சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது.
இந்தப் படத்தில் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலில், ‘விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது… அதிகாரத் திமிர… பணக்கார பவர…’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலை, மணி அமுதவனோடு சேர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளார். ஆண்டனிதாசன் இந்த பாடலைப் பாடியிருக்கிறார். இந்த வரிகளை எதிர்த்து அதிமுக நிர்வாகி சதீஷ் குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கடந்த 5ஆம் தேதி கொடுத்தார்
இந்தப் பாடல் வரிகளால் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் மீம்ஸ்கள் பதிவிடப்படுவதாகவும், எனவே இந்தப் பாடலைத் தடை செய்யுமாறும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 22ஆம் தேதி (திங்கட்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.