ரஜினி ரசிகனுக்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி, அதை ரஜினி ரசிகன் ‘என்னப்பா இது’ என்றால் அது தர்பார்.
ரஜினியை வைத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி, அதை பப்ளிக் ஆடியன்ஸ் குடும்பத்துடன் என்ஜாய் செய்து பார்த்தால் அது தர்பார்.
ரஜினியை வைத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி, அதை இந்த காலத்து யங் ஆடியன்ஸ் ‘மொக்க’ என்றால் அதுவும் தர்பார்.
இந்நேரம் மீடியா வாயிலாக, சமூக தளங்கள் வாயிலாக கதையை அலசி முடித்திருப்பீர்கள். ஸோ, அதற்குள் போக தேவையில்லை. போகவும் ஒன்றுமில்லை.
ரஜினி எனும் நடிகரை, இந்த 70 வயதில் எவ்வளவு மாஸாக காட்ட முடியுமோ, அவ்வளவு மாஸாக காட்டி ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்திவிட்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
என் படமாவும் இருக்கணும், ரஜினி படமாவும் இருக்கணும் என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். திரைக்கதையில் தன் (இன்டலிஜென்ட்?) மூவ் கொடுத்த முருகதாஸ், ரஜினி ரசிகர்கள் விரும்பும் அங்கங்களை ஆங்காங்கே சொருகிவிட்டுள்ளார்.
லாஜிக் இல்லாமல் படம் பார்க்கலாம், அதற்காக வாயில் லாலா மிட்டாய் வைத்தால் எப்படி!!?
இடைவேளை வரை, வில்லன் அறிமுகமே கிடையாது. இடைவேளைக்கு பிறகு வில்லனே கிடையாது என்ற அளவில் தான் உள்ளது சுனில் ஷெட்டியின் பங்கு.
நயன்தாரா கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்… (அப்படித்தானே!!?)
நிவேதா தாமஸ் படத்தின் மற்றொரு சப்போர்ட். ரஜினியின் மகளாக ரசித்து நடித்திருக்கிறார். ரஜினி – நிவேதா தாமஸ் காட்சிகள் உங்கள் கண்களில் கண்ணீர் வரவைக்கப் போவது உறுதி.
யோகி பாபுவின் டைமிங் காமெடி, நல்லவேளை படத்தில் எடுபடுவிட்டது.
இசையமைப்பாளர் அனிருத் என்ற ஒருவரின் இசை, பிஜிஎம் இல்லையெனில், தர்பார் கவிழ்ந்திருக்கும் என்பதே நிஜம்.
ராம் லக்ஷ்மன், பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகள் தரம். அதுவும், இடைவேளைக்கு பிறகான ரயில்வே ஸ்டேஷன் ஃபைட்டுக்கு சில்லறைகள் சிதறவிடலாம்.
என்ன இருந்தாலும், 70 வயதில் ஒருவரால் இப்படி மாஸ் காட்ட முடியுமா?
என்ன இருந்தாலும், 70 வயதில் ஒருவரால் இவ்வளவு வசீகரம் காட்ட முடியுமா?
என்ன இருந்தாலும், 70 வயதில் ஒருவரால் இவ்வளவு கூட்டத்தை தன் பக்கம் ஈர்க்க முடியுமா?
முடியும்! ஏன்னா, ஆன் ஸ்க்ரீனில் இருப்பது ரஜினிகாந்த்!