‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
நடிகராக அறிமுகமான தனுஷ், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ளார். அவர் கடைசியாக எடுத்த அவதாரம் இயக்குநர். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி, இயக்குநராகவும் ஆனார் தனுஷ்.
அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்ற இந்தப் படத்தில், பிரசன்னா, சாயா சிங், வித்யுலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், தினா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷும், ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘பவர் பாண்டி’க்குப் பிறகு ஏற்கெனவே தான் நடிக்க கமிட் செய்து வைத்திருந்த படங்களில் பிஸியாகிவிட்டார் தனுஷ். ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த மூன்று படங்களும் முடிந்தபிறகு, தன்னுடைய இரண்டாவது இயக்கத்துக்கான வேலைகளைத் தொடங்குகிறார். முதல் படத்தை தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்த தனுஷ், இரண்டாவது படத்தை ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக இயக்குகிறார்.
இந்தப் படம் வரலாற்றுப் படம் என்றும், அதிக பட்ஜெட்டில் தயாராகிறது என்றும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய ஒரு அறிவிப்பை தனுஷே வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் தான் ஹீரோவாக நடிப்பதோடு, இன்னொரு பெரிய ஹீரோவும் இந்தப் படத்தில் நடிப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் யார் என்ற விவரத்தை தனுஷ் வெளியிடவில்லை. படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் 2018ஆம் ஆண்டு தெரியவரும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.