வினோத் கண்ணா என்னும் நட்சத்திரம் மறைந்தது!

பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன் வினோத் கண்ணா இன்று காலை காலமானார்

பாலிவுட்டில் 1970, 80-களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நடிகர் வினோத் கண்ணா, இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70. கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த வினோத் கண்ணா இன்று மரணித்திருப்பது அவரது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

பாலிவுட்டில் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ள வினோத் கண்ணா, சிறந்த அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீதாஞ்சலில் என்பவரை முதலில் மணந்த ராஜேஷ் கண்ணா, பின்னர் விவாகரத்து செய்துவிட்டு, கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ராகுல், அக்ஷய், சாக்ஷி என்று மூன்று மகன்களும், ஷ்ரதா என்ற மகளும் உள்ளனர்.

தனது சினிமாப் பயணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறிய ரோல்களிலும், நெகட்டிவ் ரோல்களிலும் மட்டுமே நடித்து வந்தார். 1968-ல் இவர் நடித்த மன் கா மீட் எனும் படம் தான் இவரது முதல் படமாகும். அதற்கு பின், மேரே அப்னே, மேரே கோன் , மேரே தேஷ், இம்திஹான், இன்கார், அமர் அக்பர் ஆண்டனி, குர்பானி, தயவான் போன்ற படங்களில் ஹீரோவாகவும், முக்கிய படங்களில் நடித்தும் புகழ்பெற்றார்.

வினோத் கண்ணாவின் மறைவையொட்டி திரைபிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

ரஜினியுடன் கைக்கோர்த்த வினோத் கண்ணா:

1991-ஆம் ஆண்டு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துடன் இணைந்து ‘கூன் கா கர்ஸ்’ எனும் படத்தில் நடித்தார். இதில், கரண் எனும் கதாபாத்திரத்தில் வினோத்கண்ணாவும், கிஷன் எனும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்திருந்தனர். இவர்களுடன் சஞ்சய் தத்தும் நடித்திருந்தார்.

‘ஹாத் கி சஃபாய்’ எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், 1999-ல் வாழ்நாள் சாதனையாளர் ஃபிலிம்பேர் விருது அளித்து கவுரவிக்கப்பட்டார். அதன்பின்,இன்றைய தலைமுறை நடிகர்களுடன் தபாங், தபாங் 2, தில்வாலே ஆகிய படங்களில் நடித்தார்.

2016-ன் இறுதிக் காலக்கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், தனது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் தவிக்கவிட்டு இன்று காலை மண்ணுலகை விட்டு மறைந்து, விண்ணுலகை அடைந்தார்.

 

பிரதமர் மோடி இரங்கல்…

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வினோத் கண்ணா சிறந்த நடிகர் என்பதோடு அர்ப்பணிப்போடு செயல்பட்ட தலைவர் மற்றும் அற்புதமான மனிதர். அவரின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

ரஜினிகாந்த் உருக்கம்…

வினோத் கண்ணா மறைவு குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “என் உயிர் தோழன் வினோத் கண்ணா…உன்னை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதேபோல திரைபிரபலங்கள் பலரும் வினோத் கண்ணா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், வினோத் கண்ணாவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தலைசிறந்த நடிகர் ஒருவரை இழந்து விட்டோம். இந்த நாள் மிக மிக சோகம் நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ளதாவது, வினோத் கண்ணாவின் மறைவு சகாப்தத்தின் முடிவு. ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

×Close
×Close