/tamil-ie/media/media_files/uploads/2021/11/Ra.jpg)
Bigg Boss Tamil 5 Day 49 Review Kamal Hassan Isaivani Eviction
பாவனி மீதான நெகட்டிவ் பார்வைக்கு அந்த 3 சம்பவங்கள்தான் காரணம் என்று ராஜு சொன்னதை யார்லாம் மறக்கவே முடியாது. அதற்கான விடையை ஒருவழியாக நேற்றைய எபிசோடில் பகிர்ந்துகொண்டார். என்னதான் சொல்லுக, இசைவாணி இப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்றுதான் இருந்தது அவர் இறுதியாகப் பாடிய பாடல். எப்படி இருந்தது நேற்றைய எபிசோட்?
ஒருவழியாக பாவனியை ஏன் ராஜு நம்ப மறுக்கிறார் என்பதற்கான விளக்கத்தை கமல் முன்பு விளக்கினார். மூன்றுமே தாமரையை வைத்துதான் என்பதனால், பேசும் பொருளாகத் தாமரை மாறிவிட்டார் என்பதைக் கமல் அழுத்தி கூறினார். அது ஒருபக்கம் இருக்கட்டும். அப்படி என்ன தாமரை பஞ்சாயத்து என்றால், தாமரையிடமிருந்து நாணயத்தை எடுத்தபோது சுருதி மற்றும் பாவனி மீது பாய்ந்த கோவம், பிறகு பாவனியின் ஆளுமையின்போது தாமரையை பாவனி பயன்படுத்திய விதமும் தேவையே இல்லாமல் தண்டனை கொடுத்தது மற்றும் போலியாக தாமரையோடு சிரித்துப் பேசுவது என இந்த 3 சம்பவங்களைத்தான் நீண்ட நாள்களாக மனதில் பூட்டி வைத்திருக்கிறார் ராஜு. இதற்கான விளக்கத்தோடு, வீட்டில் ஒரு அக்கா உடன் சண்டை போட்டால் கொஞ்சம் நேரம் கழித்து மறந்து பேசுவதுபோல இருக்கிறேன் என்கிற விஷயத்தையும் முன் வைத்தார் பாவனி. ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி ஸ்கொர் செய்கின்றனர். நடக்கட்டும் நடக்கட்டும்...
இவர்களை தொடர்ந்து இசைவாணி மற்றும் அண்ணாச்சியை முன்னிறுத்தி, இசைவாணி பற்றிய அண்ணாச்சியின் பார்வையை கேட்டறிந்து கொண்டார் கமல். அப்போது இறுதிவரை, இசைவாணி பேசுவதை அண்ணாச்சி கேட்கவே மாட்டிங்குறார் என்கிற புகார் மட்டும்தான் இசைவாணியியிடம் இருந்தது. என்னதான் சொன்னாலும், எப்போதும் முதலிடத்தில் காப்பாற்றப்படுகிறோம் என்கிற மனக்கணக்கினால், தான் செய்வது தவறு இல்லை என்பதில் மிகவும் வலுவாக இருந்திருக்கிறார் இசைவாணி. மேலும், கடந்த வாரம் முழுவதும் ஓவர் கான்ஃபிடென்ட்டாக அலைந்துகொண்டிருந்தார். இசையின் இதுபோன்ற செயல்களே அவரை ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றும் அளவிற்குத் தள்ளியது.
அடுத்தாக, தன்னுடன் இறுதி வரை பயணிக்கப்போகும் போட்டியாளர் மற்றும் விரைவில் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளரை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கமல் முன்னிலையில் நடைபெற்றது. அதில், தன்னுடன் பயணிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்களின் சாய்ஸாக ராஜு முன்னிலையில் இருந்தார். இவரைத் தொடர்ந்து நிரூப் மற்றும் பிரியங்கா இருந்தனர். மேலும், பாதிலேயே சென்றுவிடுவார் என்பதில் அதிக வாக்குகளை பெற்றவர் அண்ணாச்சி. அப்போது, இசைவாணியை ஃபோக்கஸ் செய்ததற்கான காரணம் என்ன எடிட்டரே? பிக் பாஸுக்கெல்லாம் பாஸாக இருக்கிறார் இவர். ராஜுவின் நகைச்சுவை உணர்வு மற்றும் தவற்றை மற்றவர்களிடம் சொல்லும் விதமே மக்களுக்கு மட்டுமல்ல போட்டியாளர்களுக்கு ராஜூவை பிடிக்க காரணமாக இருக்கிறது.
அபிஷேக் பற்றிப் பேசாமல் போனால் எப்படி? நேற்று வேண்டுமென்றே அபிஷேக்கை கமல் மொக்கைப்படுத்திக்கொண்டே இருந்தது போலத் தோன்றியது. அதில் ஒன்றுதான், யார் முதலில் காப்பாற்றப்படுவார்கள் என்று அபிஷேக்கின் கணிப்பைக் கேட்ட பிறகு, அவர் இல்லை இவர் என்று தாறுமாறாகக் காப்பாற்றப்பட்டனர் போட்டியாளர்கள். இதற்கு அபிஷேக்கிடம் கேட்காமலேயே இருந்திருக்கலாமே கமல் சார். இன்னும் என்ன கடுப்போ! எது அப்படியே இனிமேல் ஆட்டம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நிரூப், ஐக்கி மற்றும் இசைவாணி ஆகிய மூவர் மட்டும் இறுதி வரை இருக்க, மற்ற அணைத்து ஹவுஸ்மேட்ஸும் காப்பாற்றப்பட்டனர். இதனால், தன்னிடம் இருந்த நாணயத்தை எடுத்து அபிநயிடம் கொடுத்தார் இசைவாணி. ஆனால், அப்படியெல்லாம் கொடுக்க முடியாது, நாணயத்தை எடுத்துக்கொண்டு வெளியேதான் போகணும் என்றபடி பிக் பாஸ் அறிக்கைவிட, மீண்டும் நாணயம் இசைவாணி கைகளுக்கு சென்றது. இசைவாணி அபிநயிடம் நாணயத்தைக் கொடுக்கும் பொது பார்க்காத மற்ற போட்டியாளர்கள், அதனை இசைவாணியிடம் அபினை திருப்பி கொடுக்கும்போது பார்த்ததால் மீண்டும் வெடித்தது பூகம்பம். அதுவும் நம்ம அண்ணாச்சிதான் அதனை ஆராய்ந்து கொண்டிருந்தார். விடுங்க அண்ணாச்சி அதான் அவங்களே வெளியேறிவிட்டாரே, இன்னும் ஏன் ஆராய்ச்சி!
நிரூப் மற்றும் ஐக்கி காப்பாற்றப்பட, இசைவாணி வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் வந்து பேசும்போது, 'இப்படி அனைவரும் வந்து நல்லா பேசுவீங்கன்னு தெரிந்திருந்தால் எப்போதே வெளியேறியிருப்பேனே' என்று இசைவாணி சொன்னது, அவருடைய தனிமையை வெளிப்படுத்தியது. என்றாலும், எத்தனையோ தன்னம்பிக்கை தரும் கானா பாடல்கள் இருக்கும்போது, அவர் மற்றவர்களைக் குத்திக் காட்டுவதுபோல இருந்த அந்தப் பாடலை பாடியிருக்க வேண்டாம். அதேபோல, தனக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக இசைவாணி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.