பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்

ஹரி இயக்கத்தில் இதுவரை வெளியான 14 படங்களில், 13 படங்களுக்கு ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர்.

priyan

பிரபல ஒளிப்பதிவாளரான ப்ரியன், மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரியன், பாலிடெக்னிக் படித்தவர். கோடை விடுமுறையில் சென்னையில் உள்ள மாமா கணேசன் வீட்டிற்கு வந்தபோது, அவருக்கு சினிமா ஆசை இருப்பதைக் கண்டுபிடித்தார் மாமா கணேசன். நடிகரும், தயாரிப்பாளருமான தன் நண்பர் கே.பாலாஜியிடம் ப்ரியனைச் சேர்த்துவிட்டார் அவர் மாமா. கே.பாலாஜியின் தயாரிப்பு நிறுவனமான சுஜாதா இண்டர்நேஷனலின் கேமரா யூனிட்டில், 5 வருடங்கள் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

பின்னர், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான பாலுமகேந்திராவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ‘மூன்றாம் பிறை’, ‘ஓலங்கள்’, ‘சத்மா’, ‘யாத்ரா’ ஆகிய படங்களில் பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய ப்ரியன், மணிரத்னம் இயக்கிய ‘பகல் நிலவு’ மற்றும் ‘நாயகன்’ படங்களின் கேமரா யூனிட்டிலும் பணியாற்றினார். அத்துடன், ராஜிவ் மேனன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர்களுடன் இணைந்து விளம்பரப் படங்கள், சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார்.

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘தொட்டா சிணுங்கி’ மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் ப்ரியன். பின்னர், சேரனின் ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’, கே.எஸ்.ரவிகுமாரின் ‘தெனாலி’, சிலம்பரசன் இயக்கிய ‘வல்லவன்’, தருண்கோபி இயக்கிய ‘திமிரு’, மோகன் ராஜா இயக்கிய ‘வேலாயுதம்’, நேசன் இயக்கிய ‘ஜில்லா’ என கிட்டத்தட்ட 28 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் இதுவரை வெளியான 14 படங்களில், 13 படங்களுக்கு ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர். ‘வேங்கை’ படத்துக்கு மட்டும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி தற்போது இயக்கிவரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ப்ரியன் காலமானது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

53 வயதான ப்ரியன், கே.கே. நகர் பாரதிதாசன் காலனியில் குடியிருந்தார். இன்று மதியம் 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, வீட்டிலேயே அவர் உயிர் பிரிந்தது. இன்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊரான விருதுநகருக்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை மதியம் 3 மணிக்கு அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinematographer priyan passed away due to heart attack

Exit mobile version