தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும், பிரம்மாண்டமான 'சங்கமித்ரா' திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இவ்விழவின் ஸ்பான்ஸர்களில் தேனான்டாள் ஃபிலிம்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சங்கமித்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இது பிரம்மாண்டமான படம் என்பதை உறுதிசெய்யும் வகையில் கிராஃபிக்ஸ் அமைந்துள்ளது. ஸ்ருதிஹாசன் வீரத்துடன் குதிரையில் செல்வதும், ஜெயம்ரவியின் வீர கடற்பயணத்தையும் பார்க்கும் போது இவர்கள் போருக்கு தான் செல்கிறார் என மனதினுள் கற்பனைக் காட்சிகள் ஓடத் தொடங்கிவிடுகின்றன.
இந்த அறிமுக விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே சங்கமித்ரா என்ன மாதிரியான திரைப்படம் என்பது குறித்து திரைப்படக்குழு தெரிவித்துள்ளது: 8-ம் நூற்றாண்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் சங்மித்ரா ஒரு ஈடற்ற பேரழகி. தனது ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது, சங்கமித்ரா சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. கற்பனை கதையான இந்தப்படமானது தொன்மையான தமிழ் மொழிக்கு சமர்ப்பணம் என படக்குழு தெரிவித்துள்ளது.
சங்கமித்ராவின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்தப்டத்தின் மூலம் ஜெயம் ரவியும், ஆர்யாவும் முதன்முறையாக ஒன்றிணைகின்றனர். இப்படத்தில், வீரமான பெண்மணி போல உடலமைப்பை பெறுவதற்கு ஸ்ருதிஹாசன் கடினமான முயற்சி மேற்கொண்டதோடு, வாள் சண்டை பயிற்சியும் கற்றுக் கொண்டாராம்.