெளியேறப் போகும் நபரின் பெயரை நீண்ட நேரமாகக் கூறாமல் அலைக்கழித்த கமல் ஹாசன், நிகழ்ச்சி நிறைவடையும் 30 நிமிடத்திற்கு முன்பே கூறினார். இதில் 4வது நபராக பிக் பாஸ் 2 வீட்டை விட்டு பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்.

நித்யா வெளியாகிச் சென்ற பின்னர் முதலில் அவரின் கண்கள் தேடியது மகள் போஷிகாவை தான். முதலில் போஷிகா வரவில்லை என ஜாலம் காட்டினாலும், எதிர்பாராத நேரம் நித்யாவிற்கு பெரிய சர்பிரைஸ் கொடுத்தார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வந்த போஷிகாவை கட்டி அணைத்து முத்தமிட்டார் தாய் நித்யா. இருவரும் கட்டிப்பிடித்து பாசத்தைப் பகிர்ந்ததில் ஒருவரை ஒருவர் எவ்வளவு மிஸ் செய்தார்கள் என்று புரிந்தது.

bigg boss tamil 2

ஆனால் இங்கு நம் அனைவரையும் உணர்ச்சிவசமாக்கியது பாலாஜி மற்றும் போஷிகாவின் சந்திப்பு தான். நித்யா மற்றும் போஷிகாவிடம் பேசிய கமல் ஹாசன், போஷிகாவிடம் யாரை ரொம்ப மிஸ் பண்ணிங்க என்று கேட்டார். அதற்கு முதலில் அம்மாவின் லவ் என்று சொன்ன போஷிகா, 2வதாக அப்பா என்று சொன்னார். கேட்டவுடன் மனதில் ஒரு சலசலப்பு. பின்னர் தந்தையை சந்திக்க வேண்டுமா என்று கமல் கேட்க, சற்றும் யோசிக்காமல் ஆமாம் எனத் தலையசைத்தார். உடனே நித்யாவின் அனுமதியுடன், அஹம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார்.

நித்யா வெளியேற்றத்திற்குப் பிறகு, மீண்டும் போட்டியாளர்களை லிவ்விங் ஏரியாவிற்கு வரவைத்தார் பிக் பாஸ். அங்கு அனைவரும் கூடியிருந்தனர். அப்போது பாலாஜியிடம் கமல் ஹாசன், நான் 2 அடி எடுத்து வைத்து நடப்பேன் நீங்களும் நடப்பீர்களா என்றார். உடனே சரி என்ற பாலாஜிக்கு தெரியவில்லை அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று. கமல் ஹாசனையே உற்று கவனித்தார் பாலாஜி.

இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்து நடந்த பாலாஜி கண்ணில் தென்பட்டார் போஷிகா. மகிழ்ச்சியில் குழந்தை போலத் துள்ளி குதித்து டிவி முன்னே ஓடி வந்தார் பாலாஜி. துக்கம் தொண்டையை அடைக்க, டிவியில் தனது இரத்த பந்தத்தை பார்த்து உணர்ச்சி பெருக்கெடுத்து திகைத்து நின்றார். பாலாஜியின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வரத் தொடங்கியது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த நமக்குள்ளே எதோ ஒரு பதைபதைப்பு.

bigg boss tamil 2

பாலாஜியை பார்த்து “அப்பா” என்று போஷிகா அழைத்த அந்த ஒரு வார்த்தை… பாலாஜி, பிக் பாஸ் 2 போட்டியாளர்கள், கமல் ஹாசன் மட்டுமல்ல நம் அனைவரையும் பாசப் போராட்டத்தில் இழுத்து நிர்த்தியது. அப்பாவும் மகளும் பேசிக்கொண்ட அந்த 2 நிமிட காட்சிகள் தான் என்றுமே இந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close