‘அரசியல் தலைமையாக மாற பாபா சமயத்தில் சத்தமில்லாமல் சுயபரிசோதனை செய்த ரஜினி’ – ராசி அழகப்பன்

தனது குரலின் பலம் அறிந்த அரசியல் தலைமையாக மாற பாபா பட சமயத்தில், மக்கள் சக்தி தனக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று பரிசோதனை செய்ய தயாரானார்

அன்று மிஸ்டர் பாரத் பட ஷூட்டிங்.

நான் அங்கு தான் இருந்தேன். ஆனால், ரஜினிக்கு அன்று காட்சிகள் இல்லை. படப்பிடிப்பு நேரம் போக, தேவையில்லாமல் பேசிக் கொண்டிருப்பதை தவிர்க்க, கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டு, ஒரு பெஞ்சில் படுத்து கண்களை மூடிக் கொள்வது அவரது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்று அப்படி நிகழவில்லை.

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

நான் பேனாவுக்கு வேலை கொடுத்த படி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையில் படப்பிடிப்பின்போது ஒரு நடிகரை இப்படி கேள்வி கேட்டு அவரின் வேலையை கெடுப்பது நியாயம் இல்லை. ஆனால் இந்த சூழலை விரும்பி அவரே ஏற்றுக் கொண்டதால் அந்த நாள் இலகுவாக கடந்து கொண்டிருந்தது.

திடீரென இரண்டு பேருந்து வந்து நின்றன. அதிலிருந்து திமு திமு வென வந்து இறங்கியவர்கள் சட சட வென ரஜினிகாந்த் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர். வேண்டாம்… என தடுத்துப் பார்த்தார். நடக்கவில்லை. அவர்கள் தூத்துக்குடியில் இருந்து வந்தவர்கள். அதில் பெண்களும் அடக்கம். அவர்களை உபசரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிரித்தபடி அனுப்பி வைத்தார்.


அவர்கள் சென்ற பிறகு, அவரிடம் இப்படி கேட்டேன், இப்படி காலில் விழுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

சட்டென மறுத்தார். “கண்டிப்பாக இல்லை. பெத்த அம்மா அப்பா காலில் விழலாம். தெய்வத்துகிட்ட விழலாம் . வேற யார்கால்ல வேணும்னா குரு கால்ல விழலாம் . நியாயம். என் கால்ல விழறதுல எனக்கு இஷ்டமில்ல. சொன்னா கேக்க மாட்டேன்றாங்க. இனி கடுமையா இந்த விஷயத்துல இருக்கப் போறேன்” என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார். அதில் உண்மை இருந்ததை என்னால் காண முடிந்தது.

பிறகொரு நாள் உத்தண்டி மகாபலிபுரம் கடற்கரை சாலையில் ‘கை கொடுக்கும் கை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு சென்றேன். ரஜினியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ரஜினிகாந்த் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் நீரில் ஒரு குடம் மிதந்து கொண்டு போவது போலவும் அதில் ஒரு தாமரைப்பூ மிதந்து போவது போலவும் எடுக்கச் சொல்லிவிட்டு இயக்குனர் மகேந்திரன் அன்றைய காட்சிக்கான வசனம் எழுத எத்தனித்தார்.

அப்போது அங்கே வந்த அப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் சூப்பர் ஸ்டாரை உட்கார வைத்துவிட்டு குடம் மிதப்பதை எடுக்கிறார் என்ற கோபத்தில் டைரக்டர் மகேந்திரனை சத்தம் போட்டு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

சட்டென கோபம் கொப்பளிக்க எழுந்த ரஜினிகாந்த் நேராகச் சென்று, “மிஸ்டர் விஜயகுமார்… ‘மகேந்திரன் டைரக்டருக்காகத்தான் நான் டேட் கொடுத்தேன். அவர் என்ன பண்ணணும்னு நீங்க சொல்லாதீங்க. என்ன எப்போ எடுக்கணும்னு அவருக்குத் தெரியும். நான் வந்ததும் என்ன வச்சுத்தான் காட்சி எடுக்கணும்னு அவசியம் இல்லை. நான் அப்படி நினைக்கிற ஆளும் இல்ல. மகேந்திரன் சார் கிரேட் டைரக்டர் . அவருக்கு எல்லா காட்சியும் முக்கியம். நடிகர்னா வெயிட் பண்றதுக்கும் சேர்த்து தான் சம்பளம் வாங்கறோம். டைரக்டரோட உரிமையில யாரும் தலையிடறத நான் விரும்பலை. உங்களுக்கு பிரச்சனைன்னா விட்டுடுங்க இந்தப் படத்தை நான் பாத்துக்கிறேன்” என்று பதிலுக்கு சொற்களை சூடாகப் பயன்படுத்த ஒருகணம் வேர்த்து விறுவிறுத்து போனது. அந்த இடமே அமைதி மயமானது.

இயக்குனர் ராசி அழகப்பன்
இயக்குனர் ராசி அழகப்பன்

ஆன்மீகம் என்பது அவர் தன்னை எளிமையாக, இலகுவாக வைத்துக் கொள்ள முயலும் இடமாகத்தான் நான் கருதுகிறேன். அவர் எதிர்பார்க்காத உயரம் சமூகம் தரும் போது தன் கால்கள் தரையில் பதிந்திருக்க வேண்டும் என்பதற்கான சுயபரிசோதனையாகத்தான் இமய மலைப் பயணம், தனிமைத் தேடல் மனசாந்தி என புரிந்து கொள்கிறேன்.

அவரிடம் உள்ள குணம் ஆராய்ந்த பின் முழுதாக நம்பி விடுவது. மேக்கப் மேன் துவங்கி புரொடக்ஷன் மேனேஜர், உதவி இயக்குனர், லைட்மேன், சக நடிகர்கள் அறிந்தவரோ அறியாதவரோ என எவரைக் கண்டாலும் அனைவரிடமும் எளிமையாக அங்கீகரித்துப் போகிற பக்குவத்தை தனது குணமாக மாற்றிக் கொண்டவர் ரஜினிகாந்த். அதிக கோபத்தால் வரும் விளைவுகளை உணர்ந்தவரால்தான் இந்தக் குணத்தை ஏற்க இயலும்.

ரஜினி இரண்டையும் தன் வாழ்வில் கண்டு கரையேறியவர்.

பாபா படம் வெளிவரும் சமயத்தில் சத்தமேயில்லாமல் ஒரு சம்பவம் செய்தார். அதை சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று கருதுகிறேன். தனது குரலின் பலம் அறிந்த அரசியல் தலைமையாக மாற பாபா பட சமயத்தில், மக்கள் சக்தி தனக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று பரிசோதனை செய்ய தயாரானார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கேமிராக்குழு சென்று தியேட்டர்களில் படத்தின் ரியாக்‌ஷனை க்ளிக்கியது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதை அவர் மனதில் சரிபார்த்துக் கொண்டிருக்கக் கூடும். அது இப்போது தனக்கு சாதகமான சூழலாக மாறுவதை உணரத் தலைப்பட்டு ஆன்மீக அரசியல் முன்னெடுக்கிறார்.

எதிராளியின் எண்ண ஓட்டங்களை சுவீகரித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அவரது புகழ் பலம். அவருடைய கேளம்பாக்கம் பண்ணையில், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கு வந்து சுற்றிப் பார்த்து விவசாயி வாழ்க்கை வாழ்வது யாருக்கும் தெரியாத ரஜினியின் வழக்கம்.

சினிமாவில் நண்பர்கள் மட்டுமல்ல… தனித்த பல கட்டங்களிலும் ரஜினியும், கமலும் பரஸ்பரம் கலந்துரையாடிய பின்பே முடிவெடுப்பர் என்பது உள்ளங்கை மர்மம். எதிரெதிர் கோணங்களும் ஒரு புள்ளியில் துவங்கி வேறொரு புள்ளியியல் இணையக்கூடியவையே.. இந்தப் புரிதலே இருவரின் பயணத்திற்கு அச்சாணி.

தனி மனித வாழ்வின் ஆளுமை மிக்க ஒருவர் அரசியல் என்கிற சதுரங்கத்தில் எத்தகைய நகர்வுகளை நகர்த்துவர் என்பது உற்று கவனிக்க வேண்டிய தருணங்கள். எவ்வாறாயினும் ரஜினி தன் பலம் உணரும் சாமர்த்தியசாலி.

-இயக்குனர் ராசி அழகப்பன்

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Director rasi azhagappan about untold stories of super star rajinikanth happy birthday thalaiva

Next Story
திருமணம் சீரியல்: நவீனால் அம்மாவை இழந்த அனிதாThirumanam Serial, anitha naveen
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com