‘எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம்’ என கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
ஆண்டாளைப் பற்றித் தவறாக எழுதியதாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் கடந்த சில நாட்களாக வைரமுத்து மீது கோபத்தில் இருக்கின்றனர். பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. அந்த அறிக்கையில், “தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனத் தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து.
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம், இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும் முழங்கி, அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை, எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?
எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை, இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டாய். வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையில் இருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா?
எச்.ராஜாவே... திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள். கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை, அநாகரீகமாக பேசும் ராஜாவே... இப்படிப் பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே...
எளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை, எப்படி உன்னால் பேச முடிகிறது? வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள். அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து, எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.
நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும்? உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப் போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. கவனமாகப் பேசுங்கள் ராஜாவே... உன்னைப் போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போன்ற சில நல்ல அடையாளங்கள்தான் இருக்கின்றன.
எங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான். கால மாற்றமும், விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து மாற்றி வைத்தது. கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.
உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது, தமிழ் உணர்வுகளை சிதைத்தது. நீ தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை... மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே...
இப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு, உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.