Advertisment
Presenting Partner
Desktop GIF

‘பிரச்னையில் இருக்கும்போது சங்கம் தீர்த்து வைக்கிறதா?’ - விஷாலுக்கு ரா.பார்த்திபன் கேள்வி

ஒரு மனிதன் பிரச்னையில் இருக்கும் சமயத்தில் தீர்த்து வைக்க முடிகிறதா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
r parthiban comment ashok kumar death

‘பிரச்னையில் இருக்கும்போது சங்கம் தீர்த்து வைக்கிறதா? என்பது கேள்விக்குறிதான் என இயக்குநர் மற்றும் நடிகர் ரா.பார்த்திபன் கூறியுள்ளார்.

Advertisment

சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலையை முன்னிட்டு ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் ரா.பார்த்திபன். அதில், “அன்பு நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு, வணக்கம். அன்பு மட்டுமே நம்மை இணைக்கிற ஒரு சக்தியா இருக்க முடியும். அசோக் குமாரின் மரணம், நம்முடைய சினிமா கனவுக்குள் ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்டுப் போயிருக்கிறது. மனம், பிணமாய்க் கனக்கிறது. அசோக் குமாரைப் போன்று எமோஷலான, சென்ஸிட்டிவான முடிவெடுக்கக் கூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கு ஜீவிக்கவே முடியாது என்பதற்கு, இந்தக் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால், இங்கு கந்துவட்டி மட்டுமே ஜீவிக்கும். கெட்டவர்கள் மட்டுமே ஜீவிப்பார்கள்.

வட்டி வசூலிக்கும் முறை மிகக் கொடுமையானது, தண்டிக்கப்பட வேண்டியது. அதில், எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையில் இருந்து நாம் எப்படி வெளியில் வருவது? அடுத்து நாம் யோசிக்க வேண்டியது அதுதான். ஒரு நபர் மீது நாம் குற்றம் சுமத்துகிறோம். இதற்கு இன்னொரு விஷயம் இருக்கிறது. கஷ்டமான நேரங்களில் நண்பர் கூட உதவி செய்வது இல்லை. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள்தான் கஷ்டமான நேரங்களில் உதவி செய்கிறார்கள் என்பது மனதில் ஆழமாகப் புரியவேண்டிய விஷயம்.

என் அம்மாவின் தாலியை அடகுவைக்கவில்லை என்றால், நான் படித்திருக்க முடியாது. என்னை மாதிரி நிறைய பேர் அடகுக்கடைகள், வட்டிக்காரர்கள் இவங்கிட்ட கொண்டுபோய் நம்முடைய அவசர ஆத்திரத்திற்கு பணம் கேட்டு வாங்கி, அதில்தான் நிறைய பேருடைய வாழ்க்கையே மாறியிருக்கிறது. ஆனால், தப்பானவர்களிடம்தான் நாம் வாங்குகிறோம், கொடியவர்களிடம்தான் நாம் வாங்குகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, அதை வாங்காமல் இருப்பதற்கு என்ன செய்வது? ஒருவேளை வாங்கிவிட்டால் என்ன செய்வது?

உதாரணத்திற்கு, வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக, வளசரவாக்கத்தில் இருந்த 74 லட்ச ரூபாய் மதிப்புள்ள என்னுடைய பங்களாவை விற்றுவிட்டு வெளியில் வந்துவிட்டேன். இன்று அதன் மதிப்பு 7 கோடி ரூபாய். வாங்கிக் கொள்ளலாம்... என்ன, இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு சரியான படம் பண்ணோம் என்றால் நாளைக்கே வாங்கலாம் என நினைத்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டன. அதாவது, அந்தப் பங்களாவை விற்று 13 வருடங்கள் ஆகின்றன. இப்போதும் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைப்பது அதுதான். ஆனால், மனதுக்குள் என்ன சந்தோஷம் என்றால், நாம் யாருக்கும் பத்து பைசா கூட பாக்கி வைக்கவில்லை என்பதுதான்.

அதேமாதிரி, ‘அலுவலகத்தையே காலி பண்ண வேண்டிய சூழ்நிலை’ என சமீபத்தில் சேரன் சொல்லியிருந்தார். அதைப் பார்த்ததும், ‘என்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என நடுராத்திரியிலேயே சொன்னேன். இதை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. இதை நான் அப்போது சொல்லவில்லை, இப்போது சொல்கிறேன். நானே 20 ஆயிரம் வாடகை கொடுத்து திருவான்மியூரில் இருக்கிறேன். இருந்தாலும், நான் அப்படிச் சொன்னேன். நண்பர்களுக்கு நண்பர்கள் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே!

அந்த நோக்கம் மட்டும் வலிமையாக இருந்தால், இந்தப் பிரச்னையில் இருந்து நாம் மீள முடியும் என்பது என் நம்பிக்கை. ‘எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க, தீர்த்து வைக்கிறோம்’ என்று சொல்கிறோம். ஒரு மனிதன் பிரச்னையில் இருக்கும் சமயத்தில் தீர்த்து வைக்க முடிகிறதா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. உதவ யார் முன்வருகிறார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் கந்துவட்டி பிரச்னையாக இருக்கும்போது, அங்குள்ள கிராமத்தில் சின்னப்பிள்ளையம்மா என்பவர், குறைந்த வட்டிக்கு கொடுப்பவர்களிடம் பணத்தை வாங்கி, அதிக வட்டிக்கு கொடுத்தவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அந்தக் கிராமத்தையே கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றினார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அவரின் காலைத் தொட்டு வணங்கினார். ஐஸ்வர்யா ராய், உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம் அது. நான் சின்னப்பிள்ளையம்மாவை சென்னைக்கு வரவழைத்து, ‘இவர்தான் உலக அழகி’ என கிரீடம் சூட்டினேன்.

சாதாரண நிலையில் இருந்த வயதான பெண்மணி, அவ்வளவு பெரிய விஷயத்தை சாதித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரிய சங்கங்கள், வசதியில் இருப்பவர்கள் நினைத்தால் இதைச் செய்ய முடியாதா? நிச்சயமாகச் செய்ய முடியும். ஒப்பாரி வைப்பதற்கு மட்டுமே கூட்டமாகக் கூடமுடிகிறது.

எனக்குள்ள சிரமத்தை, சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதற்கு இன்னும் சிரமமாக இருக்கிறது. யாருமே உதவ முன்வர மாட்டேன் என்கிறார்கள். ஒருபக்கம், வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாமல், நம்மை அவர்கள் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி தற்கொலை பண்ணிக் கொள்கிற நிலமை. இன்னொரு பக்கம், என்னுடைய படத்தை வெளியிட்ட வகையில், திருச்சியில் இருந்து எனக்கு நான்கரை லட்ச ரூபாய் வரவேண்டும். 10 மாதங்களாகப் போராடி, இதுவரை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே வந்துள்ளது. மீதி மூன்றரை லட்ச ரூபாயை படத்தை வெளியிட்டவர் இன்னும் தரவேயில்லை.

நான் வட்டிப் பணம் கட்டிக்கிட்டு இருக்கேன். ஆனால், எனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அவர்கள் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்கள். சங்கமும் தொடர்ந்து அவர்களுக்கு கடிதம் அனுப்புகிறார்கள். ஆனாலும், சங்கத்தாலும் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியவில்லை. நேற்று எதுவும் கொண்டுவரவில்லை, நாளை எதுவும் கொண்டு செல்லப் போவதில்லை. உழைத்துப் பார்ப்போம், கடினமாக உழைத்துப் பார்ப்போம்.

இந்த கந்துவட்டிப் பிரச்னையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, நமக்கென்று நாம் ஏற்படுத்திக் கொள்கிற கூட்டுறவு அமைப்பு. ஒருவர் சிரமத்தில் இருக்கும்போது இன்னொருவர் உதவ வேண்டும் ஒருத்தர் நன்றாக இருந்தால் மட்டும்தான் அந்தக் கடனையே அவர் திருப்பிக் கொடுக்க முடியும். அவர் நன்றாக இல்லாமலே போய்விட்டால், கொடுத்த பணம் திரும்ப வரவே வராது. கந்துவட்டிக்கு இன்னொரு பலி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று ரா.பார்த்திபன் கூறியுள்ளார்.

Tamil Cinema Vishal Sasikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment