/indian-express-tamil/media/media_files/2025/10/07/tr-2025-10-07-14-48-44.jpg)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்த சிம்பு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இடையில் அவரது திரைப்படங்கள் சில தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல், நடிகர் சிம்புவும் உடல் பருமன் கூடி காணப்பட்டார்.
அதன்பின்னர், ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்படத்தின் வெற்றி அவரின் சினிமா கேரியரை மீட்டு தந்தது. தொடர்ந்து, ‘வெந்து தணிந்தது காடு’ , ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயடு லோகர் நடிக்கிறார். ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் சிம்புவிற்கு விகடன் சார்பில் ‘மோஸ்ட் செலிப்ரேட்டட் ஸ்டார் இன் டிஜிட்டல் 2025’ (Most celebrated star in digital 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவர் பேசியதாவது, “இந்த விருதை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த, இதை வாங்க வேண்டும் என்னை வற்புறுத்தி மேடைக்கு வரவழைத்த என் மகன் சிலம்பரசனுக்கு தான் இந்த எல்லா புகழும் சேரும். நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் பாரதிராஜா தான். அந்த பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். முறுக்கு மீசைக்காரன் முண்டாசு கவிஞன் பாரதியின் பெயர் இருப்பதால் பாரதிராஜா பெயர் எனக்கு பிடிக்கும்.
பாரதியாரையும் பிடிக்கும் இயக்குநர் பாரதிராஜாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பேரை கொண்ட பாரதிராஜா விடாமல் என்னை தொலைபேசியில் அழைத்தார். அதன்காரணமாக வந்தேன். இந்த விருதை என் மகனுக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்த நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டு சிம்புவிற்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கிறது என்பதை நிரூபித்த ரசிகர்களுக்கு நன்றி. சிம்பு இந்த விருதை வாங்குமாறு என்னிடம் கூறிய போது உன் உதவியாளரை விட்டு இந்த விருதை வாங்கிக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்டேன்.
அதற்கு சிம்பு இல்லை நான் வாங்குவது தான் முறை. நான் ஊரில் இல்லை வெளிநாட்டில் இருக்கிறேன். இதை நீங்கள் போய் மேடையில் சொன்னால் நன்றாக இருக்கும். நம்முடைய ரசிகர்களையும் பார்த்தது போன்று இருக்கும் என்று சொன்னார். அதனால் தான் விருது வாங்குவதற்கு வந்தேன்” என்றார். சிம்பு பேசிய கருத்துக்களை இயக்குநர் டி. ராஜேந்தர் அவரது குரலில் மேடையில் மெமிக்ரி செய்தது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.