"விவேகம்" படத்தை மோசமாக விமர்சித்தவரை சாடிய விஜய் மில்டன், லாரன்ஸ்!

"ப்ளூ சட்டை" என்று அழைக்கப்படும் அந்த நபரின் சினிமா விமர்சனங்களை காண கணிசமான பார்வையாளர்களும் உள்ளனர்.

கடந்த வியாழனன்று வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படம் இதுவரை வசூலில் எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், லாஜிக் இல்லாத படத்தில் அஜித் ஏன் நடித்தார் என்பதே பலரின் அதிருப்தியாக உள்ளது. ஆக்ஷன் படங்களில் லாஜிக் அதிகம் தேவையில்லை என்பது உண்மை தான். ஆனால், லாஜிக்கான சில லாஜிக் இருந்தால் தானே படத்துடன் ரசிகர்கள் ஒன்ற முடியும். ஆனால், ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் நாம் இதுபோன்று குறை சொல்லிக் கொண்டு இருப்பதில்லையே. அங்கே டாம் க்ரூஸ் நம்பமுடியாத ஸ்டண்ட்கள் செய்வதை ரசித்துப் பார்க்கும் நாம், இங்கே அஜித் அதை செய்யும் போது விமர்சிக்கின்றோம்.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. விவேகம் எனும் படத்தை அஜித்தை தவிர வேறு எந்த ஹீரோ நடித்திருந்தாலும், நம்மால் படத்தை பொறுமையாக பார்ப்பது மிகவும் கடினம்.
நிலைமை இப்படியிருக்க, யூடியூப் சேனலில் ஒரு நபர் படங்களை விமர்சித்து வருவது வழக்கம். “ப்ளூ சட்டை” என்று அழைக்கப்படும் அந்த நபரின் சினிமா விமர்சனங்களை காண கணிசமான பார்வையாளர்களும் உள்ளனர். அந்த நபர் ‘விவேகம்’ படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக அஜித் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டனும் அந்த சினிமா விமர்சகரை கடுமையாக சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ,”வாய்க்கு வந்தபடியெல்லாம் ஒரு படத்தை விமர்சிக்கக் கூடாது. எந்த இயக்குனராலும் எல்லா படத்தையும் வெற்றி படமாக கொடுக்க முடியாது. நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு சொல்ல நீங்க என்ன….!?” என்று சொல்லி காட்டமாக முடித்தார்.

இதேபோன்று ராகவா லாரன்ஸும் அந்த விமர்சகரை கடுமையாக கண்டித்து தனது ஃபேஸ்புக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “’அஜீத் சாரின் ‘விவேகம்’ படம் பார்த்தேன். அந்த கடுமையான உழைப்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!. அதேவேளையில், இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு மக்கள் நிறையாகவும், குறையாகவும் அளித்துள்ள அனைத்து விமர்சனங்களையும் கண்டேன். ஆனால், நீலச் சட்டை மாறன் என்பவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தை கண்டு வலியும், வேதனையும் அடைந்துள்ளேன்.

இந்தப் படத்தில் உள்ள சிலாகிக்கத்தக்க காட்சிகளைப்பற்றியும், இதற்கான படக்குழுவினரின் உழைப்பைப் பற்றியும் அவர் ஒருவார்த்தைகூட கூறவில்லை. அவரது கருத்துகள் படத்திற்கான விமர்சனம்போல் தோன்றவில்லை, மாறாக, நடிகர் அஜீத் குமார் மற்றும் அவரது ரசிகர்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இது உள்ளது.

எனவே, சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதிபெறாத நீலச்சட்டை மாறன்மீது திரையுலகை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close