நடிகை யாஷிகா ஆனந்த், விபத்துக்குப் பிறகான தனது உடல்நிலை குறித்து தனது பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி அன்று, நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானார். காரை அப்போது ஒட்டிச் சென்ற யாஷிகா, நிலைதடுமாறி சாலை தடுப்புக் கம்பிகளில் மோத, இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமான, யாஷிகா நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். யாஷிகாவின் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 4), அவர், விபத்துக்குப் பிறகான தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
இடுப்பு எலும்பில் பல முறிவுகளும் மற்றும் வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் ஓய்வு எடுத்து வருகிறேன். என்னால் எழுந்து நிற்கவோ நடக்கவோ 5 மாதங்கள் ஆகும். நாள் முழுவதும் படுக்கையிலே இருக்கிறேன், எல்லாத்தையும் படுக்கையிலே செய்ய வேண்டியுள்ளது. என்னால் இடது புறமோ அல்லது வலது புறமோ திரும்ப முடியாது. இத்தனை நாட்களாக நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். எனது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, எனது முகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நிச்சயமாக, இது எனக்கு மறுபிறப்பு தான். இது நான் எதிர்ப்பார்க்காதது. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயம் அடைந்துள்ளேன். கடவுள் என்னைத் தண்டித்துள்ளார். ஆனால் என்னுடைய இழப்பிற்கு இது ஈடாகாது. என்று பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் அவர்மீது வைத்துள்ள அன்பிற்கும் அக்கறைக்கும், அவர் குணமடைய பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழியான ஐஸ்வர்யா தத்தா, உன்னுடைய புதிய பிறப்பை நேர்மறையுடன் தொடங்குவோம். பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாஷிகா, சாம்பலில் இருந்து எழுந்த என் ஃபீனிக்ஸ் பறவையே, என கமெண்ட் செய்துள்ளார்.
முன்னதாக, அவரது தோழியின் உயிருக்கு சமூக வலைதளங்களில் எல்லோரும் யாஷிகா மீது குற்றம் சுமத்த, அதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் குடித்து விட்டு கார் ஓட்டவில்லை, ஒருவேளை நான் குடிந்திருந்தால் இந்நேரம் ஜெயில் இருந்திருப்பேன், வதந்திகளை பரப்பாதீர் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் அவரது தோழியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த யாஷிகா, தோழியின் குடும்பத்திற்கு சக்தியை வழங்க இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil