‘பத்மாவதி’ பட சர்ச்சையால், பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘பத்மாவதி’. ராணி பத்மினியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தீபிகா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பிரச்னைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
தீபிகா படுகோனே தலையைக் கொய்து வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என ஒரு அமைப்பும், அவரை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என இன்னொரு அமைப்பும் தெரிவித்துள்ளன. இதனால், தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் ‘பத்மாவதி’ படத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்சார் போர்டு கூட இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. எனவே, டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகத் திட்டமிட்டிருந்த படத்தை, தேதி கூட அறிவிக்காமல் ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீட்டில் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே, தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் வசித்து வருகின்றனர். ‘பத்மாவதி’ சர்ச்சை குறித்து பதிலளிக்க தீபிகாவின் தந்தை மறுத்துவிட்டார்.