Advertisment

திரையில் ஸ்டார்... தரையில் சாதாரண மனிதன்... விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!

மாமனிதன் படம் கொடுத்த வெற்றியை அனுபவித்து வரும் இயக்குனர் சீனுராமசாமியிடம் படம் உருவாக காரணம் உள்ளிட்ட பல கேள்விகளுடன் தொடர்பு கொண்டோம்.

author-image
D. Elayaraja
New Update
திரையில் ஸ்டார்... தரையில் சாதாரண மனிதன்... விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!

தமிழ் சினிமாவில் எதார்த்த படைப்புகளை மக்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு முக்கிய பங்கு உண்டு. 2007-ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தனது சினிமா இயக்குனர் பணியை தொடங்கிய அவர், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் மக்களின் மனதை வென்றார். மேலும் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வியலை படமாக்கிய இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன். அவரின் அஸ்தான நாயகனான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த படம் அவரின் முந்தைய படங்களை காட்டிலும் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

publive-image

விஜய் சேதுபதி, காயத்திரி, ஜீவல் மேரி, அனிகா சுரேந்தர், கேபிசி லலிதா பரதன், மணிகண்ட ஆச்சாரி, ஷாஜி சென், குரு சோமசுந்தரம் நடித்து  யுவன் சங்கர் ராஜா தயாரித்து யுவன் இசையமைத்த  மாமனிதன் ஆகா ஓடிடியில் மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக வெற்றிப்பெற்றுளதாக 3 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி செல்வதாக அதன் தமிழ் வியாபார தலைவர் CEO சிதம்பரம் நடராஜன் சென்னையில் நடந்த சென்னை டே விழாவில் தெரிவித்தார் மேலும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

இந்த படம் கொடுத்த வெற்றியை அனுபவித்து வரும் அவரிடம் மாமனிதன் படம் உருவாக காரணம் உள்ளிட்ட பல கேள்விகளுடன் தொடர்பு கொண்டோம்.

மாமனிதன் கதை உருவான தருணம்

மாமனிதன் படம் கல்வி அறிவு இல்லாத ஒருவன் கண்ட கனவு. நான் பெறாத கல்வி, நான் காணாத உலகம் தன் சந்ததிகள் காண வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு மனிதனுமே அதற்கான உழைப்பை கனவுகளோடு சுமக்கிறான். இன்றைக்கு இருக்கின்ற சூழலில் தனியார்மயமான கல்விகள், ஆங்கில வழி கல்விதான் உயர்ந்தது இது போன்ற பிரச்சாரங்கள் அதிகமான இருக்கிறது.

ஆனால் தமிழ் வழி கல்வி அரசு பள்ளியில் படித்தவர்கள் மிக உயரிய நிலையை அடைந்திருக்கும் இந்நாட்டில், இப்படியான பிரச்சாரங்கள் மிக அதிகமாக இருக்கும்போது, அந்த பிரச்சார மயக்கத்திற்கு ஒருவர் பலி ஆனார் இது தான் மாமனிதன் படம் உருவாக முக்கிய காரணம். இப்படியான இயக்கங்கள் என் குடும்பம் மட்டுமல்லாது பலரின் குடும்பத்திலும் உண்டு.

publive-image

இப்படி இருக்கும்போது ஒரு உயர்ந்த கல்வி என்று பிரச்சாரம் செய்யப்படுகின்ற கல்வியை தனது பிள்ளைகளுக்கு தரவேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவரின் அகலக்கால் வாழக்கை . ஆனால் இந்த வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே தனது குடும்பத்திற்காக கூடு கட்டிய பறவை அவன். ஆனால் கடைசியில் அந்த கூட்டிற்குள் வர முடியாத அவன் தனது குஞ்சுகளை காப்பாற்ற நினைக்கிறான். நாட்டில் உள்ள அனைவருக்குள்ளும் இந்த அம்சம் உள்ளது. இதை பற்றிய படம்தான் மாமனிதன்.

மாமனிதன் படம் வெளியாக தாமதம் ஏன்?

மாமனிதன் படம் தொடங்கிய பிறகு இடையில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, இந்த படம் உருவாகி வெளிவருவதற்காக வியாபார நிலைகளில் ஏற்பட்ட பொருளாதா சிக்கல்கள் தான் காரணம். ஆனால் இதையெல்லாம் கடந்து தற்போது இந்த படம் வெளியாகி இன்று இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. போதிய விளம்பரமின்மை காரணமாக திரையரங்குகளில் மக்கள் அறிந்துகொள்ள முடியாமல், தோசை கல்லை சூடாக்காமல் தோசை மாவை ஊற்றியது போல குறைவாக ரசிகர்களே வந்தார்கள்.

ஆனால் வந்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து புகழ் சேர்த்தார்கள். அவர்களே விமர்சகர்களாகவும் மாறினார்கள். உடனே மாமனிதன் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது. இப்போது ஒடிடி தளத்தில் மாமனிதன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதற்காக மக்களுக்கு நன்றி சொல்கிறேன் ஒரு நல்ல படைப்பை யாராலும் புறக்கணிக்க முடியாது, மறைத்துவிடவும் முடியாது. மக்கள் மன்றம் நல்ல படங்களுக்கு வெற்றிக்ககொடி நாட்டும் என்பதற்கு மாமனிதன் ஒரு உதாரணம்.

publive-image

படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா பற்றி

தர்மதுரை படத்தின் வெற்றிக்கு பிறகு, என்னையும் விஜய் சேதுபதியை வைத்தும் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார் யுவன் சங்கர் ராஜா. அந்த படத்தில் அவரும் அவருடைய அப்பாவுமான இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைக்கும் சந்தர்ப்பத்தை தருவதாக சொன்னார்கள். இசைஞானி இளையராஜா என்ற ஒற்றை சொல்லுக்காகத்தான் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டோம். இந்த படம் உருவாவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதற்கு முன்பே வேறு தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் கதையை சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். ஆனால், யுவன் – இளையாராஜா சேர்ந்து இசையமைப்பதாக கூறியதால் வாங்கிய அட்வாஸ்சை திரும்ப கொடுத்துவிட்டு இங்க வந்து படம் பண்ணினேன்.

மாமனிதன் விஜய் சேதுபதி பற்றி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்மீது அன்புகொண்ட ஒரு செல்வன். என் கதைகளை நம்புகின்ற ஒரு இளைஞன். இந்த மாமனிதன் உருவாக விஜய் சேதுபதி இதில் நடித்ததும் ஒரு முக்கிய காரணம். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் அடிநாதம்என்றால் விஜய் சேதுபதிதான்.

மாமனிதன் விஜய் சேதுபதிக்காக எழுதிய கதையா?

விஜய் சேதுபதியின் நற்குணங்கள் எனக்கு தெரியும். அதேபோல் அவருக்கும் எனக்கும் ஒரு உறவு உள்ளது. ஒரு திரைக்கதை எழுதும் போது கதாப்பாத்திரமாகத்தான் எழுதுவேன். அதன்பிறகு விஜய் சேதுபதி அந்த கதைக்குள் தன்னை பொருத்திக்கொள்வார்.

publive-image

தென்மேற்கு பருவக்காற்று முதல் மாமனிதன் வரை விஜய்சேதுபதியுடன் பயணம்

விஜய் சேதுபதியை முதலில் நான் இயக்கும்போது ஒரு நல்ல மனிதனாக இருந்தார். அவர் ஒரு நட்சத்திரமாக மாறினாலும் அவரின் நல்ல குணங்கள் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. இந்த புகழ், உயரம் என அனைத்தையுமே பிரித்து அறிந்து பார்க்கக்கூடிய மனப்பக்குவம் அவருக்கு உள்ளது. முதல் நாளில் என்னுடன் எப்படி பழகினாரோ அதேபோலத்தான் இன்றும் என்னுடன் பழகி வருகிறார். திரையில் நட்சத்திரமாக இருந்தாலும் தரையில் சாதாரண ஒரு மனிதனின் உள்ளத்தோடு வாழக்கூடிய ஆத்மா தான் விஜய் சேதுபதி.

தர்மதுரை – மாமனிதன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் குறித்து

(தர்மதுரை : வரதட்சனை கொடுமை, கிராமத்தில் மருத்துவ சேவை, மறுமணம் மற்றும் பல) மாமனிதன் : பிள்ளைகளின் எதிர்காலம், மன்னிக்கும் மனப்பக்குவம், )

அனுபவங்கள், அனுவத்தின் மீதான விருப்பங்கள், விருப்பங்கள் மீதான கனவுகள், கனவுகள் மீதான கற்பனை உண்டு இவை அனைத்துமே காரணம்.

publive-image

மாமனிதன் வெளியாக தாமதம் ஆனபோது இருந்த மனநிலை

ஒரு பெரிய மருத்துவமனையில் குழந்தையை அட்மிட் செய்யும்போது ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. தூக்கம் இல்லை பொழுதெல்லாம் பிள்ளையின் நலனே குறிக்கோளாக இருக்கும் அந்த தாய் போன்று நான் ஒரு பதட்டத்துடன் இருந்தேன். அந்த பதட்டத்திற்கு மக்கள் சரியான பதில் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஆறுதலை கொடுத்திருக்கிறார்கள். இதுவே மாமனிதன் படத்தின் வெற்றி.  

மாமனிதன் படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்

இந்த பிரசவம் நிகழ வேண்டும் என்பதை ஒரு விதியாக நான் பார்க்கிறேன். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையே இந்த படம் வெளியாகியது. ஆனால் திரையரங்குளின் ஜன்னல்கள் பெரிதாக திறக்கவில்லை. காலக்கட்டமும் குறைவாக இருந்தது. ரசிகர்களை தியேட்டர்களுக்கு கொண்டுவர இன்றைக்கு மார்க்கெட்டிங் என்பது மிகப்பெரிய தேவையாக உள்ளது. படம் 40 சதவீத ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது நான் கவலைப்பட்டேன்.

publive-image

ஆனால் படம் பார்த்தவர்கள் கண்ணீருடன் எனக்கு போன் செய்வது சமூக வலைதளங்களின் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொள்வது, அவர்களின் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நேரத்தில் ஒருவார இடைவெளியில் சிதம்பரம் நடராஜன் என்பவர் இந்த படத்தை வாங்கி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியிட்டார். வெளியிட்ட உடனே ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்க்க தொடங்கிவிட்டனர்.

அதன்பிறகு இந்த படம் மிகப்பெரிய வெற்றி என்று அவர்களே அறிவித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச திரைப்பட விழாக்களில் மாமனிதன் பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இப்போது வரைக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. மேலும் பல சர்வதேச விழாக்களுக்கு படத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த விருதுகளை பற்றி தெரிந்துகொண்டு மாமனிதன் படத்தை தேடி கண்டு ரசித்து வருகின்றனர். அவர்கள் அனுப்பகின்ற மின்னஞ்சல்கள் எனக்கு மிகவும் தெம்பாக இருக்கிறது.

publive-image

இதன் மூலம் ஒரு சினிமாவை உலக திரைமொழியுடன் உருவாக்க வேண்டிய தேவையை நான் உணர்கிறேன். இப்போது தமிழகத்தில் தியேட்டர்களை மையப்படுத்தி படங்கள் எடுப்பதை தாண்டி உலக ரசிகர்களிடம் ஒரு சினிமாவை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற நிலைபாடு ஒடிடி தளத்தின் மூலம் உருவாகியுள்ளது. அதனால் இந்த படம் சர்வதேச அளவில் பெற்ற அங்கீகாரம், பொருளாதார ரீதியான வெற்றி இதுபோன்ற தொடர்ந்து நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை போல மாமனிதன் கொடுத்த இவ்வளவு பெரிய கவுரவமான வெற்றி குறித்து தமிழ மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாமனிதன் பற்றி மேலும் சில வார்த்தைகள்

மாமனிதன் சமூகத்தில் உருவாக்கியுள்ள தாக்கம். இந்த படத்தில் சிறப்பாக நடித்த விஜய் சேதுபதி, காயத்ரி, ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஆழமாக நம்புகிறேன். இன்னும் இந்த படத்தை உலக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காற்றுள்ள பந்து நீரில் மூழ்காது என்பதை போல உன்னத உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு படைப்பு. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பாப்கான் சாப்பிட்டுவிட்டு செல்வது போன்று இருக்க இருக்க கூடாது. அந்த படங்களை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த அடிப்படையில் மாமனிதன் படம் எல்லார் மனதிலும் வாழ்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி.

publive-image

அடுத்த படம் இடிமுழக்கம் பற்றி

என்னுடைய வழக்கமாக பட பாணியில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு அதே சமயம் நேர்த்தியுடன் நான் இயக்கியுள்ள ஒரு ஆக்ஷன் படம் தான் இடிமுழக்கம். க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் இதுவரை நீங்கள் பார்த்ததை விட வித்தியாசமாக இருப்பார். அவரிடம் இருந்து நேர்த்தியான, முதிர்ச்சியான ஒரு பக்குவப்பட்ட உணர்ச்சகளை உணரும் அளவுக்கு இந்த படம் இருக்கும். இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாஷின் அர்ப்பணிப்பை என்னால் மறக்க முடியாது. தான் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்பதை மறந்துவிட்டு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, என்னை எப்படி வேண்டுமானாலும் பயனபடுத்துங்கள் எதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று அவர் சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

ஜி.வி.பிரகாஷ் மாதிரியான ஒரு அர்ப்பணிப்பான நடிகர் கிடைத்தால், இன்னும் பல உன்னதமாக படைப்புகளை தர முடியும். முட்புதர்கள் அதிகம் உள்ள ஒரு ஆற்றை கடந்து ஓடும் காட்சியில் ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லாமல் செருப்பு கூட இல்லாமல் அவர் ஓடியது எனக்கு மிகவும் ஆச்சரியம். தன்னை ஒப்புக்கொடுத்து ஒரு சக தோழனா இருந்த ஜி.வி.பிரகாஷ் நடிப்புக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித்தரும் என்பது சந்தேகமில்லை.

publive-image

இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 4 பாடல்கள் படத்தில் உள்ளன. வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். தர்மதுரை படத்தின் பாடல்களை போல் இந்த படத்திலும் பாடல்கள் வெற்றி பெறும். பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை 2 விதமாக உருவாக்கி வைத்துக்ளோம். திரைப்பட விழாக்கள் தேசிய விருதுக்காக ஒரு விதமாகவும், பாடல்களுடன் திரையரங்குகளில் வெளியாவதற்காகவும் ஒரு விதமாகவும் உருவாக்கியுள்ளோம்.

படத்திற்காக வியாபார நிலைகள் முடிந்தவுடன் படம் திரைக்கு வரும். இந்த படத்தை கலைமகன் முபாரக் என்பவர் தயாரித்துள்ளார். அவர் இந்த படத்தை உலக திரைப்பட விழாக்களுக்கு கொண்டுபோக வேண்டும் என்று பெரிய விருப்பத்துடன் இருக்கிறார். இப்படி இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து என்னோடு பயணித்து உருவான இந்த படம் இடிமுழக்கம் நிச்சயம் என்னுடைய படைப்பில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.  

publive-image

அதேபோல் 10 வருடங்களுக்கு பின் சரண்யா பொன்வண்ணன் என்னுடைய இடிமுழக்கம் படத்தில் ஒரு கசாப்பு கடை பெண்மணியாக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு பேசப்படும். மாமனிதன் படத்தில் பேசப்பட்ட காயத்ரி ஷங்கர் இந்த படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறிள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment