நடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்!

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெவ்வேறு மண் சார்ந்த படங்களில், அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் தனுஷ்!

Dhanush Vetri Maaran Movie, Happy Birthday Dhanush, Dhanush Birthday
’வட சென்னை’ படபிடிப்பில் தனுஷ் – வெற்றி மாறன்.

Dhanush Birthday : தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என்ற வரிசையில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ். அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அத்தனைக்கும் தனது படங்களின் மூலம் பதிலடி கொடுத்து ஆச்சர்யப்பட வைத்தார். தனுஷின் சினிமா வாழ்க்கையில் இரு இயக்குநர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஒருவர் தனுஷின் அண்ணனான செல்வராகவன், மற்றொருவர் வெற்றிமாறன்.

“இனிமே உங்ககிட்ட வேலை செய்யமாட்டேன்., நீங்க ஒரே மாதிரி படம் பண்றீங்க” என்று தன்னிடம் ஒரு சின்னப் பையன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாக, ஒருமுறை பாலுமகேந்திரா தன் நண்பரிடம் கூறி கண்கலங்கி வருந்தினாராம். அந்த சின்ன பையன் தான் வெற்றி மாறன். “என்னிடமிருந்து புறப்படும் விதைகள் வீரியமானவை..” எனும் பாலுமகேந்திராவின் வார்த்தைகளை இன்றளவும் நிரூபித்து வருபவர் இயக்குநர் வெற்றி மாறன் தான்.

தனுஷ் – வெற்றி மாறன் நட்பு

பிரியாமணி மற்றும் தனுஷை வைத்து ‘அது ஒரு கனா காலம்’ என்றொரு படத்தை இயக்கினார் பாலு மகேந்திரா. அதில் வெற்றி மாறன் உதவி இயக்குநர். அந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் “டேய் அந்தப் பையன் நான் டயலாக் சொல்லி குடுத்தா கொஞ்சம் பயப்படுறான் போல, நீயே டயலாக் சொல்லி குடுடா” என பாலுமகேந்திரா வெற்றி மாறனிடம் சொல்ல, அந்தப் படத்தில் தனுஷிற்கு டயலாக் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு வெற்றி மாறனுக்கு கிடைத்தது. இங்கு தான் தனுஷ் – வெற்றி மாறன் நட்பு துளிர்த்தது.

பொல்லாதவன்

முரண்பாடுகள் இல்லாத நட்பேது? ‘நான் உதவியாளரா இருந்தப்போ எனக்கும் தனுஷுக்கும் அடிக்கடி சண்டை வரும்’ என முன்பு ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டார் வெற்றி மாறன். உதவி இயக்குநராக இருந்து இயக்குநர் என்ற பெயரில் வெற்றியின் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெற்ற படம் ‘பொல்லாதவன்’. தனுஷ் நடிப்பில் வெளியான அந்தப் படம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வேற லெவல் ஃபீலை கொடுத்தது. சராசரி குடும்பத்து பையன்கள் அனைவருக்கும் பைக் என்பது இன்று வரை கனவு தான். அது தான் அந்தப் படத்தின் கதைகளம், ஹீரோவுக்கு இணையாக பல்சர் பைக் அந்தப் படத்தில் இடம் பெற்றது.

ஆடுகளம்

அடுத்ததாக தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் 2011-ல் வெளியானது ஆடுகளம். இதில் தென் தமிழகத்தின் வாழ்வியலை தெற்கின் மனிதர்களுக்கு இடையே இருந்த உறவை, உடல்மொழியை, வட்டார வழக்கை, துரோகத்தை அப்படியே திரையில் வரைந்து இருவரும் சாகசம் செய்தனர். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 6 தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் படத்தில் மதுரையின் வட்டார வழக்கு அச்சு அசலாக அப்படியே பேசியிருப்பார் டிபிகல் சென்னை பையனான தனுஷ்.

வட சென்னை

பின்னர் தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் ’வட சென்னை’ வெளியானது. இதில் வட சென்னை தான் கதை களம். மிகப் பெரிய நடிகர்கள் கூட்டணியின் வட சென்னையின் கறுப்பு பக்கத்தை தனக்கேயான பாணியில் திரையில் எழுதினார் வெற்றிமாறன். உண்மையில் ஒரு டைம் மெசினில் ஏறி சில தசாப்தங்கள் பின்னோக்கி பயணித்த அனுபவத்தை அந்தப்படம் கொடுத்தது. ஹீரோ எண்ட்ரி இல்லை, ஹீரோயிஸ ஃபைட் சீன்கள் இல்லை, கதையோடு ஒன்றிய கதாபாத்திரமாக திரையில் மிளிர்ந்தார் தனுஷ். வட சென்னை வாழ்க்கையை வாய்மொழி, உடல்மொழி என கச்சிதமாக காட்டினார்.

அசுரன்

இந்த வெற்றிக் கூட்டணியில் கடந்தாண்டு வெளியானது ‘அசுரன்’. வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சமூகத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. கரிசல் மண்ணின் வெப்பத்தை உள்வாங்கி அழக்காக திரைக்கதை அமைத்திருந்தார் வெற்றி மாறன். 50 வயது ஆணின் தோற்றத்தில், உடல்மொழி, பக்குவம் என தனது அசுர நடிப்பைக் கொடுத்திருந்தார் தனுஷ். உண்மையை சொல்ல வேண்டுமெனில், தனுஷை பிடிக்காதவர்களுக்கும் ‘அசுரன்’ பிடித்திருந்தது. அவரை நடிப்பு அசுரன் எனவும் சொல்ல வைத்தது. மேற்கூறிய 4 படங்களும் தனுஷ் – வெற்றி மாறன் என்றாலே வெற்றி தான் என்பதை தமிழ் ரசிகர்கள் மனத்தில் ஆழப் பதிய வைத்துள்ளது.

வாழ்வியல் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரமாக மாறுவது எளிதான விஷயமல்ல. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெவ்வேறு மண் சார்ந்த படங்களில், அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் தனுஷ்! அவர் இன்னும் பல உயரங்களை அடைய ஐ.இ தமிழ் வாழ்த்துகிறது!

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhanush birthday happy birthday dhanush vetrimaaran combo

Next Story
ரஜினி ‘அண்ணாத்த’ ஆடுவாரா ? – பரபரக்கும் கோலிவுட் தகவல்rajinikanth, Annaatthe, siruthai siva, sun pictures, corona pandemic, shooting, dropped, kollywood, salary, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com