சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் அருள்பதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்றது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடர்ந்து சினிமா உலகத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தேர்தல் இது. காரணம், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றிய விஷால் அணி, விநியோகஸ்தர்கள் சங்கத்தையும் கைப்பற்ற நினைத்தது.
இதற்காகவே தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்த ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் ராஜா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இன்னொரு அணியில், தற்போது தலைவராக இருந்த அருள்பதியும், மற்றொரு அணியில் கலைப்புலி சேகரனும் போட்டியிட்டனர்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில், நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்களிக்கத் தகுதியான 524 உறுப்பினர்களில் 469 பேர் வாக்களித்தனர்.
விநியோகஸ்தரான மதுரை அன்புச்செழியன், இந்தத் தேர்தலில் வாக்களித்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. காரணம், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை வழக்கில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த அன்புச்செழியன், தன் மீதான கைதுக்கு தடை உத்தரவு வாங்கிய பிறகு முதன்முதலாக வெளியில் கலந்துகொண்ட நிகழ்வு இது.
இதில், 248 வாக்குகள் பெற்று அருள்பதி மீண்டும் தலைவரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஞானவேல் ராஜாவுக்கு 194 வாக்குகளே கிடைத்தன.