பிரபுதேவா நடிக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் கதை இதுதான்...

திருப்பதிக்குப் போனால் திருப்பம் வரும் என்பார்கள். இவர்களுக்கு என்ன திருப்பம் வருகிறது என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.

பிரபுதேவா நடித்துவரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் கதையை இப்போதே சொல்லிவிட்டார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சார்லி சாப்ளின்’. காமெடிப் படமான இதில், பிரபு, லிவிங்ஸ்டன், காயத்ரி ரகுராம், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் மாநில சிறப்புப் பரிசைப் பெற்றார் பிரபு.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 6 இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு. 1975ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்ற படத்தின் ரீமேக்தான் ‘சார்லி சாப்ளின்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது. சக்தி சிதம்பரம் இயக்க, பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, அதா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக இருக்கிறது. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

“பிரபுதேவா – நிக்கி கல்ரானி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக இரண்டு குடும்பமும் திருப்பதிக்குப் போகிறார்கள். அவர்கள் போகும்போதும், அங்கு போனபிறகும் என்னென்ன நடக்கிறது என்ற சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படம். திருப்பதிக்குப் போனால் திருப்பம் வரும் என்பார்கள். இவர்களுக்கு என்ன திருப்பம் வருகிறது என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்” என்கிறார் சக்தி சிதம்பரம்.

இதன் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை அதுதான் அந்த திருப்பமாக இருக்குமோ..?

×Close
×Close