48 வயதான நடிகர் திலீப் மலையாள சினிமா உலகில் மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். வசூல் ரீதியாகவும் சரி, ரசிகர்கள் படையிலும் சரி… இவருக்கென்று தனி மார்க்கெட்டே அங்கு உள்ளது. இவருக்கும், அப்போது பிரபல நடிகையாக இருந்த மஞ்சு வாரியாருக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் மீனாக்ஷி என்ற பெண் உள்ளார்.
மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒரு சிறு பிளவு ஏற்பட்டது. நடிகர் திலீப், பிரபல நடிகை காவ்யா மாதவனுடன் நெருங்கிப் பழகுவதாக மஞ்சு வாரியரிடம் நடிகை பாவனா கூறியதாகவும், இதனால், திலீப்பிற்கும், மஞ்சு வாரியருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புகள், விருது விழாக்கள் போன்றவற்றில் திலீப், காவ்யாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக பாவனா கூறியதாக தெரிகிறது. பாவனா மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்து, விவாகரத்து வரை சென்றுவிட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு திலீப்பும் – மஞ்சுவும் விவாகரத்து பெற்றனர். இதனால், திலீப்புக்கு, நடிகை பாவனாவின் மீது கோபம் ஏற்பட்டு, அதுவே சொந்த பகையாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும், பாவனாவுக்கு வரும் பட வாய்ப்புகளை திலீப் தடுத்து வருவதாக பாவனா பேட்டி ஒன்றில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
காவ்யாமாதவன் முதலில் நிஷல் சந்திரா என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். பிறகு, 2011-ல் கணவர் நிஷல் சந்திராவை காவ்யா விவாகரத்து செய்தார். பின் திலீப்பும் – காவ்யா மாதவனும் கடந்த 2016 நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தான் மஞ்சுவை பிரிந்ததற்கு, பாவனா தான் காரணம் என்று திலீப் உறுதியாக நம்பியதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கேரளாவின் அதானி என்ற இடத்தில் பாவனா காரில் சென்றுக் கொண்டிருந்தபோது அவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அதனை அவர்கள் மொபைல் போனில் வீடியோவும் எடுத்தனர்.
இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், அவரது கார் டிரைவர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, ஆழப்புழாவைச் சேர்ந்த வடிவேல் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாவனா கடத்தல் விவகாரத்தைக் கண்டித்து கொச்சியில் திரை உலகினர் கண்டனக் கூட்டம் நடத்தினர்.
பிப்ரவரி 20-ஆம் தேதி, தம்மனத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாவனாவைக் கடத்துவதற்காக கூலிப் படையினர் நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மறுநாளே (பிப்.21) இந்த வழக்குத் தொடர்பாக மலையாள நடிகர் ஒருவரிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அந்த நடிகர் திலீப் தான் என அப்போது காட்டுத் தீயாய் செய்தி பரவியது. ஆனால், இதனை திலீப் மறுத்து வந்தார்.
பின், பிப்ரவரி 23-ல் முக்கிய குற்றவாளியான பல்சார், விஜினேஸ் இருவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். நடிகையைக் கடத்த 50 லட்சம் ரூபாய் கூலியாகப் பேசியதாக பல்சார் வாக்குமூலம் அளித்தார். பிப்.,25-ல் பாவனா நான்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். ஆனால், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களைக் கொண்ட மொபைல் போனை போலீஸாரால் கைப்பற்ற முடியவில்லை.
தீவிர விசாரணைக்குப் பின், பிப்.,28-ஆம் தேதி, கொச்சி அருகே உள்ள போல்ஹாத்தி மேம்பாலத்துக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்சாரின் மொபைல் போனை போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், ஜூன் 24-ஆம் தேதி, பணம் கேட்டு தான் மிரட்டப்படுவதாக நடிகர் திலீப் தானாக முன்வந்து போலீசிடம் புகார் அளித்தார்.
திலீப்பின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஜூன் 26-ஆம் தேதி, விஷ்ணு என்பவரை போலீஸார் கைது செய்தனர். பல்சாருடன் சிறையில் ஒரே அறையில் தங்கி இருந்தவர் விஷ்ணு. இவர் தான் திலீப்பை மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். பின், ஜூன் 28-ஆம் தேதி, திலீப் மற்றும் இயக்குனர் நதீர்ஷா இருவரும், அலுவால் போலீஸ் கிளப்பில் வைத்து 13 மணி நேரம் போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். ஆனால், இதையும் திலீப் மறுத்தார்.
இதன் பின், திலீப்பும் அவரது மனைவி காவ்யா மாதவனும் திடீரென தலைமறைவாக, நடிகர் திலீப் ஜுலை 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. திலீப்பை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. காவ்யா மாதவனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஜுலை 11 (இன்று) மலையாள நடிகர் சங்க அமைப்பிலிருந்து (அம்மா) நடிகர் திலீப் நீக்கப்பட்டார்.