மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கடந்த 1-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தியது. 'ஒரே நாடு, ஒரே வரி' எனும் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தமிழக திரைத்துறையை பொறுத்தவரை இரட்டை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி மற்றும் 30 சதவீதம் நகராட்சி வரி என இரட்டை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம், 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்தால், அதில் 50 - 58% வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், "தியேட்டர்களில் 100 ரூபாய் அல்லது அதற்கு கீழ் டிக்கெட் விற்பனை செய்தால், 18% வரி செலுத்த வேண்டும். அதுவே ரூ.101 முதல் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளுக்கு 28% வரி செலுத்த வேண்டும். இதுதான் ஜி.எஸ்.டி முறை. இது போதாதென்று மாநில அரசும், 30% கேளிக்கை வரி விதித்துள்ளது. நாங்கள் ஜி.எஸ்.டி.வரியை எதிர்க்கவில்லை. ஆனால், 58% வரி செலுத்த சொன்னால் நாங்கள் எப்படி பிழைப்பு நடத்த முடியும்? இதனால் இரட்டை வரி முறையை நீக்க வேண்டும். அதுவரை அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்" என்றார்.
தியேட்டர்கள் மூடுவது குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "ஜி.எஸ்.டி., வரியால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு சுமையாக தமிழக அரசு 30 சதவிகிதம் வரி விதித்து இருக்கிறது. இதனால் சினிமா தொழில் நசுங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. 30 சதவிகிதம் வரி விதிப்பை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடுவதற்கு முடிவு எடுத்ததை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தோம்.
தியேட்டர்களை மூடினால் புதிய படங்களை திரையிட்டு உள்ள 7 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தோம். அதனை ஏற்காமல் தியேட்டர்களை இன்று முதல் மூடப்போவதாக அறிவித்து இருப்பது, வருத்தம் அளிக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று தனது ட்விட்டரில் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர், "48-58% வரை வரி என்பது மிகவும் அதிகம். தமிழ் திரையுலகைக் காப்பாற்றுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
July 2017