நாளை முதல் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்வு

சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் வழக்கம் போல் நாளை முதல் இயங்கவுள்ள நிலையில், சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வரியான 28 சதவீதம் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு கீழ் டிக்கெட் வசூல் செய்தால் 18 சதவீதமும், ரூ.101 முதல் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்பது ஜிஎஸ்டி முறை. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், திரையரங்கங்கள் 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிவிதிப்பு முறைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுடன் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜிஎஸ்டி, கேளிக்கை வரி ஆகியவற்றை இரட்டை வரியாக கருத முடியாது. கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளது. இன்று மாலை சினிமா துறையினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்றார்.

அதன்படி, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து, திரையரங்கு உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படும் எனவும், நாளை முதல் திரையரங்கங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், நாளை முதல் திரையரங்கங்கள் இயங்கும் என்றார். மேலும், சினிமா டிக்கெட்டுகளின் விலையுடன் ஜிஎஸ்டி வரி விதிப்பு சேர்வதால், சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்கிறது என்றும் அவர் கூறினார்.

உதராணமாக சினிமா டிக்கெட் ஒன்றின் விலை ரூ.120 எனில் அதனுடன் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close