சரத்குமார், சுஹாசினி, முனீஷ்காந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சென்னையில் ஒருநாள் 2’. ஜே.பி.ஆர். என்ற புதுமுகம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் என்பவர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு மாற்றலாகி வருகிறார் போலீஸ் அதிகாரியான சரத்குமார். அவர் வருகிற நாளில் கோயம்புத்தூர் முழுவதும் ‘ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. விஷயம் சீரியஸ் என்று புரிந்து கொள்ளும் கோவை மாநகர கமிஷனர் நெப்போலியன், அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார். அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதுதான் படம்.
ராஜேஷ் குமார் நாவலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாவலைப் படிக்கும்போது கிடைக்கும் த்ரில், இந்தப் படத்தில் கொஞ்சம் கூட இல்லை என்பது ராஜேஷ் குமார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனை. என்னவெல்லாமோ சேர்த்து கதையைக் குழப்பியடித்திருக்கிறார்கள்.
சரத்குமார், சுஹாசினி, முனீஷ்காந்த் - இந்த மூன்று பேரும்தான் படத்திலேயே தெரிந்த முகங்கள். ஆனால், அவர்களுக்கு கூட நடிப்பு வரவில்லை என்பது கொடுமை. ஒருவரிடம் கூட இயக்குநர் வேலை வாங்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
எந்த ஒரு காட்சியையும் முழுதாக முடிக்காமல், ஏனோதானோவென்று எடுத்திருக்கிறார்கள். படமே ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள்தான். அதிலும் ஏற்கெனவே காண்பித்த காட்சிகளையே ரிப்பீட் செய்து போரடிக்கிறார்கள்.
குறைவான பட்ஜெட் இருக்கலாம்... ஆனால், இந்தப் படத்துக்கு ரொம்பக் குறைவான பட்ஜெட் போல. சில இடங்களில் மட்டுமே ஷூட் செய்திருக்கின்றனர். நிச்சயதார்த்தத்துக்கு கூட நான்கு பேரைத் தவிர வேறு யாருமில்லை. மருத்துவமனை உள்ளிட்ட கதை பயணிக்கும் எல்லா இடங்களிலும் ஓரிருவர் மட்டுமே இருக்கின்றனர். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியவில்லை?
பின்னணி இசை, ஒளிப்பதிவு என படத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை. சம்பந்தமில்லாமல் சுற்றிச் சுற்றி அடித்து சோர்வை உண்டாக்கி விடுகின்றனர். கோயம்புத்தூரில் நடக்கும் கதைக்கு, எதற்காக ‘சென்னையில் ஒருநாள்’ என்று பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை. 204 ரூபாய் டிக்கெட், பார்க்கிங், பாப்கார்ன் என்று செலவழிப்பதற்குப் பதில், 20 ரூபாய் கொடுத்து ராஜேஷ் குமார் நாவலை வாங்கிப் படிப்பது நன்மை பயக்கும்.