scorecardresearch

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் முதல் படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது

தமிழில் ஹேட்டர்ஸ் இல்லாமல் வலம்வரும் மிகச் சில நடிகர்களில் ஒருவர் விக்ரம். படங்கள் ஜெயிக்கிறதோ இல்லையோ, அந்தப் படத்தில் இவரது பெர்ஃபாமன்ஸ் அனைவராலும் ரசிக்கப்படும். ‘ஐ’ பட விழாவில் பேசிய ரஜினியே, “இப்படி சினிமா மீது வெறித்தனமா இருக்குற ஒரு நடிகனை பார்த்ததேயில்லை” என்று பாராட்டினார்.

அந்தளவிற்கு தனது நடிப்பால் மக்களை கட்டிப் போட்டுள்ள விக்ரமின் மகன் துருவ் பற்றி நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. டப் ஸ்மேஷ் பிரியரான துருவ் நிறைய டப்ஸ்மேஷ் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதனால், சமூக தளங்களில் துருவ் கொஞ்சம் பிரபலம்.

இந்நிலையில், விக்ரம் இன்று(ஞாயிறு) தனது மகனின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் படத்தின் ரீமேக்கில் தான் துருவ் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சந்தீப் வங்கா என்பவர் இயக்கியிருந்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இதில், விஜய் நடித்த ரோலில் தான் துருவ் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில், “#DhruvtobeArjunReddy #E4Entertainment” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, விக்ரம் தனது மகன் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்பதை மட்டும் தெரிவித்து இருந்தார். ஆனால், யார் இயக்கத்தில் நடிப்பார் போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை. ஷங்கர், பாரதிராஜா ஆகியோரில் ஒருவர் துருவை சினிமாவில் அறிமுகம் செய்வார்கள் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இயக்குனர் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ‘குட்நைட் சார்லி’ எனும் ஒரு குறும்படத்தை துருவ் இயக்கியிருந்தார். பல திறமைகள் தன்வசம் கொண்டுள்ள துருவ், விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் ‘லவ்’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரமிற்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாராம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chiyaan vikrams son dhruv to debut with arjun reddy tamil remake