/tamil-ie/media/media_files/uploads/2021/11/Iv-1.jpg)
Bigg Boss Tamil 5 Review Day 43 Isaivani Annachi Thamarai Priyanka
Bigg Boss Tamil 5 Review Day 43 Isaivani Annachi Thamarai Priyanka : 'முழுசா சந்திரமுகியாக மாறிய தாமரையைப் பார்' என்பதுபோன்று இருந்தது நேற்றைய எபிசோட். புதிய தலைவருக்கான டாஸ்க், நாமினேஷன் என வழக்கமான பரபரப்புகளுக்கு மத்தியில் தாமரையின் கேம் ஆரம்பமானது. நம்மை இருப்பவர்களுக்கே ஆச்சரியம்தான். அப்படி என்னதான் செய்தார் நம்ம தாமரை?
தண்ணியின் ஆளுமை இந்த வாரம் என்பதைக் குறிப்பதற்காக அனைவரையும் எழுப்புவதற்கு பிக் பாஸ் தேர்வு செய்த பாடல், 'தண்ணீ கருத்துடுச்சு..'. வருணின் ஆளுமை எப்படி இருக்கப்போகிறது, அதிலும் பாத்ரூம் ஏரியா கைப்பற்றும் என்பதால், ஆத்திர அவசரத்திற்குத் தகுந்த தண்டனைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவர்க்கும் இருந்தது. அதற்கேற்றது போல, பிரியங்கா குளித்துக்கொண்டிருக்கும்போது, நாணயத்தை எடுத்து தண்ணீர் சப்ளையை நிறுத்த வைத்தார் வருண். இவருடைய இந்த விளையாட்டினை ரசித்தபடி என்ட்ரி கொடுத்த அக்ஷரா, பிரியங்காவிடம் கொஞ்சம் நேரம் விளையாடவும் செய்தார். ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கிறது.. ஆனால் உங்களிடம் ஃபினிஷிங் சரியில்லையேப்பா!
அடுத்ததாகக் கொஞ்சமும் தாமதிக்காமல் தலைவர் போட்டிக்கு அழைத்துச் சென்றார் பிக் பாஸ். அதுதான், கலக்கப்போவது யாரு டாஸ்க். இது நிச்சயம் நகைச்சுவை நிகழ்ச்சியல்ல, பேருக்கு ஏற்றதுபோல் தலைவர் போட்டிக்குத் தேர்வான பிரியங்கா, சிபி, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் முன்பு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் நிறைந்த கண்ணாடிக் குடுவையில், மற்ற போட்டியாளர்கள் நிறங்களைக் கலந்து தங்களுக்குப் பிடிக்காதவர்களை வெளியேற்றுவதுதான் இந்த டாஸ்க். இப்படியெல்லாம் எங்க ரூம் போட்டு யோசிக்குறாங்களோ! ஆனாலும், எதையாவது இப்படி அறிமுகம் செய்து கொஞ்சம் ஆட்டத்தை சூடு பிடிக்க வைக்கலாம் என்கிற நோக்கில் இருக்கிறார் பிக் பாஸ். நம்ம ஹவுஸ்மேட்ஸ் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆம், என்ன சண்டை என்றாலும், புஸ்வானம் போல முடிவடைந்துவிடுகிறது.
தலைவர் போட்டிக்கான தேடலில், அங்கிருக்கும் போட்டியாளர்கள் மற்றவர்கள் ஏன் தலைவராகக்கூடாது என்கிற பாயின்ட்டை முன்வைத்து தங்களுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே பிரியங்கா மற்றும் ஐக்கி பெரிக்கு சண்டை ஆரம்பமாக, ஆடுகளம் சூடுபிடித்தது. இருவரும் தங்களைப்பற்றி மாறி மாறி பல உண்மைகளைக் கூற, யாரைத்தான் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் இருந்தனர். இப்படியே வாக்குவாதங்கள் நீண்டுகொண்டு போக ஒருகட்டத்தில் தாமரை வெளிப்படையாகப் பல கேள்விகளை பிரியங்காவிடம் முன்வைத்தார்.
அவை நம் எல்லோர் மனத்திலும் இருக்கும் கேள்விகள் என்பதால், மற்ற ஹவுஸ்மேட்ஸ் இதனைக் கைதட்டிக் கொண்டாடினார்கள். 'அட! தாமரையா இது' என்று பலரும் வியந்தனர். ஆம், நிரூபிப்பிற்கும் பிரியங்காவிற்கும் இடையில் இருக்கும் நட்பு எந்த அளவிற்கு உண்மையானது? என்றும் எவ்வளவு நாள் இதெல்லாம் தாங்கும் என்றும் அவருடைய பாணியில் கேட்டார் தாமரை. அவ்வளவுதான், வெகுண்டெழுந்த பிரியங்கா, இந்த வீட்டிலிருந்து தான் கொண்டு செல்லப்போகும் மிகப் பெரிய விஷயம் நிரூப் என்று அதற்கான பதிலை கூறி, யாரெல்லாம் சிரித்தார்கள் என்பதையும் நோட் செய்துகொண்டார். நாமினேட் செய்ய வசதியாக இருக்குமோ என்னமோ! ஆனால், அக்ஷரா இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றால், யாருடனும் பேச மாட்டாராம். அப்போ, வருண் நிலைமை அவ்வளவுதானா?
இப்படி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பிரியங்கா இந்த வாரத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, வீட்டின் கிச்சன், ஹால் உள்ளிட்ட மற்ற நிர்வாகம் யார் யார் தலைமையில் இருக்கவேண்டும் என்று டிஸ்கஸ் செய்ய தொடங்கினார் பிரியங்கா. அப்போது, ரேஷன் பார்த்துக்கொள்ள இசைவாணி என்கிற பெயர் கேட்டதுமே, 'அவர் வேண்டாமே!' என்கிற குரல் அண்ணாச்சியிடம் இருந்து ஒலித்தது. அவ்வளவுதான், சண்டை எங்கே முற்றிவிடுமோ என்று பயந்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் புகுந்து ஆட்டத்தைக் கலைத்தனர். ஆனாலும், இசைவாணி நேற்று நிஜமான சந்திரமுகியாக மாறிய தருணத்தையும் நமக்கு ஒளிபரப்பினர். தாமரைக்கும், இசைவாணிக்கும் வாக்குவாதங்கள் நீள, ஒரு கட்டத்தில் கையெடுத்து இசைவாணி கும்பிட, இதைப் பார்த்து கோபமடைந்த தாமரை வழக்கம்போல குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினார்.
இதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத இசைவாணி, அவருக்குள் இருக்கும் வடசென்னை 'கோயிந்தம்மா' வெளியே எட்டிப்பார்த்தார். ஆனால், சிபி உட்பட மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவரு கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்ன விதம் தவறு என்றும் அதனால்தான் தாமரை டென்ஷன் ஆனார் என்றும் எடுத்துக் கூறினர். அது, எந்த அளவிற்கு இசைவாணிக்கு புரிந்தது என்பது தெரியவில்லை. அண்ணாச்சி மீதான கோபத்தை அவரிடம் நேரடியாகக் காட்ட முடியாமல் தாமரையிடம் காட்டினாரோ!
என்னடா இது எது சொன்னாலும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்ட தாமரை, இந்த வாரம் வீட்டை விட்டு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்தார். பிறகு நாமினேஷன் பகுதி. வழக்கம்போல, சிபி அக்ஷராவையும், அக்ஷரா சிபியையும் நாமினேட் செய்துகொண்டனர். ஆனால், என்னதான் தன்னுடைய மகன் போன்று நினைத்திருந்தாலும், சிபியை தாமரை நாமினேட் செய்தது எதிர்பாராதது. இசைவாணி அண்ணாச்சியை நாமினேட் செய்ய, ஆனால் அண்ணாச்சி இம்முறை இசைவாணியை நாமினேட் செய்யாமல் தாமரையைக் கூறினார். இப்படி பல ட்விஸ்டுகளை கொண்டிருந்தது நேற்றைய நாமினேஷன் ப்ராசஸ். அதில் மிஸ் ஆகாமல் இருந்தது அபிநய் பெயர். இந்த வாரமும் இவர் காப்பாற்றப்படுவாரா அல்லது வெளியேறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! அப்படி அபிநய் இல்லையென்றால், இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.