நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!

பாகுபலி-2 திரைப்படத்திற்கு எதிராக கன்னட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் பாகுபலி குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல்...

சென்னை: சத்யராஜின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ள கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பாகுபலி படத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் கன்னடர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்கு நடிகர் சத்யராஜ் 9 வருடங்களுக்கு பின்னர் வருத்தம் தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ள வாட்டாள் நாகராஜ், பாகுபலிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், சத்யராஜ், நாசர் நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, ரம்யா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடித்த படம் பாகுபலி. பாகுபலியின் முதல் பாகம் வெளிவந்து தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வசூலை அள்ளியது. இதையடுத்து, பாகுபலியின்-2 பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு திரையில் வெளிவர காத்திருக்கிறது. பாகுபலியின் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், பாகுபலி-2 வெளிவரும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இதனிடையே, பல வருடங்களுக்கு முன்னர் காவிரி விவகாரம் குறித்து சத்யராஜ் தெரிவித்த கருத்து, பாகுபலி-2 படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியது. காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான், பாகுபலி-2 கர்நாடகத்தில் திரையிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும், பாகுபலி-2 வெளிவரும் நாளான வரும் 28-ந் தேதி பெங்களூரில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில், சத்யராஜ் நேற்று வீடியோ ஒன்றின் மூலம் வருத்தம் தெரிவித்தார். அந்த வீடியோவில் சத்யராஜ் கூறியிருப்பதாவது, கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் காவிரி விவகாரத்தில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு , நானும் கண்டனம் தெரிவித்தேன். இதேபோல, கர்நாடக திரையுலகினரும் கருத்து தெரிவித்தனர். நான் தெரிவித்த கண்டனத்தின் போது சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் இல்லை.

என் தனி ஒருவனுக்காக ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பாதிக்கப்படவேண்டாம்.
இனி வரும் காலங்களில் தமிழர் சார்ந்த அனைத்து பிரச்சனைகளிலும் நான் கருத்து தெரிவிப்பேன். சத்யராஜை வைத்து படம் எடுத்தால் பிரச்சனை வரும் என நினைக்கும் இயக்குநர்கள் தயவுசெய்து இந்த சாதாரண சின்னஞ் சிறிய நடிகனை அணுக வேண்டாம். நான் நடிகர் என்பதை விட, தமிழனாக இருப்பதில் தான் பெருமை, மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், கன்னட அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், சத்யராஜ் இனி கவனத்துடன் பேச வேண்டும் என கூறினார். இதன் மூலம் பாகுபலி-2 வெளியாவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close