Controversy on National Film Awards: 66வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த படத்துகான விருது எல்லாரு என்ற குஜராத்தி படத்துக்கும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலைப் பற்றிய இந்தி படமான உரி படத்தின் இயக்குனர் ஆதித்யா தர்ருக்கு சிறந்த இயக்குனர் விருதும் அறிவிக்கப்பட்டது. அதே போல, தெலுங்கில் மகா நடி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மராத்தி பட இயக்குனர் சுதாகர் ரெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழில் பாரம் என்ற படத்துக்கு சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் தமிழில் வெளியாகி இந்திய அளவிலும் உலக அலவிலும் கவனம் பெற்ற திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விரக்தியும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை, இயக்குனர் ராம் இயக்கிய பேரன்பு, இயக்குனர் லெனின் இயக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அனைவரும் அதிர்ச்சி அடையும்படி இந்த படங்கள் எதுவுமே தேசிய விருதுகள் பிரிவுகளில் இடம்பெறவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தரம் காரணமாக தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 2 அல்லது 3 விருதுகள் அதிகபட்சம் 6 விருதுகள் பெற்று வந்துள்ளன. ஆனால், இந்த முறை பிராந்திய மொழி படத்துக்கான விருது மட்டுமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வெளியான பேரன்பு படம் வெகுவாக விமர்சகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மம்முட்டியின் ரசிகர்கள் பேரன்பு படத்துக்கு ஏன் விருது அறிவிக்கவில்லை என்று தேசிய விருதுகள் தேர்வுக்குழு ஜூரிகளின் தலைவர் ராகுல் ராவலுக்கு கேள்வி எழுப்பி மோசமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் தனது பதிவை நீக்கினார்.
மம்முட்டிக்கு ஏன் தேசிய விருது தரவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஜுரிக்கள் குழு தலைவரை நேரடியாக கேட்டுவிட்டனர். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் அப்படி கேட்கவில்லையே தவிர சமூக ஊடகங்களில் அது போல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல, உரி படத்துக்கு ஆளும் கட்சியின் அழுத்தத்தால்தான் விருது அளிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள்
வட சென்னை
மேற்கு தொடர்ச்சி மலைமூன்றுமே தேசிய விருதுக்கு தகுதியானவை.
— Nelson Xavier (@nelsonvijay08) August 9, 2019
தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் சூழலில், ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தனது டுவிட்டர் பக்கத்தில், பரியேறும் பெருமாள், வட சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மூன்றுமே தேசிய விருதுக்கு தகுதியானவை என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் வழங்குவதில் தேர்வுக்குழு பாரபட்சமாக நடந்துகொண்டதாக சமூக ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

இது குறித்து திரைப்பட நடிகரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் கூறுகையில், “தேசிய விருதுகள் தேர்வுக்குழுவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது சென்றார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது இடம்பெற்றிருந்தால் அவர்கள்தான் இந்த படத்தின் சிறப்புகளை சொல்லி விருதுக்காக முன்மொழிந்திருக்க வேண்டும். நான் துணை நடிகருக்கான விருது பெற்றபோது கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜூரி அண்டோனி என்று நினைக்கிறேன் அவர்தான் என்னுடைய நடிப்பை மற்ற ஜூரிக்களுக்கு காண்பித்து விருதுக்கு முன்மொழிந்ததாக விருது பெற்ற பிறகுதான் எனக்கு தெரியவந்தது. அது போல, தமிழ் நாட்டிலிருந்து இடம்பெறும் ஜூரிக்கள் நம்முடைய நல்ல படங்களை முன்மொழிய வேண்டும். கடந்த 5, 6 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தரம் மற்ற மொழி படங்களைவிட சிறப்பாக உள்ளது. அப்படியான படங்கள் வந்து கவனம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டும் அது போன்ற படங்கள் வந்துள்ளன. அத்தகைய நல்ல படங்களுக்கு விருது கிடைக்காத போது கலைஞர்களும் சினிமா ரசிகர்களும் வருத்தமடையவே செய்வார்கள். இனிவரும் காலங்களில் இது போல, நடக்காமல் இருக்க வேண்டுமானால், அனைத்து மாநில மொழிகளில் இருந்தும் திரைப்படத்துறையில் சிறந்த இயக்குனர்கள் தொழில்நுட்ப வல்லுனர்களை ஜூரிக்களாக தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் சிறந்த படங்களை முன்மொழிய வேண்டும்” என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், வட சென்னை, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், விருது எதுவும் கிடைக்கவில்லை. பாரம் என்ற படத்துக்கு பிராந்திய மொழிப்படத்துகான விருது கிடைத்துள்ளது. இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், “இந்த படங்கள் போட்டிக்கு வந்த மற்ற மொழிகள் படங்களுடன் ஒப்பிடும்போது முதலில் அப்பீல் ஆகியிருக்காது அவ்வளவுதான். நம் தமிழ்நாட்டில் சினிமாவை சினிமாவுக்காகவே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை. அதைத் தாண்டி பல உள்நோக்கங்களை கொண்டு சினிமாக்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அதே சமயத்தில் அரசியலாக்கப்படுகின்றன. அதனால், நம்முடைய எல்லோருடைய ஆசைகளையும் மத்திய சினிமா கமிட்டி பூர்த்தி செய்யாது. அங்கே இருப்பவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்கள் அவர்கள் எல்லாப் படத்தையும் பார்த்து கமிட்டியில் உள்ளவர்கள் எல்லாரும் படங்களைப் பற்றி ரிப்போர்ட் எழுதுவார்கள்.
விருது பட்டியலில் நல்ல படங்கள் இடம்பெற வேண்டும் என்றால் என்ன செய்யலாம்?
சினிமா என்பது எதற்காக எடுக்கப்படுகிறது என்பது ஒன்று இருக்கிறது. பரியேறும் பெருமாள் ஒரு நல்ல படம், அந்த படம் கமர்சியல் படமாகவும் ஓடியது. அதனால், அது ஒன்றே நல்ல படமாக இருக்க முடியாது இல்லையா. நாம் எடுத்துக்கொண்டு போகிற கருத்துகள்தான் சிறந்த கருத்துகள் என்று டைரக்டர்கள் நினைப்பார்கள். அது வெளியில் சாதாரண கருத்தாக இருக்கும். அதை 40 வருடங்களுக்கு முன்னாடி யாராவது வேற படத்தில் சொல்லி இருப்பார்கள். அதனால், எதிர்பார்ப்பு என்பது வேறு.
சின்னத்தம்பி படம் சில்வர் ஜுபிளி ஓடியது என்றால், சின்னதம்பி பட பூஜைக்கு தேங்காய் வாங்கிய அதே கடையில் போய் தேங்காய் வாங்கினால் அந்த படமும் சில்வர் ஜுபிளி ஓடும் என்று அவசியம் கிடையாது.
தமிழ்நாட்டில் சினிமாவுக்குள்ளும் அரசியலும் ஜாதியும் மிக அதிகமான அளவில் புகுந்ததாலதான் அதை ஒரு சில இடத்தில ரொம்ப பெரிதாக எடுத்துக்கொண்டு போக முயற்சி செய்கிறார்கள். அதனால், நாம் அதையும் இதையும் விவாதிக்க முடியாது. நம்ம ஊரில் நல்ல படமாக இருப்பது இந்தியாவிலேயே சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை இல்லையா? இந்தியாவுக்கென்று தேசிய அளவில் ஒரு அடையாளம் இருக்கு இல்லையா?” என்று கூறினார்.
தேசிய திரைப்பட விருதுகள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்த நடைமுறை ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தேசிய விருது அறிவிக்கப்படும் போதெல்லாம் அதையொட்டி எழும் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம்.