மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார். ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ், இந்தப் படத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
எம்.ஜி.ஆராக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிளாக் பாண்டி, சிங்கம்புலி, முத்துராமன், செளந்தர ராஜா ஆகியோர் நடிக்கின்றனர். வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ ஒற்றுமை கொண்ட நடிகைகளைத் தேடி வருகின்றனர்.
இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார். எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.