‘சினிமாவை அரசுத்துறையாக்க வேண்டும்’ என இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளரான அசோக் குமார், கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், “கந்துவட்டி இல்லாத திரைத்துறை உருவாக வேண்டும். இனிமேல் கந்துவட்டி இருக்கக் கூடாது. மறைந்த ஜி.வி.யின் தற்கொலையில் கூட 306 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தமுறை கந்துவட்டி கொடுமையின் உக்கிரத்தை உணர்ந்து 306 பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காவல்துறைக்கு எனது நன்றி. இனிமேலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
அசோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதம், உண்மையிலேயே அவர் எழுதியதுதானா? என்ற கையெழுத்து சோதனைக்குப் பிறகு, கந்துவட்டிப் பிரிவிலும் அன்புச்செழியனை சேர்க்க இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையால் எங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை.
தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என விஷால் நேற்று கூறியிருக்கிறார். இது ஒரு சசிகுமாருக்கோ, அசோக் குமாருக்கோ நடந்தது இல்லை. இது ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரி பிரச்னை. ஒவ்வொரு திரைப்படத்தையும் வெளியிடுவதற்கு முன்னால் ரெட் போடுவது என்பது, யார் ரெட் போடுகிறார்கள்? என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். பைனான்சியரிடம் பணம் வாங்கியிருந்தால், விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து எப்படி ரெட் போட முடியும்? இவர்களுக்கு இடையில் என்ன தொடர்பு? இதையெல்லாம் சரிசெய்ய வேண்டியது சங்கங்களின் பொறுப்பு.
‘சரி செய்கிறேன்’ என விஷால் சொல்லியிருப்பதாக நேற்று நான் பேட்டியில் பார்த்தேன். இன்றோ, நாளையோ அவர்கள் கூட்டம் இருக்கும். நிச்சயம் சரியான முடிவை அவர்கள் எடுப்பார்கள். இதற்கு முன்னாடி எப்படி இருந்தார்கள் எனத் தெரியாது. ஆனால், விஷால் மீது நம்பிக்கை இருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜி.வி. தற்கொலைக்குப் பிறகு கந்துவட்டி கொடுமைக்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அது பிறகு லூஸாக விடப்பட்டதால், மறுபடியும் தலைதூக்கியிருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பலமுறை நான் சொன்னது போல, சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரும் செலிபிரிட்டி. அதனால், யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். அதனால், தமிழ்நாடு ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட வேண்டும்.
இதை நான் ஜெயலலிதா அம்மையாரிடமும் சொல்லியிருக்கிறேன். போக்குவரத்துக் கழகம் போல் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் எப்போது திரைப்படக் கழகம் உருவாகிறதோ, அப்போதுதான் இது கட்டுக்குள் வரும். சினிமாவின் வருமானம் என்ன? எத்தனை கோடி வருகிறது? எத்தனை கோடி போகிறது? என ஒரு கட்டுப்பாடு வேண்டும். அரசின்கீழ் வந்தால் எல்லோரும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? அரசு கொடுத்த கேளிக்கை வரியை அனுபவித்த நாம், எனக்கு மேலே உள்ள அரசு அதிகாரி சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். இதை செய்து தருகிறேன் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்கு கொடுத்திருந்தார். அந்த வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதைச் செய்துகொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.