'வேலையில்லா பட்டதாரி 2' படத்துக்கு ஏன் அனிருத் இசையமைக்கவில்லை என்பதற்கு தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி,விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. ஜூலை 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய தனுஷ், " 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டுமே ஒரு நாயகனையோ, நாயகியோ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. தாய் பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். இதனைத் தொடர்ந்து ’வேலையில்லா பட்டதாரி’ 3-ஆம் பாகத்திற்கான கதையையும் நான் எழுதப் போகிறேன். 2-ஆம் பாகத்தின் தொடர்ச்சியாக 3-ஆம் பாகம் இருக்கும். ஆனால், அதனை செளந்தர்யா இயக்குவாரா என்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அக்கதையை எழுதி முடிக்கும் போது மட்டுமே, அதற்கு எந்த மாதிரியான தொழில்நுட்ப கலைஞர்கள் தேவை என்பது தெரியவரும்.
’வேலையில்லா பட்டதாரி’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள், எமோஷன் காட்சிகள் ஆகியவற்றுக்கான இசை அனிருத்திடமிருந்து எனக்கு கிடைத்தது. அந்த கதைக்கு அதுதான் சரியாக இருக்கும் என தோன்றியது. ஆனால், இப்போது எடுக்கப்பட்டுள்ள 2-ஆம் பாகத்தில் நாயகன் ரகுவரன் திருமணமானவர். ஆகையால், இதன் கதைக்கும், கதையோட்டத்திற்கும் வேறொரு இசை தேவைப்பட்டது. இதனையே இயக்குனர் செளந்தர்யாவும் விரும்பினார். இதனால் ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். அதேபோல், வேறொரு கலர் வேண்டுமென்று தான் முக்கியமான மூன்று தொழில்நுட்ப கலைஞர்களையும் மாற்றினோம்.
அடுத்து 3-ஆம் பாகம் எழுதி முடித்தவுடன் அக்கதைக்கு ஷான் ரோல்டன் தேவை என்றால் அவரிடமோ, அனிருத் தேவை என்றால் அவரிடமோ செல்வேன். 'வேலையில்லா பட்டதாரி' 2-ஆம் பாகத்திற்கான விவாதத்தின் போது, முதல் பாகத்தின் இசையில்லாமல் வேறொன்றை புதிதாக உருவாக்கலாம் என்று கூறினேன். அப்போது ஷான் ரோல்டன் தான், முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் அதன் இசை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்" என்றார் தனுஷ்.